Published : 06 Mar 2017 08:20 AM
Last Updated : 06 Mar 2017 08:20 AM

பாதுகாப்பான தேசம்தானா அமெரிக்கா? - சுட்டுக் கொல்லப்பட்ட பொறியாளரின் மனைவி உருக்கத்துடன் கேட்கிறார்

அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலம் ஒலாத்தேவில் இந்திய இளம் பொறியாளர் ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா (32) கடந்த 22-ம் தேதி இனவெறித் தாக்குதலுக்கு பலியானார். ‘எங்கள் நாட்டை விட்டு ஓடிவிடுங் கள் தீவிரவாதிகளே’ என்று கத்திக்கொண்டே ஸ்ரீநிவாஸை கொடூரமாக சுட்டுக் கொன்றிருக் கிறார் அமெரிக்க முன்னாள் கடற்படை வீரர் ஆடம் புரின்டோன்.

சம்பவம் நடந்து 10 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், அமெரிக்காவில் இந்தியர் மீது அடுத்த தாக்குதல். தெற்கு கரோலினாவின் லேன்காஸ்டர் கவுன்ட்டியில் ஹர்னிஷ் படேல் என்ற இந்தியர் 2 நாட்களுக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்டார்.

அமெரிக்கவாழ் இந்தியர்கள் மற்றும் இங்குள்ள அவர்களது உறவினர்களை இந்த தொடர் தாக்குதல்கள் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கின்றன. இந்த தருணத்தில், அமெரிக்காவில் இனவெறித் தாக்குதலுக்கு பலி யான இளம் பொறியாளர் ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லாவின் மனைவி சுனயனா துமாலாவின் உருக்கமான ஃபேஸ்புக் பதிவு:

ஆதர்ச கணவனாக மட்டுமின்றி, ஓர் உந்துசக்தியாக, அன்பான நண்பனாக இருந்தவரை இழந்து நிற்கிறேன்!

எங்கள் வீட்டில் 2 அக்காவுக்குப் பிறகு நான் கடைக்குட்டி. அதனால், எந்தக் கவலையும் இல்லாதவளாக வளர்ந்தேன். அமெரிக்கா சென்று படிக்க வேண்டும் என்ற என் கனவை நனவாக்கி, நிஜமாக்கியது ஸ்ரீநிவாஸ்தான். இன்று தனி மனுஷியானாலும், தன்னம்பிக்கை யுடன், உறுதியுடன், யார் துணை யும் இல்லாமல் தைரியமாக நிற்கிறேன் என்றால், அதற்கு காரணம் ஸ்ரீநிவாஸ்தான்.

நான் படித்து முடித்து, 4 ஆண்டு கள் இடைவெளி விழுந்துவிட்ட சூழ்நிலையில், அமெரிக்காவில் வேலை கிடைக்குமா என்று ஏங்கினேன். அவர்தான் என்னை உற்சாகப்படுத்தி, வேலையில் சேரக் காரணமாக இருந்தார். கடந்த மே மாதம்தான் வேலையில் சேர்ந்தேன்.

அவர் விமானத் தொழில்நுட்பத் தில் அனுபவம் வாய்ந்த பொறி யாளர். விமானத் துறையில் ஏதாவது புதிதாக கண்டுபிடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர். ராக்வெல் காலின்ஸ் நிறுவனத்தில் தன் பணியைத் தொடங்கினார். அயோவா மாநிலத்தில் உள்ள சிடர் ரேபிட்ஸ் நகரில் தங்கி வேலைக்கு சென்றுகொண்டிருந்தார்.

அந்த ஊரும் எங்களுக்கு ரொம்ப பிடித்திருந்தது. என் வேலைக்காகத்தான் கன்சாஸ் மாநிலத்துக்கு மாற முடிவெடுத் தோம். மிகுந்த கனவுகளுடன் இங்கு வந்தோம். குழந்தைகள் பிறந்தாலும் வசதியாக இருக்க வேண்டும் என்று, பார்த்துப் பார்த்து எங்கள் கனவு இல்லத்தை உருவாக்கினோம். அந்த கனவு கலைந்துவிட்டது.

சம்பவத்தன்று இரவு என் வீட்டுக்கு போலீஸார் வருகிறார் கள். என் கணவரை யாரோ ஒருவர் சுட்டுக் கொன்றுவிட்டதாக கூறுகிறார்கள். என்னால் அதை நம்பவே முடியவில்லை. அது கனவோ என்று மனம் நினைக்கிறது. ‘உண்மையா? உண்மையாகவா சொல்கிறீர்கள்? யாரென்று நன்கு பார்த்துவிட்டுதான் சொல்கிறீர் களா? அவர் நன்கு உயரமாக இருப்பார். அவரையா சொல்கிறீர் கள்?’’ என்று அடுக்கடுக்காக போலீஸாரிடம் கேள்விகள் கேட்கிறேன்.

என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. அங்கு கன்சாஸில் உறவினர்கள் யாருமே இல்லை. டல்லாஸில் இருக்கும் அவரது தம்பியிடம் விவரத்தைக் கூறினேன். அவரும் முதலில் நம்பவில்லை. ‘என்ன அண்ணி, ஜோக் அடிக் கிறீங்களா?’ என்றார். ஆனால், சம்பவத்தைக் கேள்விப்பட்டதும், அமெரிக்கா முழுவதும் இருந்து நண்பர்களும் உறவினர்களும் வந்துவிட்டார்கள். என்னைவிட்டு அவர்கள் நகரவே இல்லை.

வரும் 9-ம் தேதி அவருக்கு 33 வயது. இதையொட்டி, அவரது உறவினரின் நிச்சயதார்த்தத் துக்காக நியூஜெர்சி போக திட்ட மிட்டிருந்தோம். அதற்காக சமீபத்தில் ஷாப்பிங் சென்று, பொருட்கள் எல்லாம்கூட வாங்கி வைத்துவிட்டோம். ஆனால், எல்லாம் தலைகீழாகிவிட்டது. அவரது சவப்பெட்டியுடன் இந்தியா திரும்புவேன் என்று கனவிலும் எண்ணிப் பார்க்கவில்லை.

பொது நண்பர்கள் வாயிலாக எங்கள் முதல் சந்திப்பு 2006 ஆகஸ்ட்டில் நடந்தது. அதன் பிறகு, ‘ஆர்குட்’ எங்கள் இணைப்பை பலப்படுத்தியது. நெருங்கிய நட் புடன் 6 ஆண்டுகள் இருந்த பிறகுதான், திருமணம் செய்து கொண்டோம். எங்கள் காதல் திருமணத்துக்கு இருதரப்பு பெற் றோரிடமும் சம்மதம் பெற மிகவும் கஷ்டப்பட்டார். ஆனால், திருமணத் துக்குப் பிறகு, எங்கள் குடும் பத்திலேயே ஒருவராகிவிட்டார்.

பெரிதாக எதற்கும் ஆசைப் படமாட்டார். அவர் மிகுந்த விருப்பத்தோடு செய்யும் ஒரே வேலை டிவி பார்ப்பது. டிவி நியூஸ் பார்க்காமல், நாளிதழ்கள் படிக்காமல் தூங்கப் போகவே மாட்டார். இந்தியப் பிரதமராக மோடி வந்ததில் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்தியாவை ஒளிரச் செய்ய, ஒரு தலைவர் வந்துவிட்டார் என்பார் மகிழ்ச்சி பொங்க!

அவருக்கு தன்னம்பிக்கை அதிகம். பி.டெக்.கில் டிஜிட்டல் சிக்னல், எலெக்ட்ரிக்கல் இன்ஜினீ யரிங் பாடத்தில் குறைந்த மதிப் பெண்தான் வாங்கினார். ஆனா லும், எம்.டெக்.கிலும் அதே பாடத்தை தேர்வு செய்தார். ஏனென்று கேட்டதற்கு, ‘எப்படி இதில் மதிப்பெண் குறைந்தது என்று பார்க்க வேண்டாமா?’ என்றார்.

தானே டிபன்பாக்ஸ் கட்டிக் கொள்வது அவருக்குப் பிடிக்காது. கேட்டால், ‘என்ன சாப்பாடு என்று முன்பே தெரிந்தால் சுவாரஸ் யம் இருக்காது’ என்பார், சின்னக் குழந்தை போல!

ஸ்ரீநிவாஸுக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி. அவரது தந்தை சுமாரான சம்பளம் வாங்கியவர்தான். அவர் எப்படி கஷ்டப்பட்டு பிள்ளைகளை ஆளாக்கியிருக்கிறார் என்பதை தினமும் சொல்வார். தங்களை நல்ல நிலைமைக்கு கொண்டுவந்த அப்பா, அம்மாவுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று அடிக்கடி சொல்வார்.

அவரது உயரம் ஆறு அடிக்கு மேல், நான் 5 அடி. எங்களைப் பார்ப்பவர்கள் ‘அமிதாப் பச்சன் - ஜெயா பச்சன்’ என்று கிண்டல் செய்வார்கள். அவர்களது பிள்ளை களான அபிஷேக் பச்சன், ஸ்வேதா போலத்தான் நம் குழந்தைகள் உயரமாக இருக்கும் என்பார்.

‘நானி! நாம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால், காசு பணம் சேர்க்க வேண்டும்’ என்பதுதான் அவர் கடைசியாக என்னிடம் சொன்னது. என்னை செல்லமாக ‘நானி’ என்றுதான் கூப்பிடுவார். ஒருவேளை, எனக்கு குழந்தை இருந்திருந்தால், அதன் வடிவிலாவது ஸ்ரீநிவாஸை பார்த் துக்கொண்டே இருந்திருப்பேன்.

எங்காவது துக்க செய்தி கேள் விப்பட்டால், என் மனம் பதை பதைக்கும். ஓடிவந்து அழுவேன். ‘நாம் சாதிப்பதற்காக நாடுவிட்டு நாடு வந்திருக்கிறோம். நல்லதை நினைத்து, நல்லதை செய்தால், நல்லதே நடக்கும் என்று கட்டி யணைத்து ஆறுதல் கூறுவார். நானும் கவலை மறைந்து தூங்கிவிடுவேன். ஸ்ரீநு! இப்போது உங்களை இழந்த பிறகு மிகுந்த கவலையோடு இருக்கிறேன். தூக்கம் வராமல் தவிக்கிறேன். யார் எனக்கு ஆறுதல் கூறப்போகிறார்?

ஓர் அன்பான கணவரின் மனைவியாக இருந்தேன். அந்த அந்தஸ்தை ஒரே நாளில் பறித்துவிட்டது அந்த சம்பவம். எங்கள் கனவுகள் அனைத்தும் ஒரே நாளில் குலைந்துபோய்விட்டது.

இத்தனைக்கும் காரணம், அந்த ஒருவரது செயல். தான் செய்கிற காரியம், பலியாகிறவரின் குடும்பத்தை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை அவர் சிந்தித்துப் பார்க்கவில்லை.

ஒருவர் நல்லவரா, கெட்டவரா என்பதை தோல் நிறத்தை வைத்தா தீர்மானிப்பது? இது சம்பந்தமாக ஏற்கெனவே பலமுறை விவாதித்து விட்டோம். பல வாரங்கள் பேசு வோம். அப்புறம் மறந்துவிடுவோம். இனியாவது, அதுபோன்ற தவறான எண்ணங்களை அத்தகைய மக்கள் மனதில் இருந்து நீக்க வேண்டும். இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க அமெரிக்க அரசு என்ன செய்யப் போகிறது?

நன்கு உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் எங்களைப் போல எத்தனையோ பேர் இந்த நாட்டுக்கு வந்திருக் கிறார்கள். அவர்களது எண்ண மெல்லாம் இதுதான்..

‘நான் இந்த தேசத்தவன்தானா? நம் கனவு தேசம்தானா இது? இந்த தேசத்தை நம்பி குழந்தை களை வளர்த்து ஆளாக்கலாமா? குடும்பத்தோடு இங்கு இருக்க லாமா?’ இந்த கேள்விகளுக்கு நம்பிக்கையான பதிலை கூறப் போவது யார்?

இவ்வாறு உருக்கமாக கேட் டிருக்கிறார் ஸ்ரீநிவாஸின் மனைவி சுனயனா துமாலா.

தமிழில் சுருக்கமாக: எஸ்.ரவிகுமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x