Published : 27 Jan 2017 10:18 AM
Last Updated : 27 Jan 2017 10:18 AM

சுவாமி சகஜானந்தர் 10

சமூக மாற்றத்துக்குப் போராடிய ஆன்மிகவாதி

தீண்டாமையை எதிர்த்துப் போராடி, சமூக மாற்றத்தை மலரச்செய்த சுவாமி சகஜானந்தர் (Swami Sagajanandar) பிறந்த தினம் இன்று (ஜனவரி 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ஆரணியை அடுத்துள்ள மேல் புதுப்பாக்கத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தார் (1890). இவரது இயற்பெயர் முனுசாமி. குழந்தைப் பருவத்திலிருந்தே ஆன்மிக விஷயங்களில் ஆர்வம் பிறந்தது. சொந்த ஊரில் ஆரம்பக் கல்வியை முடித்தார்.

* திண்டிவனம் அமெரிக்கன் ஆற்காடு கிறிஸ்தவ உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். ஒரு சில மாதங்களிலேயே பைபிளை மனப்பாடமாக ஒப்பித்தார். பள்ளி நிர்வாகம் ‘சிகாமணி’ பட்டம் வழங்கியது. சில நிபந்தனைகளின் பேரில் படிப்புக்காக அமெரிக்கா அனுப்புவதாகக் கூறியது நிர்வாகம். இவர் அதை மறுக்கவே 8-ம் வகுப்பில் பாதியிலேயே பள்ளியிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

* குடும்ப வறுமையால் படிப்பை விட்டுவிட்டு, பெற்றோருடன் கர்நாடகத்தில் உள்ள கோலார் தங்கவயலுக்குச் சென்று கூலி வேலை செய்யத் தொடங்கினார். பல ஆன்மிக நூல்களைக் கற்றார். மாலை வேளைகளில் நீலமேக சுவாமிகள் என்பவரின் ஆன்மிகச் சொற்பொழிவுகளைக் கேட்டார்.

* அவருடன் பல கோயில்களுக்குச் சென்றார். ஆனாலும் ஆலயத்துக்குள் நுழைந்து தெய்வ தரிசனம் செய்ய இவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. அங்கிருந்து காஞ்சிபுரம் வந்து தட்சிண ஸ்வாமி என்பவரிடம் பல ஆன்மிக விஷயங்களைக் கற்றார். பின்னர், வியாசர்பாடியில் இருந்த கரப்பாத்திர சுவாமிகளின் குருகுலத்தில் சேர்ந்தார்.

* அவரே தன் சீடருக்கு ‘சுவாமி சகஜானந்தர் என்ற பெயரை சூட்டினார். 1910-ம் ஆண்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சேவை செய்வதற்காக சிதம்பரத்துக்கு இவரை குரு அனுப்பிவைத்தார். சமூக நலனில் அக்கறை கொண்ட அனைத்து சமூக மக்களும் இவருக்கு உதவினர். பணமாகவும், நிலமாகவும் தானமாக வழங்கினர். 1916-ம் ஆண்டு நந்தனார் கல்விக் கழகத்தைத் தொடங்கினார். இலங்கை, பர்மா, ரங்கூன், மலேசியா, சிங்கப்பூர் சென்று உரையாற்றி நிதி திரட்டினார்.

* ஒரு சில ஆண்டுகளிலேயே மேலும் ஏழு ஊர்களில் இதன் கிளைகளைத் தொடங்கி, அங்கெல்லாம் மாணவர்களுக்கு படிப்பு, ஆன்மிக ஞானம், தொழிற்கல்வி, தமிழிசை அனைத்தையும் போதித்தார். 1929-ல் மாணவர் இல்லம், 1930-ல் மாணவியர் விடுதியையும் தொடங்கினார்.

* வ.உ.சி.யிடம் திருக்குறள், தமிழ் இலக்கியங்களைக் கற்றார். மெய்கண்ட சாத்திரம், ஆதி ரகசியம், அஷ்ட பிரபந்தம், திருவெண்பா, கம்பராமாயணம் உள்ளிட்ட நூல்களை ஆழ்ந்து கற்றார். தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார்.

* நாரத சூத்திரத்தைத் தமிழில் ‘யார் பிராமணன்’ என்ற பெயரில் மொழிபெயர்த்தார். ‘நமது தொன்மை’ என்ற நூல் எழுதினார். ‘பரஞ்சோதி’ என்ற இதழை நடத்தி வந்தார். ஆக்ஸ்போர்ட் என்ற அச்சகத்தையும் நடத்தினார்.

* தனது சமூக மக்களின் நலனுக்காக அரசியலிலும் ஈடுபட்டார். சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். ஏறக்குறைய 34 ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக செயல்பட்டார். தன் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமைகளையும் நிவாரணங்களையும் பெற்றுத் தந்தார்.

* இவரது அயராத முனைப்பாலும் மற்றும் பலரது போராட்டங்களாலும் 1947-ல் அனைவரும் ஆலயத்துக்குச் சென்று வழிபடலாம் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்ட சுவாமி சகஜானந்தர், 1959-ம் ஆண்டு 69-வது வயதில் மறைந்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x