

ஐபிஎல் போட்டிகளுக்கு இடையே ஒளிபரப்பப்படும் வயதான தம்பதியினர் இருவரின் கோவா பயணம் பற்றிய வோடபோன் விளம்பரம் பெரும்பாலனவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடன கலைஞர்களும், தம்பதிகளுமான சாந்தா தனஞ்செயனும், வி.பி.தனஞ்செயனும் வோடபோனின் புதிய விளம்பரத்தில் நடித்ததன் மூலம் நடிகர்களாக புதிய அவதாரம் எடுத்துள்ளனர்.
பத்ம பூஷண் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள கேரளாவைச் சேர்ந்த சாந்தா தனஞ்செயனும், வி.பி.தனஞ்செயனுக்கு இந்த வோடபோன் விளம்பரம் புதிய அடையாளத்தையும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.
இந்த விளம்பரத்தில் நடித்த அனுபவம் பற்றி அவர்கள் கூறியதாவது," உங்களால் நம்ப முடியுமா? நாங்கள் உலகில் பெரும்பாலான இடங்களுக்கு பயணம் செய்துள்ளோம். ஆனால் கோவாவுக்கு பயணம் செய்ததில்லை.
ஆனால் எதிர்பாரதவிதமாக விளம்பர இயக்குனர் பிரகாஷ் வர்மா தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஐபிஎல் தொடருக்காக வோடோ போனின் புதிய விளம்பர தொடரில் நாங்கள் நடிக்க வேண்டும் என்று கூறி அதற்காக நாங்கள் கோவாவுக்கு செல்லவும் ஏற்பாடு செய்தார்.
இந்த விளம்பரத்தின் மூலம் இதற்கு முன்னர் நாங்கள் செய்திருந்தாத பல செயல்களை செய்ய வாய்ப்பு கிடைத்தது. உதாரணத்துக்கு பாரசூட்டில் பறப்பது, ஸ்கூட்டர் ஓட்டுவது, கடற்கரையில் விருந்து கொண்டாடுவது போன்றவைகளை நாங்கள் செய்தோம்.
இந்த விளம்பரத்தில் ஆறு பிரிவுகள் இருந்தன. என்னிடம் (வி.பி.தனஞ்செயன்) விளம்பரத்தில் நடிப்பதற்கு முந்தைய நாள், ஸ்கூட்டர் ஓட்ட வேண்டும் என்று கூறினார்கள். உண்மையின் நான் இதற்கு முன்னர் ஸ்கூட்டர் ஓட்டியது கிடையாது. கடைசி நிமிடத்தில் சில பயிற்சிகள் எடுத்துக் கொண்டு அதிசயமாக ஒட்டி விட்டேன்.
இதற்கு முன்னரும் நாங்கள் பல விளம்பரங்களில் நடித்திருக்கிறோம். ஆனால் பயணம் தொடர்பான கதாப்பாத்திரங்களை நடிப்பது ஆவலாக இருந்தது. நாங்கள் எப்போதும் புதிய முயற்சிகளை செய்ய விரும்புகிறவர்கள். மேலும் அந்த விளம்பரக் குழுவில் இருந்தவர்கள் எங்களை அக்கறையோடு பார்த்துக் கொண்டனர்.
வோடபோனின் இவ்விளம்பரத்தில் நடிக்க உண்மையான தம்பதிகளை தேடியுள்ளனர். எங்களது மகன் சத்யஜித்தின் நண்பரும் இந்த விளம்பரத்தில் பங்கெடுத்திருக்கிறார். அவருக்கு எங்களை பற்றி தெரிய வர இந்த விளம்பரத்தில் நடிக்க எங்களை அணுகினர். இதன் மூலம் நீண்ட நாட்களாக நாங்கள் எதிர்பார்த்திருந்த கோவா செல்வதற்கு காரணமும் கிடைத்தது.
இந்த விளம்பரத்தை பார்த்த எங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எங்களை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நாங்கள் இருவரும் பார்ப்பதற்கு அழகாக இருப்பதாக கூறினர்" இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.