காலத்தின் வாசனை: வெயில் மனிதர்கள்

காலத்தின் வாசனை: வெயில் மனிதர்கள்
Updated on
2 min read

சுட்டெரிக்கும் வெயிலில் எங்கள் தெருவில் ஒரு பெரியவர் அரதப் பழசான தையல் இயந்திரத்தைத் தள்ளுவண்டியில் வைத்து கா்ணகடூரமான சத்தத்துடன் நகர்த்தியபடி போய்க்கொண்டிருந்தார்.

இயந்திரத்தின் பக்கவாட்டுப் பலகையில் ‘நடமாடும் தையல் வண்டி’ என்று கோணல்மாணலாக எழுதி யிருந்தது. ஓரமாக மங்கலான, வண்ணமிழந்த பழைய சினிமா போஸ்டரில் நாட்டியமாடும் போஸில் பழம் பெரும் நடிகை பானுமதி.

நான் அவரை அழைத்துத் திண்ணையில் உட்காரவைத்து, ஒரு பூவன் வாழைப் பழமும், ஒரு டம்ளர் தண்ணீரும் கொடுத்தேன். பாதிக்கு மேல் தண்ணீர், மீசை, தாடி, சட்டை எல்லாவற்றின் மீதும் சிந்திவிட்டது. பழத்தை எடுத்து இயந்திரத்தின் ஓரமாக மாட்டியிருந்த பையில் போட்டார்.

“பேரனுக்குக் கொண்டுபோறேன்” என்றார். உள்ளே போய் இன்னும் ஒரு சீப்பு பழத்தைக் கொண்டுவந்து கொடுத்தேன்.

“ஏன் இந்த வெயில்ல வந்தீங்க பெரியவரே..”

“சாயங்காலமானா எனக்குக் கண்ணு தெரியாமல் பூடுமே! வெயில் ஒண்ணும் பண்ணாது என்னை. வயசு 100 ஆவுது, சுகர் இல்ல, ரத்தக் கொதிப்பு இல்ல... கண்ணுதான் கொஞ்சம் மக்கர்பண்ணுது.. அதுவும் பொழுது சாஞ்சப்புறம்தான். நான் மலாயாவுல பொறந்தேன்யா. அங்க ரப்பர் தோட்டத்துல வெயில்லதான் வேல. இங்க தமிழ்நாட்டுக்கு வந்து 50 வருசம் ஆவுது. இந்தத் தள்ளுவண்டி மிசின வச்சுதான் காலத்த ஓட்டறேன்.”

“100 வயசுன்னு சொல்றீங்க... இவ்வளவு காலம் வாழணும்னா என்ன செய்யணும் சொல்லுங்க..?”

“வெயிலு மழன்னு பாக்காம வேல பாக்கணும்.. நேர்மையா பொழைக்கணும்... பொய் சொல்லப்புடாது.. இதெல்லாம் சொல்லிக் கொடுத்துட்டு எங்கப்பன் செத்துப்போனான். 120 வயசுல செத்தான்.

‘‘அதோபாரு.. ரங்கன் சுடுகாட்டுக்குப் போறான்டா.. ரங்கா போயிட்டியான்னு ஊர் சனங்க அழுதாங்க.. அப்படி வாழணும்.. அப்படிச் சாவணும்.”

“வரும்போதே ஏதோ பாடிக்கிட்டே வந்தீங்களே என்ன பாட்டு?’’

“சின்ன வயசுலயே பாட்டுகட்டி எங்க வாத்தியாருகிட்ட சபாசு வாங்கினவன் நான்...”

என் பதிலை எதிர்பாராமல் பாடத் தொடங்கினார்.

“பையப்பைய பழுக்கும் அருள்கனி

செய்யச்செய்ய சிவ ஆனந்தம் கைகூடும்

ஐயப்பட்டவர்க்கு இல்லை தன்பொருள்

ஆதியாம் பரஞ்சோதியே அருள் ஆனந்த குருசாமியே.”

சிரித்துக்கொண்டு பாடியபடியே என்னைப் பார்த்துக் கண் சிமிட்டியபடி தையல் இயந்திரத்தை உருட்டிக்கொண்டு வெயிலில் இறங்கினார் பெரியவர். போஸ்டரில் பானுமதி முகத்திலும் சிரிப்பு.

பெரியவரைப் போல் குப்பை பொறுக்குபவர்கள், ‘பழைய பேப்பர் வாங்கறதேய்..’ என்று தெருத் தெருவாக அலைபவர்கள், தோளின்மீது தொழில் கூடத்தைக் சுமக்கிற சாணை பிடிப்பவர்கள், இப்படியான ‘வெயில் மனிதர்’கள் எல்லோரிடமும் ஒரு பொதுவான குணம் இருக்கிறது. அவர்களுக்கு வெயில் மீது எந்தப் புகாரும் இல்லை.

அவர்கள் வெயிலை விரும்புகிறார்கள். வெயிலில் வேலை செய்கிறார்கள். வெயிலோடு தோழமை கொள்கிறார்கள்.

காந்திஜியின் சீடரான ஜே.சி.குமரப்பாவின் வரவேற்பறையில் ஒரு புகைப்படம் மாட்டப்பட்டிருக்கும். பெயர் தெரியாத ஒரு விவசாயி படம். வெயிலில் கலப்பை பிடித்து உழுதபடி செல்கிறான் அவன். யார் இவர் என்று கேட்பவர்களுக்கு குமரப்பா சொல்லும் பதில்:

“இவர் என் குருநாதரின் குருநாதர். (He is my master’s master)”

தஞ்சை மேல வீதியில் நல்ல வெயில் வேளையில் சர்ரென்று சைக்கிளில் வந்து இறங்கினார் ஒரு நடுத்தர வயது மனிதர். காவி உடை, முண்டாசு, சட்டென்று பையிலிருந்து ஒரு விசிறியை எடுத்தார். சாலை ஓரம் தேநீர்க்கடை அருகே வியர்த்து வழிய வெயிலில் நின்றபடி டீயை உறிஞ்சிக்கொண்டிருந்தவர்கள் அருகில் நெருங்கி விசிறலானார்.

“ஏதோ என்னால முடிஞ்சதுங்க. காசு பணம் தர முடியாது. கையளவு காத்த தரலாமே” என்று எனக்கும் விசிறிவிட்டார். வெறும் காற்றின் விசிறல் அல்ல அது, மனிதநேயத்தின் விசிறல்.

எங்கள் ஊரில் ஒரு எழுபது வயதுப் பெண்மணி இருந்தார். அவர் பெயரே வெயில்மாமிதான். வெயில் வேளையில் எங்கு பார்த்தாலும் நடமாடுவார் கடைத்தெரு, ரேஷன்கடை, பஸ்ஸ்டாண்டு என்று எங்கு பார்த்தாலும் தென்படுவார். ‘வெயில் தாழ்ந்து வரக் கூடாதா?’ என்று அவரிடம் கேட்பேன்.

“வெயில் வேளையில் கூட்டமே இருக்காது. கடை வீதியே ஹோன்னு கெடக்குது பார். இஷ்டத்துக்குக் கறிகாய், சாமான் எல்லாம் வாங்கலாம். அப்புறம் காலை வெயிலும் மாலை வெயிலும் ரொம்ப நல்லது தெரியுமோ? என்ன வியாதி ஆனாலும் வெயில்ல ஒரு நடை போயிட்டு வா சரியாப் போயிடும்.”

சொல்லிவிட்டு வெயில்மாமி விடுவிடுவென்று நடையைக் கட்டினார் வெயிலில்!

தஞ்சாவூர்க் கவிராயர், தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in