Last Updated : 06 Jan, 2017 10:14 AM

 

Published : 06 Jan 2017 10:14 AM
Last Updated : 06 Jan 2017 10:14 AM

மெட்றாஸ் அந்த மெட்ராஸ் 22: எல்லைக்கு அப்பால் நடந்த திருமணங்கள்!

கடல் கடந்து மெட்றாஸ் நகருக்கு வந்த இளைஞர்களும் யுவதிகளும் இந்த நகர இளைஞர்களையும் யுவதி களையும் காதலித்து, பெற்றோரின் சம் மதத்துடன் திருமணம் செய்துகொள்வது அதிகரித்த காலம் அது. நகரைச் சேர்ந்த பெற்றோர்கள் புதிய மருமகளையும் மருமகனையும் மகிழ்ச்சியோடு ஏற்றனர்; எங்கோ பிறந்து வளர்ந்திருந்தாலும் இந்த நாட்டின் கலாச்சாரப்படியான திருமணங்களை அவர்களும் மகிழ்ச்சி யோடு ஏற்றுக்கொண்டதைப் பார்க்கும் போது உள்ளம் பூரிக்கும்.

17 ஆண்டுகளுக்கு முன்னால் அப்படி ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. 2000-வது ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் சில திருமணங்கள் அப்படி நடந்தன.

மணமகளான யூகோஸ்லாவியப் பெண் நல்ல உயரம், ஒல்லி, பால் போன்ற வெண்ணிறம். தங்க ஜரிகை போட்ட பட்டுப் புடவையைக் கூறைச் சேலையாக அவர் அணிந்திருந்தது மிகவும் பாந்தமாக இருந்தது. அத் துடன் தென்னிந்தியர்கள் அணியும் தோடு, மூக்குத்தி, நெக்லஸ், சங்கிலி, வளையல்கள், ஒட்டியாணம், நெளி மோதிரம், மெட்டி என்று எல்லாவற்றை யும் அணிந்து அனைவரின் கவனத்தை யும் கவர்ந்தார். வெளிநாட்டவரான மண மகனுக்குத்தான் பட்டு வேட்டி இடுப் பிலேயே நிற்காமல் சங்கடப்படுத்திக் கொண்டிருந்தது. ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த புரோகிதர் ஜெயதேவ் நல்ல மனிதர்.

பெரிய தொழிலதிபர். புரோகித ராக இருப்பது அவருக்கு உப தொழில். நிறைய நேரம் இருக்கிறது, அறைக்குள் சென்று சரியாக உடுத்திக்கொண்டு வாருங்கள் என்று மணமகனை தயார் படுத்திக் கொண்டிருந்தார். திருமணச் சடங்குகளை நிகழ்த்துவதற்கு முன் னால் சடங்கின் பெயர் என்ன, ஏன் செய் கிறார்கள் என்று மணமக்களுக்குப் புரியும் வகையில் ஆங்கிலத்தில் அதே சமயம், நகைச்சுவை கலந்து சுவையாக விவரித்துக்கொண்டே இருப்பார். (இவை யெல்லாம் அர்த்தமற்ற சடங்குகள் என்று பலர் கருதுவதற்குக் காரணம் அர்த்தம் தெரியாததால் அல்லவா?)

சில வேளைகளில் அவர் பரவசமடைந்து விளக்கத்தை ஒரு அளவோடு நிறுத்திக் கொள்ளாமல் விவரித்துக் கொண்டே போவார். அதைப் போன்ற வேளைகளில் உள்ளூர்க்காரர்கள்தான் முகூர்த்த நேரம் கடந்துவிடும் என்று எச்சரித்து இவ்வுலகுக்கு அழைத்து வரு வார்கள். அவர் பேசும்போதெல்லாம் மண மக்கள் புன்சிரிப்போடு கேட்டுக்கொண்டிருப்பது உற்சாகமாக இருக்கும்.

அமெரிக்காவின் வெவ்வேறு இனத் தைச் சேர்ந்த 3 மணமக்கள், மெட்றாஸ் நகரைச் சேர்ந்த ஒரு சிந்தி, ஒரு குடகு, ஒரு தமிழ் பிராமணர் குடும்பங்களைச் சேர்ந்த 3 மணமக்களை மணந்து கொண் டனர். ஒரு திருமணத்தில் அமெரிக்க இளைஞர் பஞ்ச கச்ச வேட்டியை மிக நறுவிசாக உடுத்திக்கொண்டு ஒரு இடையூறும் இல்லாமல் ஊஞ்சல் பாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்தத் திருமணத்திலேயே அனைவரையும் சிரிப் பில் ஆழ்த்திய ஒரு நிகழ்ச்சி, அந்தத் திரு மணத்துக்காகவே ஒரு ஊஞ்சல் பாட்டை ஆங்கிலத்தில் எழுதி அங்கேயே பாடி னார்கள். அதில் தொனித்த கேலியும் கிண் டலும் மணமகன் உட்பட அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

வெளிநாட்டு மணமக்கள் மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந் தவர்களும் இங்கே திருமணம் செய்து கொள்வர். கேரளத்தைச் சேர்ந்த சிரியன் கிறிஸ்துவர்கள் - தமிழ் பிராமணர்கள், தமிழர்கள் பஞ்சாபிகள், தமிழர்கள் சிந்திகள் என்று பல திருமணங்கள் நடந்துள்ளன. புத்தாண்டையொட்டிய விடுமுறையில் இத்தகைய திரு மணங்கள் நடப்பது மெட்றாஸில் வழக்கம். இப்போதும் இந்த மரபு தொடருகிறது. உலகம் சுருங்கி வருகிறது. இப்போது பெரும்பாலான திருமணங்கள் பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்வதாக இல்லாமல் மணமக்களே தங்களுடைய இணையைத் தேர்வு செய்வதாக இருக்கின்றன.

கட்டுப்பெட்டியானவர்கள் என்று கருதப்படும் தென்னிந்தியர்கள் அதி லும் தமிழர்கள், இப்போது பரந்த மனப் பான்மையுடன் இத்தகைய திருமணங் களை முன்னின்று நடத்துகின்றனர். இவை மதங்களை, மாநிலங்களை மட்டுமல்ல; நாடுகளையும் கூட இணைக் கும் வல்லமை பெற்றவை. இதைப் படிக்கும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

அகதிகள் மறுவாழ்வுக்கு யோசனை!

ஐக்கிய நாடுகள் சபையின் அகதி கள் மறுவாழ்வுப் பிரிவின் ஆதரவில் மெட்றாஸ் நகரில் 17 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த ஒரு கருத்தரங்கத் துக்குச் சென்றிருந்தேன். இலங்கைத் தமிழ் அகதிகள் குறித்து பத்திரிகைகளில் வந்த தகவல்களுக்குப் பிறகு, அவர் களுடைய மறுவாழ்வுக்கான யோசனை களைப் பரிசீலிக்க அந்தக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. விலைமதிப்பற்ற பொருட் களை அதிருஷ்டவசமாகக் கண்டுபிடிப் பதைக் குறிக்க ‘செரன்டிபிடி’ என்ற சொல்லைப் பயன்படுத்துவார்கள். மேற் காசியாவில் இருந்து வந்த கடலோடிகள், கிழக்குக் கடற்கரையோரத்தில் தீவு ஒன்றைக் கண்டார்கள், அதை ‘செரன்டி பிடி’ (சேரன் தீப் சேரன் தீவு) என்று அழைத்தார்கள் என்றும் சொல்வார்கள்.

ஆய்வரங்கம் முடிந்து கேள்வி நேரம் தொடங்கியபோது வெளியேறத் தொடங்கினேன். உயரமும் பருமனும் கொண்ட ஒரு தாடிக்காரர் முதல் கேள்வி யைக் கேட்டார். அவர் கேரளத்தைச் சேர்ந்தவர். பல் வலிக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள பல் டாக்டரிடம் சென்றவர், அங்கிருந்த ’இந்து’ ஆங்கில நாளிதழில் இந்தக் கருத்தரங்கம் நடக் கிறது என்று பார்த்தவுடன் பல் வலியைக் கூட பொருட்படுத்தாமல் அந்த இடத் துக்கு வந்திருக்கிறார். ‘இந்தியாவில் அகதிகளை எப்படிப் பராமரிக்கிறார்கள் என்று பார்ப்பதற்காக வந்தேன்’ என்று சொன்னார்.

பின்லாந்து நாட்டில் இப்போது வசிப் பதாகவும் அங்கே அகதிகள் குடியமர்த் தல் பிரிவில் அனுபவம் உண்டென்றும் கூறினார். கொசாவோ, இலங்கை, அல்ஜீரியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கில் புக லிடம் தேடி பின்லாந்துக்கு வந்து விட்டனர். மொழி, மதம், கலாச்சாரம், இனம் ஆகியவற்றில் வேறுபட்டிருந்த அவர்களை எப்படி ஒரே இடத்தில் தங்க வைத்துப் பராமரிப்பது? பின் லாந்து அதிகாரிகள் அதற்கொரு வழிகண் டனர். அனைவரையும் கால்பந்து விளை யாட்டில் சேர்த்து அணி பிரித்தனர். பிறகு அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்பட்டு வலிமையானது. அதைப் பற்றி அந்த கேரளக்காரர் ஒரு புத்தகத்தையே பின்னாளில் எழுதினார். அகதிகள் பிரச்சினையை வேறு கோணத்தில் பேசியே பழகியிருந்த கல்வியாளர்கள் அவரை அதிசயப் பிறவியைப் போலப் பார்த்தார்கள். இந்தியாவில் விளை யாட்டுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தருகிறவர்கள் குறை வாயிற்றே!

- சரித்திரம் பேசும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x