என்னருமை தோழி..! -8: அந்த மூன்று சபதங்கள்!

என்னருமை தோழி..! -8: அந்த மூன்று சபதங்கள்!
Updated on
2 min read

அந்த மூன்று சபதங்கள்!

மிழில் அறிமுகம் ஆவதற்கு முன்பு, பி.ஆர். பந்துலுவின் கன்னட படம் ‘சின்னத கொம்பே’வில் நீங்கள் நடித் தீர்கள். அந்த சமயத்தில் ‘கர்ணன்’ படம் எடுத்து நஷ்டத்தை சந்தித்த பந்துலு, எம்.ஜி.ஆரை வைத்து ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை எடுக்கத் திட்டமிட்டார். கன்னட படம் எடுக்கும்போதே, ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்கும் சேர்த்து தங்களை ஒப்பந்தம் செய்தார்.

ஆனால், அதற்குள் ‘வெண்ணிற ஆடை’ படப்பிடிப்பு துவங்கி இருந்தது. தங்கள் தாய் சந்தியா, ‘எந்த நேரத்திலும் எம்.ஜி.ஆரிடம் இருந்து என் மகள் நடிப்பதற்கு அழைப்பு வந்துவிடும்’ என்று எனது தந்தை சித்ராலயா கோபுவிடம் முன்கூட்டியே கூறியிருந்தார். இதனால், இயக்குநர் தரும் விரைவிலேயே படத்தை முடித்து விட்டார்.

‘வெண்ணிற ஆடை’ படம் வெளிவந்த அந்த சமயம், உங்கள் பள்ளித்தோழி ஒருத்திக்கு பிறந்த நாள் விழா. பரிசுப் பொருளுடன் ஆவலுடன் விழாவுக்குச் சென்றீர்கள். அங்கு சிறுமிகளின் தாயார் சிலர், தங்களை ஏற இறங்கப் பார்த்தபடி கிசுகிசு என்று பேசிக் கொண்டனர். தங்கள் மனதை நோகடித்தனர். ‘வெண்ணிற ஆடை’ திரைப்படத்தின் போஸ்டர்களில் நீங்கள் அருவியில் குளிக்கும் காட்சி இடம் பெற்றிருந்ததையும், அதைச் சுட்டிக்காட்டியே உங்களைப் பற்றி தோழிகளின் தாய்மார்கள் ஏளனத்துடன் பேசினர் என்பதும் உங்களுக்குத் தெரியவந்தது!

பிறந்த நாள் விழாவிலிருந்து வீடு திரும்பி, உங்கள் அம்மாவின் மடியில் முகம் பதித்து விசும்பினீர்கள். நடந்ததை முழுவதும் கேட்டறிந்த சந்தியா, உங்களுக்குச் சொன்ன தேறுதலையும் அறிவுரையையும் நீங்கள் கடைசிவரை மறக்கவே இல்லை.

''அம்மு, கேள்.! உன் தந்தை வழி பாட்டனார் மைசூர் சமஸ்தானத்து மருத்துவர், பணக்காரர். என் தந்தையார் ஸ்ரீரங்கத்தில் வேதபாராயணம் செய்தவர். சூது வாது அறியாதவர். அவருக்கு மருமகனாக சூது விளையாடிய உன் தந்தை வந்தார். ஆஸ்தி போனது. அதோடு சேர்ந்து நிம்மதியும் போனது.

ஆண்டவனைத் துதிப்பது மட்டுமே தெரிந்த நான் குடும்பத்தைக் காப்பாற்ற அரிதாரம் பூசினேன். நான் ஒரு குணசித்ர நடிகை மட்டுமே. உன்போல் கதாநாயகி அல்ல! பெரிய நடிகர்கள் வந்தால், எழுந்து நின்று ‘அண்ணே’ என்று வணக்கம் வைத்தால்தான் எனக்கு வாய்ப்புகள் தொடரும். நானும் உன் போல் சொல்லடி பட்டிருக்கிறேன். ஆனால், அதையெல்லாம் உன்னிடமோ, உன் அண்ணன் ஜெயகுமாரிடமோ சொன்ன தில்லை.

வளரும்வரை சொல்லடியும், வளர்ந்த பின்பு கண்ணடியும் படுவது கலைஞர்கள் வாழ்க்கையில் இயல்பு. நாளை நீ நல்ல நிலைக்கு வந்தால், இன்று வம்பு பேசிய பெண்களே, ‘ஆட்டோகிராஃப்’ கேட்டு முன்னால் வந்து நிற்பார்கள்’’ என்பதுதான் உங்கள் அம்மா சொன்ன வார்த்தைகள்!

அப்போதுதான் மனதுக்குள் மூன்று சபதங்களை நீங்கள் எடுத்துக் கொண்டதாக, பின்னாளில் சொன்னீர்கள். ‘நான் யாருக்கும் கூழை கும்பிடு போடமாட்டேன். என்னை யாரும் கேவலமாக நடத்த இடம் தரமாட்டேன். யாரைக் கண்டும் அச்சப்பட மாட்டேன்...’ என்பதே அந்த மூன்று சபதங்கள்! ஒரு வேளை, இந்த வைராக்கியம்தான் நாடாளும் நிலைக்கு உங்களைப் படிப்படியாக உயர்த்தியதோ...!

என்னருமை தோழி..!

‘வெண்ணிற ஆடை’ படத்துக்கு முன்பே ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் நடிப்பதற்காக உங்களை எம்.ஜி.ஆர். குறித்து வைத்துக் கொண்ட அந்த சம்பவம் மட்டும் சாதாரணமானதா..? பந்துலு படத்தில் நடிக்க சம்மதித்த எம்.ஜி.ஆர்., அதற்கென புது கதாநாயகியை தேடிக் கொண்டிருந்தார். ‘சின்னத கொம்பே’ படத்தை பந்துலுவின் அழைப்பின் பேரில் சென்று பார்த்தார். தங்களை திரையில் பார்த்த எம்.ஜி.ஆர்., பாதி படத்திலேயே எழுந்து சென்று விட்டாராம். ‘ஒருவேளை நீங்கள் தனக்குப் பொருத்தமான கதாநாயகி இல்லை என்று முதல் பார்வையிலேயே அவர் முடிவெடுத்து விட்டாரோ’ என்று உங்கள் தாயார்கூட நினைத்துவிட்டார்.

பின்னர் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் நீங்கள் நடித்து அது ஆரவாரமாக வரவேற்கப் பட்ட பிறகு... வேறோரு சமயத்தில், ‘சின்னத கொம்பே’ சிறப்புக் காட்சியின்போது, தான் பாதியில் எழுந்து போன காரணத்தை பந்துலுவிடம் எம்.ஜி.ஆர். சொன்னாராம். அசப்பில் பார்ப்பதற்கு மறைந்த அவர் மனைவி சத்யவதியின் அச்சாக நீங்கள் இருந்தீர்களாம்!

அது மட்டுமா...? ‘ஆயிரத்தில் ஒருவன்’ படப்பிடிப்பில், உங்களின் துணிச்சலான ஒரு செயல் எம்.ஜி.ஆரை பெரும் வியப்பில் ஆழ்த்தியதைப் பற்றி நீங்களே ஒரு சந்திப் பின்போது என்னிடம் பகிர்ந்து கொண்டீர்கள்.

கார்வார், கோவாவில் படப்பிடிப்பு. அதற்காக, படப்பிடிப்புக் குழுவுடன் சென்றீர்கள். ‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்...’ பாடல் படமாக்கப்பட்ட கப்பலுக்கு நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் சென்று வருவதற்காக சிறு படகுகள் தருவிக்கப்பட்டிருந்தன. உங்கள் ஒப்பனைக்காரர் சற்று மெதுவாகப் பணியாற்ற... படக் குழுவினர் அனைவரும் படகுகளில் ஏறி கப்பலை அடைந்து விட்டனர்.

ஒப்பனை முடிந்து ‘டச்அப்’ பெண்ணுடன் வந்த நீங்கள், படப்பிடிப்புக் குழுவினர் சென்றுவிட்டதை அறிந்ததும் சற்றும் யோசிக்காமல், படகு ஒன்றில் ஏறி நீங்களே துடுப்பைத் தள்ளிக்கொண்டு கப்பலை நோக்கி பயணிக்கத் துவங்கினீர்கள். பெரிய அலைகள் உங்கள் படகை தள்ளாடச் செய்தபோதும், சற்றும் கலங்காமல் இலக்கினை நோக்கிப் பயணம் செய்தீர்கள்.

நாகேஷுக்கு ஜோடியாக நடித்த நடிகை மாதவி கிருஷ்ணன், தனியே படகு ஓட்டியபடி நீங்கள் வருவதைப் பார்த்து திகைப்பில் அலற, மற்றவர்களும் பதற.. நீங்கள் எப்படியோ கப்பலை அடைந்து ஏணியில் ஏறிவிட்டீர்கள்.

அப்போது எம்.ஜி.ஆர். உங்களைக் கடிந்து கொண்டார், ‘‘என்ன அம்மு இது, விபரீத விளையாட்டு..?’’ என்று! ஆனால், பின்னாளில் அரசியல் எனும் மிக விபரீத மான விளையாட்டில் உங்களை அவர் இறக்கிவிடுவதற்கு இந்தச் சம்பவம்தான் முக்கிய காரணமாக இருந்திருக்க வேண்டும் என நான் புரிந்து கொள்கிறேன்.

அத்துடன், எம்.ஜி.ஆரின் கவனத்தை உங்கள் மீது மேலும் அழுத்தமாகப் பாய்ச்சியது... உங்களின் வெளிப்படையான பேச்சு..!

- தொடர்வேன்...
தொடர்புக்கு: narasimhan.ta@thehindu.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in