Published : 20 Sep 2014 10:24 AM
Last Updated : 20 Sep 2014 10:24 AM

ஜெயகாந்தனோடு பல்லாண்டு - 1

காலதேச வர்த்தமானத்தில், கூட்டங்கள் என்பவை இன்று கருத்துப் பரிமாற்ற ஊடகங்களென உருமாற்றம் கொண்டுள்ளன. அவ்வகையில், எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களைத் திருப்பத்தூர் நண்பர்கள் முதலில் சந்தித்ததின் அரை நூற்றாண்டையொட்டிய விழாவெனக் கருதி அவரைச் சந்தித்ததிலும் அவரோடு நாடெங்கும் சஞ்சரித்ததிலும் ஏற்பட்ட அனுபவங்களை, தொடர்ந்து எழுத விழைகிறேன். இந்த அரும்பெரும் வாய்ப்பை வழங்கியிருக்கிற ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்கு நான் மட்டும் அல்லாமல் ஜெயகாந்தனின் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மிகுந்த நன்றியை செலுத்துகிறோம்.



ஒன்றுபட்ட வட ஆற்காடு மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த நண்பர்களாகிய நாங்கள் ஜெயகாந்தன் அவர்களைச் சந்தித்து கடந்த 2010 செப்டம்பருடன் 50 ஆண்டுகள் ஆயின.

அதுகுறித்து 2010 செப்டம்பரில் ஒரு கூட்டம் போட்டுக் கொண்டாட வேண்டும் என்னும் என் நெடுநாள் ஆசை நிறைவேறவில்லை. அந்தக் கூட்டம் திருப்பத்தூரில் மட்டும்தானே நடக்கும்? அதுவும்கூட காற்றில் கலந்த ஓர் ஓசையாகத்தானே போகும்? ’இந்து’ தமிழ் நாளிதழில் அந்த நினைவுகளைக் கொண்டாடுவது நிலைபேறுடைய ஒரு காரியம்தானே? அதனால் இந்தத் தொடரை எழுத ஆரம்பிக்கிறேன்.

அந்தக் காலத்தில் எங்கள் ஊரில் இளங்கோ இலக்கிய மன்றம் என்று ஒன்று இருந்தது. அதில், எல்லாக் கட்சியினரும் ஒற்றுமையாக அங்கம் வகித்தனர். பெரியார், ஜீவா, ம.பொ.சி என்றெல்லாம் வந்துபேசுவார்கள். இந்த வரிசையில் 1960-ம் ஆண்டு செப்டம்பரில் பாரதி விழாவில் பேசுவதற்கு ஜெயகாந்தனை நாங்கள் அழைத்துவந்தோம்.

அப்பொழுதெல்லாம் இந்தக் கூட்டங்களை நடத்தும் செலவுக்கு நாங்கள் நன்கொடைக்குக் கிளம்புவோம். ஒவ்வொருவரிடமும் போய், 5 ரூபாய், 10 ரூபாய் நன்கொடைக்காக நயந்துபேசி வாங்கி, போதாக்குறைக்குக் கையிலிருந்து போட்டு நாங்களே கூழ்காய்ச்சி, விழாவுக்கான சுவரொட்டிகளை இரவெல்லாம் ஒட்டி, கூட்ட நாளன்று மேஜை, நாற்காலிகள், பெஞ்சுகளைத் தூக்கிப்போட்டு, எங்களில் ஒருவரே தலைவராக அமர்ந்து, அந்தப் பிரபலங்கள் பேசுகிற கூட்டங்களை நடத்தினோமே... ஏன் நமது ஜெயகாந்தனுடனான சந்திப்பின் ஐம்பதாவது ஆண்டு விழாவை அரங்கேற்ற முடியவில்லை? எங்களை இது ஒருவகையான நாணமும் அவமானமும் கொள்ளவைக்கிறது.

ஐம்பதாண்டுகளின் காலமாற்றத்தை அனைவரும் எளிதில் ஊகிக்கலாம். கூட்டத் துக்குப் பிரதானமானவர்கள் அன்று பெஞ்சு தூக்கிப்போட்டார்கள். இன்று பெஞ்சு தூக்கிப் போடுவதற்கே பிரதானமாகச் செலவு செய்யவேண்டும். அன்றிருந்த தோழர்கள் பலர் இன்று இல்லை. இருக்கின்ற தோழர் களும் எங்கெங்கோ, எப்படி எப்படியோ இருக்கிறோம். அருகருகே இருந்து அடிக்கடி சந்தித்துக்கொள்கிற ஓரிரு நண்பர்களும்கூட, ஒரு கூட்டம் போட்டுப் பார்ப்பதில் உள்ள பயன்குறைவால் உத்வேகமற்று உள்ளோம். நாங்கள் ஜெயகாந்தனை அவ்வப்பொழுது நேர்முகமாகச் சந்தித்துப் பேசும் சந்தோஷத்திலேயே சொக்கிவிடுவதால், மேற்கொண்டு செயல்புரியத் தோன்றுவதில்லை.

கூட்டம் போட்டுப் பேசுவதைவிடவும், ஏதோ ஓர் ரூபத்தில் எழுதிவைத்தால், அது என்றைக்காவது, எதற்காவது, யாருக்காவது பயன்படும் என்று தோன்றுகிறது. எதிர்காலத்தில் ஜெயகாந்தனை ஆராய வருகிற ஏராளமான சந்ததியினருக்கு இதிலிருந்து கொஞ்சமாவது விஷயங்கள் கிடைக்கலாம்.

கூட்டம் கூட, அந்தக் கூட்டத்தைக் கேட்டு ஒரு நபரேனும் உருவானால், அது உயர்வாகக் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றுதான். மலைப்பிரசங்கம் ஒரு மகாத்மாவை உருவாக்கி யதாக அறிகிறோம். அந்த மகாத்மாவின் சின்னஞ்சிறு உரைகள் ஒரு பெரிய தேசத்தையே திரள வைத்துவிட்டன. இங்கே கூட்டம் என்பது, அதன் பவுதீக லட்சணங்களை இழந்து, காலந்தோறும் நிகழ்கிற ஓர் ஆன்மிகச் சஞ்சாரத்தின் அடையாளமாகிவிடுகிறது.

எல்லாம் யோசிக்கும்வேளையில் நடந்ததும், திரிந்ததும், கிடந்ததும், பேசியும் பாடியும் களித்ததும், சற்றே உண்டதும், உறங்கியது மாகக் கழிந்த அந்த வாழ்க்கையில் என்னதான் கண்டோம்?

எல்லாமும் கண்டோம்; காலங்களில் திரிகாலமும் கண்டோம்; கவிதை கருத்தரிக்கிற கணங்களையும், மழையினூடே ஆலங்கட்டிகள் போல் புதிய புதிய சொற்கள் சரேல் சரேலென விழுவதையும் கண்ணெதிரே கண்டோம். உள்ளூர் சாதிகளின் வரலாறு முதற்கொண்டு உலக வரலாறு வரைக்கும் எங்கள் முன் ஓடின. விதவிதமான வினாக்களும் விடைகளும் உதிக்கும் இலக்கியப் பட்டறை களைச் செவிமடுத் தோம். போதிப்பது அறியாதவாறு போதிக்கப் பட்டோம். உலக இலக்கிய சாம்ராட்டுகளை எங்கள் உற்ற நண்பர்களைப் போல் உற்றுக் கவனிக்கக் கற்றோம். கண்டறியாதன கண்டோம் என்கிற வாக்கியம் எங்களுக்கு முன்னால் பிறந்து, எங்களுக்குக் கைலாகு கொடுக் கக் காத்துக் கொண்டிருந்ததைக் கண்டோம்!

மனித மனக் கற்பனைகள், நேரடியான நிஜம் என்கிற ஈரம் பட்டவுடன், எப்படி உறைந்திருந்த உயிர் கொஞ்சம் ஊறி, வீரியம் பெற்று, தம்மை மூடிய மண்பிளந்து வெளிக்கிளம்பி, பூதங்கள் ஐந்தும் பொருந்தியிருக்கவே தளிர்விட்டுத் தழைத்துக் கொடியோடி, எண்ணமுடியாத அரும்புகள் எடுத்தும் பூத்துச் சொரிகின்றன என்பதற்கு எங்களின் இந்தச் சொந்த அனுபவங்கள் சாட்சியமாக அமையுமானால், அதுவே பயனுள்ள ஒன்று என்று நம்புகிறேன்; நம்பி எழுதுகிறேன்.

ஒரு காலத்தில் ஜெயகாந்தனோடு பயணப்பட்டுப் பழகிக் களித்த இந்த விவரங்களை எல்லாம், நான் ஒரு நோட்டுப் புத்தகம் வைத்துக் குறித்துக்கொண்டுதான் வந்தேன். அதனால், குப்புசாமியாகிய எனக்குக் ‘குறிப்புச் சாமி’ என்கிற ஒரு பட்டப் பெயரும் கிடைத்தது, அதற்கப்புறம் அந்தப் பழக்கம் மெல்ல மெல்ல விட்டுப்போயிற்று. தொடர்ந்து குறிப்பெடுக்காமல் போனது ஒரு பெரிய இழப்பு என்று இப்போது தோன்றுகிறது.

ஒட்டுமொத்தமாக இந்த அனுபவங்களை எல்லாம் நினைத்துப் பார்க்கிறபோது, எப்பேர்ப் பட்ட ராஜவாழ்க்கை வாழ்ந்திருக்கிறோம் என்று எங்கள் நெஞ்சங்கள் இன்றளவும் பெருமிதம்கொண்டு நிமிர்கின்றன.

அசைபோடுதல் என்று ஒன்று உண்டு. அவசரகதியாக உட்கொண்டவற்றை எல்லாம், அலைச்சல் ஓய்ந்தபின் ஆழத்திலிருந்து கொண்டுவந்து மென்று மென்று அனுபவித்து ருசித்துப் பசியை மேலும் மேலும் ஆற்றிக் கொள்கிற அந்தப் பண்பு மாந்தரிடத்தும் இல்லையா என்ன..!

ஒரு மாபெரும் இலக்கிய ஆளுமையோடு கழித்த நாட்களை நினைவுகூர்கிற இந்தத் தொடரும் ஒரு மனித அசைபோடுதலே ஆம்!

- வாழ்வோம்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x