Last Updated : 27 Jan, 2017 10:13 AM

 

Published : 27 Jan 2017 10:13 AM
Last Updated : 27 Jan 2017 10:13 AM

மெட்றாஸ் அந்த மெட்ராஸ் 25: அமெரிக்க கிரிக்கெட் தந்த உற்சாகம்!

அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாடுவது குறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் ஆகஸ்ட் 2000-த்தில் கட்டுரை எழுதியவுடன் ஏராளமானோர் என்னைத் தொடர்புகொண்டு, அமெரிக்காவில் தாங்கள் கிரிக்கெட் ஆடிய அனுபவத்தை உற்சாகமாகப் பகிர்ந்து கொண்டனர். அவர்களில் நூலாசிரியர், எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்கிற பன்முகம் கொண்ட திமேரி முராரி சொன்ன கதை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

இங்கிலாந்தில் இருந்த அவர் அமெரிக்கா சென்றார். நியூயார்க் காவல் துறையில் துப்பறியும் நிபுணர்கள் எப்படிப் பணியாற்றுகிறார்கள் என்பதை தொலைக்காட்சிக்காக ஒரு ஆவணப் படமாகத் தயாரித்தார். பிறகு, அதையே மையமாக வைத்து ‘தி ஷூட்டர்’என்ற நாவலையும் எழுதினார். அப்போது பல போலீஸ் அதிகாரிகளுடன் அவருக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டது. ஒருநாள் பிற்பகல், அவர்களில் ஒருவரான ஆண்டி லுகோ என்ற துப்பறியும் அதிகாரி போன் செய்தார். “டிம், ஸ்டேடன் தீவில் ஒரு பூங்காவில் இருக்கிறேன். வெள்ளை பேண்ட், வெள்ளை ஷர்ட் அணிந்த இந்தக் கிறுக்கர்கள் ஏதோ ஒரு விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். 20 கெஜம் கூட ஓட முடியாத ஒரு சோணகிரி வலது கையை உயர்த்தி ஒரு சுற்றுச் சுற்றி பந்தை சோகையாக வீசுகிறான். தட்டையான ஒரு கட்டையை வைத்திருக்கும் ஒருவன் அதை பெருக்கித் தள்ளுவதைப்போல அடிக்கிறான். இது பிரிட்டனில் விளையாடும் கிரிக்கெட் என்கிறார்கள். உனக்கு இதுபற்றித் தெரியுமா?” என்று கேட்டிருக்கிறார். புச்சி பாபு கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வாசு நாயுடுவின் பேரனான முராரி, அவரிடமே கற்று அதில் ஊறியவர். “நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அது கிரிக்கெட்தான் என்று தெரிகிறது, அங்கே உங்களுக்கு என்ன வேலை?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார். “இங்கே ஒருவனின் உடலில் கத்தி பாய்ந்து இறந்துவிட்டான். அவனுக்குக் காவலாக நிற்கிறேன்” என்று லுகோ பதில் அளித்தார். கத்தி பாய்ந்து இறந்தவர் போதை மருந்து கடத்தி விற்பவர். ஸ்டேடன் தீவிலும் ரண்டால்ஸ் தீவிலும் நடக்கும் போட்டிகளைக் காண அமெரிக்காவில் வசிக்கும் மேற்கிந்தியத் தீவு மக்கள் கூடிவிடுவார்கள்.

‘ஓரியண்ட் லாங்மேன்’ பதிப்பக ஆசிரியர் சுஜித் முகர்ஜி ஒரு காலத்தில் மெட்றாஸ் நகரில் நீண்ட காலத்தைச் செலவிட்டவர். ‘முகம் தெரியாத கிரிக் கெட் வீரரின் சுயசரிதை’ என்ற பெயரில் அவர் எழுதிய சுயசரிதை புத்தகத்தில், பென்சில்வேனியாவில் தான் கிரிக் கெட் ஆடிய அனுபவத்தை தனி அத் தியாயத்தில் விவரித்திருக்கிறார். கிழக் குக் கடற்கரையோரத்தில் மே மாதத் தின் நடுப் பகுதியில் இருந்து ஆகஸ்ட் வரையில் வார இறுதியில் ஒருநாள் அல்லது இரு நாட்களுக்குத் தொடர்ந்து கிரிக்கெட் ஆடியதை விவரித் திருக்கிறார். அதிலும் ஹேவர்ஃபோர்டு கல்லூரியின் விளையாட்டுத் திடல் சரிவாக இருப்பதால் கவர் பாயிண்ட் அல்லது மிட் விக்கெட்டில் நிற்கும் ஃபீல்டர் கண்ணுக்குத் தெரிய மாட்டார் என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டிருக்கிறார். அமெரிக்காவில் உள்ள கல்லூரிகளில் ஹேவர்ஃபோர்டு கல்லூரியில் மட்டுமே கிரிக்கெட் முக்கியமான விளையாட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

குஹாவின் கிரிக்கெட் ஆர்வம்

வரலாற்று ஆசிரியரும் சுற்றுச்சூழல் ஆர்வலரும் பிரபல எழுத்தாளருமான ராமசந்திர குஹா, மெட்றாஸ் நகருடன் சிறுவயது முதலே உணர்ச்சிபூர்வமான தொடர்பைப் பெற்றவர். டெல்லியில் இருந்து தென்னிந்தியாவுக்குச் செல் வது என்று தீர்மானித்தவுடன் மெட்றாஸ் நகரைத் தேர்ந்தெடுக்காமல் பெங்களூருவைத் தேர்ந்தெடுத்தார். அதற்கு ஒரே காரணம் சிறு வயது முதலே அவர் கர்நாடக கிரிக்கெட் அணி மீது கொண்ட காதல்தான். இதை எர்த்வோர்ம் புத்தகக் கடையைத் தொடங்கி வைத்தபோது 2000-வது ஆண்டில் அவரே தெரிவித்தார்.

“இந்தப் புத்தகக் கடை இருக்கும் இடத்துக்கு அருகில்தான் என்னுடைய உறவினர் டாக்டர் சஞ்சீவியின் வீடும் இருந்தது. விடுமுறையின்போது அங்கே வந்து விளையாடுவேன். விடுமுறைக் காலம் முழுவதும் மிகவும் உற்சாகமாக வும் மகிழ்ச்சியாகவும் கரைந்துவிடும். அறிவுசார்ந்து முடிவெடுப்பதாக இருந் தால் மெட்றாஸ் நகரைத்தான் தேர்ந் தெடுத்திருக்க வேண்டும். பெங்களூ ருவை விட மெட்றாஸ் (சென்னை) நகரில்தான் அறிவுசார் நிகழ்வுகள் அதிகம். எட்டு அல்லது ஒன்பது வயதாக இருக்கும்போது கிரிக்கெட் ஆர்வம் அதிகம் இருந்தது. டேராடூன் உறைவிடப் பள்ளியில் என்னைச் சேர்த்துவிட்டனர்.

என்னுடைய மாணவப் பருவத் தில் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மிகவும் பிரபலம். என்னைப் போன்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் தாங்கள் பிறந்த மாநில அணிக்கு ஆதரவாளர்களாக இருப்பார்கள். டேராடூனில் படித்தாலும் உத்தரப்பிரதேச அணியை ஆதரிக்க மனம் வரவில்லை. மெட்றாஸ், பெங்களூரு என்ற இரு நக ரங்களிலும் சிறு வயதில் வாழ்ந் திருக்கிறேன். இரு மாநில ரஞ்சி அணிகளிலும் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் இருந்தனர். சந்திரசேகர், பிரசன்னா, வி.சுப்ரமணியம் இடம்பெற் றுள்ள கர்நாடக அணி ஒருபுறம், வெங்கட்ராகவன், வி.வி.குமார் இருந்த தமிழ்நாடு அணி மறுபுறம். தீவிர ஆலோசனைக்குப் பிறகு கர்நாடக அணியை ஆதரிக்கத் தீர்மானித் தேன்.

அந்த விசுவாசம் காரணமாகத்தான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பெங்களூரைத் தேர்வு செய்தேன். சின்னசாமி அரங்கில் கர்நாடக அணியைத் தொடர்ந்து ஆதரிக்க வாய்ப்பு பெற்றேன்” என்று பேசியிருக்கிறார்.

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மீது முன்பிருந்த ஆர்வம் ரசிகர்களுக்கு இப்போது இல்லை. சின்னசாமி அரங்கில் கிரிக்கெட் போட்டி நடக்கும்போது கூடும் குறைந்த எண்ணிக்கையிலான ரசிகர்களில் குஹாவும் இருக்கக் கூடும். குஹா போன்றவர்களுக்கு கிரிக்கெட் என்பது உணர்வோடு கலந்தது. அது திறமை உள்ளவர்களை ஆதரிக்கும் உணர்வு.

- சரித்திரம் பேசும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x