

முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான ஃபேஸ்புக் முதல் முறையாக தனது லைக் வசதி சின்னத்தில் கை வைத்துள்ளது. புதிய வடிவமைப்புடன் இந்தச் சின்னம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இணைய உலகில் ஃபேஸ்புக்கின் லைக் (Like) மற்றும் ஷேர் (Share) வசதி மிகவும் பிரபலமானது. 2010-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த வசதி, இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் வசதியாக இருக்கிறது. ஃபேஸ்புக் தெரிவித்துள்ள தகவலின்படி லைக் சின்னம் தினமும் 75 லட்சம் இணையதளங்கள் மூலம் 2,200 கோடி முறை பார்க்கப்படுகிறது.
ஃபேஸ்புக்கிலும் சரி, இணையத்தில் சரி, நம்மைக் கவரும் தகவல்களை 'பிடிச்சிருக்கு' என்று மற்றவர்களுக்கு தெரிவிக்க இந்த வசதி பயன்படுகிறது. லைக் வசதி மூலம் விரும்பும் தகவலை பொதுவாக ஃபேஸ்புக் நண்பர்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ளலாம்.
பகிர்தலுக்கான ஷேர் வசதியால், நாம் பகிர விரும்பும் கருத்து / புகைப்படத்துடன், (குறிப்பிட்ட இடத்தில்) நம் தகவலையும் பகிர்ந்து கொள்ளலாம்.
அறிமுகமான நாள் முதல் இந்த சின்னங்களின் மீது கை வைத்திராத ஃபேஸ்புக், தற்போது இவற்றை முதல் முறையாக மறுவடிவமைப்பு செய்துள்ளது.
புதிய வடிவமைப்பில் லைக் சின்னத்தில் ஏற்கெனவே இடம்பெற்றிருந்த கட்டை விரல் காணாமல் போய் அதற்கு பதிலாக ஃபேஸ்புக்கின் அடையாளமான எஃப் (f) ஆங்கில எழுத்து இடம்பெற்றுள்ளது. ஷேர் சின்னமும் இவ்வாறே எஃப் எழுத்துடன் அமைந்துள்ளது. துடிப்பான நீல நிற பின்னணியில் இந்தச் சின்னங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இரண்டு வசதிகளையுமே அருகருகே பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே இந்த மாற்றத்தை ஃபேஸ்புக் பரிசோதித்து வந்த நிலையில் இப்போது அதிகாரபூர்வமாக இந்த மாற்றத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாற்றத்திற்கு ஏற்ப பயனாளிகள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் சின்னம் தானாக புதுப்பிக்கப்பட்டு விடும் என்கிறது ஃபேஸ்புக்.
சின்ன மாற்றம்தான், ஆனால் மிகவும் முக்கியமானது. காரணம் இரண்டு சின்னங்களுமே இணையவாசிகளின் மனதில் விருப்பத்திற்கான அடையாளமாக பதிந்துவிட்டது. புதிய வடிவமைப்பு சுலபமானதாக இருக்கவில்லை. பல்வேறு உலாவிகள் மற்றும் எண்ணற்ற இணைய வடிவங்களில் எந்த வித பாதிப்பும் இல்லாமல் தெளிவாக, பளிச்சென தோன்றும் வகையில் மிக கவனமாக இவை உருவாக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
இணையத்தில் தகவல்களை பகிர்ந்துகொள்தலை மேம்படுத்த புதிய வடிவமைப்பு உதவும் என்று ஃபேஸ்புக் எதிர்பார்க்கிறது. ஆனால், லைக் சின்னத்தில் கட்டைவிரல் இல்லாமல் இருப்பது ஃபேஸ்புக் அபிமானிகள் பலரை வருத்தத்தில் ஆழ்த்தலாம்.
மாற்றம் பற்றி ஃபேஸ்புக்கின் அதிகாரபூர்வ விளக்கம் இங்கே >Introducing new Like and Share buttons
சைபர்சிம்மன், கட்டுரையாளர் - தொடர்புக்குenarasimhan@gmail.com
கட்டுரையாளரின் வலைப்பதிவுத் தளம் >http://cybersimman.wordpress.com