Last Updated : 10 Feb, 2017 09:53 AM

 

Published : 10 Feb 2017 09:53 AM
Last Updated : 10 Feb 2017 09:53 AM

இணைய களம்: குரங்கு அப்பம் பங்கிட்ட கதை

அதிமுகவின் மீதான மத்திய அரசின் தாக்குதல், ஜெயலலிதா கர்நாடகாவில் தண்டிக்கப்பட்டதில் இருந்தே தொடங்கிவிட்டது.

மாநிலக் கட்சிகளின் மீது வழக்குகள் போட்டு அவற்றைப் பலவீனப்படுத்துவது பழைய வழக்கம்தான். லாலு பிரசாத் யாதவ், ஜெகன் ரெட்டி, 2ஜி, அதிமுக, மம்தா என்று தொடர்ச்சி இருக்கிறது. இந்தக் கட்சிகள் ஊழல்களில் ஈடுபடாதவை அல்ல.

அதே நேரம் இவற்றை விடப் பெரும் பெரும் ஊழல்கள், படுகொலைகளில் ஈடுபட்ட தேசியக் கட்சிகளின் தலைவர்கள் பெரும்பாலும் தப்பிவிடுகின்றனர். அல்லது சிறிய மீன்கள் மட்டுமே சிக்குகின்றன. போஃபர்ஸ் ஊழல், பேர்பாக்ஸ், சீக்கியர் படுகொலை, மீரட் - பகல்பூர் படுகொலைகள் என்று காங்கிரஸுக்குப் பட்டியல் உண்டு.

ரத யாத்திரை - ராம்லீலா பூஜைகளில் தொடங்கி, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் என்று படுகொலைகள், ஊழல்களுக்குப் பாஜகவில் பஞ்சமே இல்லை. மேல்மட்டத் தலைவர்கள் யாரும் ஒருநாள் கூடச் சிறையில் இருந்ததில்லை.

ஆனால், மாநிலக் கட்சிகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்படக் காரணம், அவற்றை மிரட்டிப் பணிய வைப்பது. இன்னொன்று, மக்களை நேரடியாகச் சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கும் இந்த மாநிலக் கட்சிகள் உலகமயமாக்கல், தாராளமயமாக்கலின் வேகத்துக்கு ஒத்துழைக்கத் தயங்குகின்றன. அவற்றை உந்தித் தள்ளவும் இந்த வழக்குகள் பயன்படுகின்றன.

இப்போதைய நடவடிக்கைக்கு, அதிமுகவின் முரட்டுத்தனத்துக்குக் காரணமான அதன் பலத்தை முறிப்பது, அல்லது கையாள எளிதான, டெல்லி அரசியலுக்குப் பழகிய திமுகவைப் பலப்படுத்துவது என்று ஏதாவது காரணம் இருக்கலாம்.

கவர்னர் பதவியே வேண்டாம் என்ற கோரிக்கை போய், தமிழகத்துக்கு நிரந்தர கவர்னர் வேண்டும் என்ற கோரிக்கை வந்திருக்கிறது. குரங்கு அப்பம் பங்கிட்ட கதை நடக்கப்போகிறது.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x