சுகுமார் அழிக்கோடு 10

சுகுமார் அழிக்கோடு 10
Updated on
2 min read

மலையாள எழுத்தாளர், இலக்கியவாதி

புகழ் பெற்ற மலையாள எழுத்தாளர், விமர்சகர், தத்துவமேதை, பேச்சாளர் என பன்முகத் திறன் படைத்த சுகுமார் அழிக்கோடு (Sukumar Azhikode) பிறந்த தினம் இன்று (மே 26). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் உள்ள அழிக்கோடு என்ற சிற்றூரில் பிறந்தார் (1926). பள்ளிப் படிப்பு முடிந்த பின் 1946-ம் ஆண்டு, வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சமஸ்கிருதம் மற்றும் மலையாளத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். மலையாள மொழி ஆய்வு மேற்கொண்டு, மலையாள சாகித்திய விமர்சனம் என்ற ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார்.

* 1946-ம் ஆண்டு குஜராத் சென்று காந்திஜியை சந்தித்த இவர், அங்கு சேவா கிராமத்தில் சிறிது காலம் பணியாற்றினார். ஆரம்பத்தில் ராஜாஸ் உயர்நிலைப் பள்ளி, சிரக்கல் பள்ளிகளில் ஆசிரியராகவும் புனித அலோசியஸ் உள்ளிட்ட கல்லூரிகளில் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

* பின்னர், எஸ்.என்.எம். பயிற்சிக் கல்லூரியிலும், மூட்டக்குன்னம் கல்லூரியிலும் முதல்வராகப் பணியாற்றினார். சமஸ்கிருதம், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார். வேதம், புராணம், உபநிடதங்கள், வரலாறு, இலக்கண, இலக்கியம் அத்தனையையும் கற்றார்.

* இலக்கிய ஆர்வம் கொண்டிருந்த இவர் எழுத்தாற்றலும் பெற்றிருந்தார். நிறைய எழுதியும் வந்தார். இவரது எழுத்துகளுக்கு கிடைத்த சிறந்த வரவேற்பு, தொடர்ந்து எழுத வைக்கும் தூண்டு சக்தியாக அமைந்தது.

* நவயுகம், தினபத்ரா, நேதமித்ரம், தீனபந்து, மலையாள ஹரிஜன், வர்த்தமானம் உள்ளிட்ட பல இதழ்களில் ஆசிரியராகச் செயல்பட்டார். இவற்றில் அரசியல் - சமூக நிகழ்வுகளில் மக்கள் நலனுக்கு எதிரான அம்சங்களை எதிர்த்து ஆயிரக்கணக்கில் கட்டுரைகளை எழுதினார்.

* சமுதாயத்தில் நிலவும் அனைத்து அநீதிகளுக்கும் எதிராகப் போராடிய ஒரு கலாச்சாரக் காவலன் என்றும் அநீதிகளை வேரறுக்கப் போராடுவதில் தானே ஒரு இயக்கமாகச் செயல்பட்டவர் என்றும் பலரும் பாராட்டியுள்ளனர்.

* ‘ஆசானின் கீதா காவியம்’, ‘மகாகவி உள்ளூர்’, ‘குருவின்ட்டே துக்கம்’, ‘அழிகோடின்டே ஃபலிதங்கள்’, ‘என்டினு பாரததாரே’, ‘கந்தனவும் மந்தனவும்’, ‘மலையாள சாகித்திய பதனங்கள்’, ‘தத்வமஸி’, ‘ரமணனும் மலையாள கவிதையும்’, ‘மகாத்மாவின்டே மார்க்கம்’, ‘ஆசானன்டே சீதாகாவ்யம்’ உள்ளிட்ட இவரது படைப்புகள் மிகவும் பிரபலமடைந்தன.

* காலிகட் பல்கலைக்கழகத்தில் மலையாள மொழிப் பிரிவு தலைவராகச் செயல்பட்டார். பின்னர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக உயர்ந்தார். இவரது படைப்பான ‘தத்வமஸி’ உலகப் புகழ்பெற்ற நூல். இதில் இந்திய தத்துவம், வேதங்கள், உபநிஷதங்கள் குறித்து எழுதியுள்ளார்.

* ‘தத்வமஸி’ நூலுக்காக மத்திய சாகித்ய அகாடமி விருதையும் கேரள மாநில சாகித்ய அகாடமி விருதையும் பெற்றார். மேலும் இவரது இலக்கியப் பங்களிப்புகளுக்காக வயலார் விருது, ராஜாஜி விருது, பத்ம விருது (அரசியல் அமைப்பின்படி அனைவரும் சமமானவர்கள் என்பதால் இத்தகைய கவுரவம் பெறுவது அதற்கு எதிரானது என்று கூறி இவ்விருதை மறுத்துவிட்டார்) பஹ்ரைன் கேரளிய சமாஜம், சாகித்ய புரஸ்காரம் அமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்தன.

* மலையாள இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவராகப் போற்றப்பட்டவர். மலையாள இலக்கியக் களத்தில் மகத்தான பங்களிப்பை வழங்கிய சுகுமார் அழிக்கோடு 2012-ம் ஆண்டு மறைந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in