Published : 08 Feb 2017 02:46 AM
Last Updated : 08 Feb 2017 02:46 AM

ஓபிஎஸ் கெத்து பேட்டியும் ஓர் உளவியல் பார்வையும்!

கடந்த 5-ம் தேதி நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். முதல்வராக சசிகலா பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 8.50 மணிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாதுகாப்பு போலீஸாருடன் திடீரென மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு வந்தார். நினைவிடத்தின் முன்பு அமர்ந்த அவர், மவுனமாக கண்ணை மூடி தியானத்தில் ஆழ்ந்தார். 40 நிமிடங்கள் தியானத்தில் இருந்த அவர், பின்னர் கண்கலங்கியபடி எழுந்தார். ஜெயலலிதா நினைவிடத்தை சுற்றி வந்து விழுந்து வணங்கினார்.

அதைத் தொடர்ந்து அங்கு திரண்டிருந்த செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, என்னை கட்டாயப்படுத்தியதால்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கண்ணீர் மல்க கூறினார். மக்களும் தொண்டர்களும் விரும்பினால் ராஜினாமாவை வாபஸ் பெறுவேன் என்றும் அறிவித்தார். ஆட்சிப் பொறுப்புக்கு நல்லவர் ஒருவர்தான் வரவேண்டும் என்றும், கட்சியைக் காப்பாற்ற தன்னந்தனியாக போராடுவேன் என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியின் பின்னணியில் மிகவும் நிதானமான ஒரு மனிதரின் உளவியலே வெளிப்படையாக தெரிகிறது. அரசியல்வாதிகளுக்குரிய எந்த வித பரபரப்பு மனோபாவமும் அற்ற, சுய - ஆதாயம் அற்றவர் போன்ற ஒரு மனிதரின் தன்மைதான் ஓபிஎஸ்ஸின் பேட்டி அறிவுறுத்துகிறது.

முதலில் பன்னீர்செல்வம், ஜெயலலிதா சமாதியின் முன் அமர்ந்து தியானம் செய்த அந்த 40 நிமிடங்கள், தன்னுடைய எதிர்காலத்தை குறித்து அல்ல, கட்சியின் எதிர்காலம், தமிழகத்தின் எதிர்காலம் என்பதைப் பற்றிய அக்கறையாகப் பார்க்க வேண்டிய ஒரு தருணமாக அமைந்துள்ளது.

ஒரு முதல்வராக செய்தியாளர்கள் சந்திப்பை முன் கூட்டியே அறிவித்து ஒரு சலசலப்பையும் பரபரப்பையும் உருவாக்கியிருக்கலாம். ஆனால், பன்னீர்செல்வம் அதனை விரும்பவில்லை. தியானம் முடிந்த பிறகும் கூட செய்தியாளர்கள் சலசலப்பை ஏற்படுத்தி சப்தம் எழுப்பிய போதும் அமைதியடைய வலியுறுத்தி 'சில உண்மைகளை சொல்ல வந்திருக்கிறேன்' என்று நிதானமாக அவர் தெரிவித்து பேசத் தொடங்கினார்.

அவர் தியானம் செய்தது, தான் பேசப்போவதற்கான 'அம்மா'விடம் பெற்ற ஆசிதான் என்று அவர் கருதி இருக்கலாம். மேலும் தான் நிதானம் தவறாமல் என்ன பேச வேண்டுமென்பதை பரபரப்பு அரசியலாக்காமல் பேச வேண்டும் என்ற உறுதியும், அரசியலுக்கப்பாற்பட்ட ஒரு மனிதனின் அக்கறையுமே காரணமாக இருக்க முடியும்.

அவரது பேச்சின் பின்னணியில் யார் என்ற விவாதங்களெல்லாம் கிளம்பியுள்ளன. ஆனால் இம்மாதிரியான எதிர்வினைகளை அவரது பேட்டி ஏற்கெனவே முறியடித்து விட்டது, காரணம் அவர் தன் பதவியைத் தக்க வைத்துக்கொள்ளும் எந்த ஒரு நியாயமான, தனிப்பட்ட ஆசையைக் கூட வெளிப்படுத்தவில்லை, தனிமனிதனாக நின்று போராடுவேன், 'தகுதியுள்ளவர் தமிழகத்தை ஆள வேண்டும்' என்றே கூறினார்.

பேட்டியில் எந்த இடத்திலும் அவர் தன் பதவி பறிக்கப்பட்டதற்காக தான் மீண்டும் போராடுவேன் என்று கூறவில்லை. செய்தியாளர் கேட்ட போதுதான் 'மக்கள், தொண்டர்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன்" என்று கூறினார், ஆனாலும் இதிலும் எந்தவித ஆவேசமும் இல்லை.

'நான் வேண்டாம் என்ற போது எனக்குப் பதவியைக் கொடுத்துவிட்டு இப்போது அசிங்கப்படுத்தி அவமானப்படுத்துவது நியாயமா என்று கேட்டேன்" என்று கூறிய அந்த நிலையிலும் தன்னை பரிதாபத்துக்குரியவராகக் காண்பித்துக் கொள்ளாமல், அதேவேளையில் தான் பேச வேண்டியதை ஒளிவு மறைவில்லாமல் பேசியுள்ளார் பன்னீர்செல்வம்.

தமிழகக் கட்சி வரலாற்றில் உட்கட்சி ஜனநாயகம் மேலோங்கி இருப்பதாகக் கூறிக்கொள்ளும் கட்சியில் கூட, ஜனநாயகம் இருப்பதான தோற்றத்தை ஏற்படுத்தியுள்ள, ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கட்சியிலும் கூட, இத்தகைய நெருக்கடியில் ஒருவர் வெளியில் வந்து கூட கட்சித் தலைமையை எதிர்த்தோ அல்லது கட்சிக்குள் நிலவி வரும் ஆதிக்கவாத சக்திகளை எதிர்த்தோ இப்படி பேசுவது நடவாத காரியமாகும்.

இந்த வகையில் பன்னீர்செல்வத்தின் பேச்சு ஏதோ அதிமுக-வை கைப்பற்றும் சக்திகளுக்கு எதிரானதாக மட்டுமல்லாது, பொதுவாக எந்த ஒரு அமைப்பிலும் தனிமனிதன் தீமைக்கு எதிராக செயல்படுவதன் உத்வேகத்தையும் கடமையுணர்ச்சியையும் அரசியலுக்கப்பாற்பட்டு, அற ரீதியாக நிலைநாட்டுவதாக அமைந்துள்ளது என்ற கோணத்திலும் பார்க்க வாய்ப்புண்டு.

இந்த வெளிப்படையான நிதானத்திற்குப் பிறகான உண்மை வெளிப்பாட்டிற்கு புறக்காரணங்களைக் காரணம் காட்டி, 'இவரால் தூண்டப்பட்டார்', 'ஏன் இதனை அவர் முன்னமேயே கூறவில்லை' என்று பல்வேறு விதமாக சந்தேகங்களைக் கிளப்புவது என்றும் எடுபடப்போவதில்லை. ஏனெனில் பன்னீர்செல்வத்தின் உண்மை வெளிப்பாடு இந்த ஹேஷ்யங்களையும் அரசியலுக்கே உரித்தான யூக சொல்லாடல்களையும் உடைத்து நொறுக்கியுள்ளது.

பன்னீர்செல்வத்தின் இந்த பாதைத்திறப்பு பேட்டிக்குப் பிறகே, 'நாங்கள் அவரை ராஜினாமா செய்ய நிர்பந்திக்கவில்லை' ரக போலி நியாயப்பாடுகள் ஒருபோதும் பொதுவெளியில் எடுபடப்போவதில்லை.

இதற்கு முன்பு பலரும் 'காலில் விழும் கட்சி', 'அடிமைகள்' 'உட்கட்சி ஜனநாயகம்' இல்லாத கட்சி என்றும் வர்ணிக்கப்பட்ட ஒரு கட்சியிலிருந்து, கேலி பேசப்பட்ட கட்சியிலிருந்து இத்தகைய போர்க் குரல் வெளிவந்திருப்பது தமிழகத்தில் செயல்படும் 'உட்கட்சி ஜனநாயகம்' இருப்பதான மாயத்தோற்றத்தை உருவாக்கியுள்ள கட்சிகளுக்குமே பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள பேட்டி என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை.

எப்போதுமே ஜனநாயகம் என்பது உட்கட்சி ஜனநாயகமாக இருந்தாலும் பொதுப்படையான் ஜனநாயகமாக இருந்தாலும் 'ரகசியம்' பாதுகாக்கப்படாமல் சாத்தியமில்லை. அதே வேளையில் முரண் இயங்கியல் ரீதியாகப் பார்த்தோமானால் முழு அடக்குமுறையும் சாத்தியமில்லை உண்மை பீறிட்டுக் கொண்டு வரும் என்பதை பன்னீர்செல்வத்தின் பேச்சு உறுதி செய்துள்ளது.

அரசியல் வரலாற்றில், அரசியலில் கட்சிகளின் வரலாற்றில் அடக்குமுறை செய்து குரல்வளையை நெறிக்கும் காலக்கட்டம், பிற்பாடு பெரிய அளவில் வெடித்துச் சிதறி உண்மைகள் வெளிவருவதும் ஜனநாயகம்தான் எங்கள் அடிநாதம் என்று கூறும் ஒன்றிலிருந்து உண்மைகள் வெளிவராமலேயே போய்விடுவதும்தான் வாடிக்கை.

இந்நிலையில் பன்னீர்செல்வத்தின் இந்தப் பேட்டி தமிழக வரலாற்றில் மட்டுமல்ல இந்திய அரசியலிலேயே 'பாதை திறப்பு' ஏற்படுத்திய ஒரு வெளிப்பாடு என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க வாய்ப்பில்லை.

இந்த நீண்ட பேட்டியில், முன்பு நடந்தவற்றை விவரிக்கும்போது உணர்ச்சிவசப்படக் கூடிய சூழலை எட்டியபோதும், தன்னிலை மறக்காமல் எந்த ஓர் இடத்தில் தாம் குற்றம்சாட்டியவர்களை கண்ணியம் குறைவாக பேசவில்லை என்பது ஓபிஎஸ் அரசியல் நாகரிகத்தின் வெளிப்பாடாகவும் பார்க்கலாம்.

ஓ.பன்னீர்செல்வத்தின் நீண்ட பேட்டியையும் அவரது உடல் பாவனைகள் - பேசிய விதத்தை அடிப்படையில் உளவியல் ரீதியிலான பார்வை அணுக முற்பட்டு இக்கட்டுரை எழுதிக் கொண்டிருந்த வேளையில், அவரது இன்னொரு சிறு பேட்டி நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதில், ஸ்டாலினைப் பார்த்து நேரில் சிரித்தது குறித்து சசிகலா குற்றச்சாட்டு எழுப்பியதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் பேசும்போது, ''மிருகங்களால் சிரிக்க முடியாது. மனிதர்களால் மட்டுமே சிரிக்க முடியும். ஸ்டாலினைப் பார்த்து சிரிப்பது குற்றமாகாது" என்று சற்றே நிதானம் குன்றாமல் சிரித்தபடி கூறியதும் அவரது தெளிவான உளவியல் அணுகுமுறையைக் காட்டியது. அப்போது, அவர் வசம் இருந்த அதிமுக பொருளாளர் பதவி பறிக்கப்பட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x