கென்யாவும் தீவிரவாதமும்!

கென்யாவும் தீவிரவாதமும்!
Updated on
1 min read

கென்யாவின் தலைநகர் நைரோபியில் இஸ்ரேலுக்கு சொந்தமான வணிக வளாகத்தில், அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் ஏறக்குறைய 62 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

சோமாலியாவை சேர்ந்த அல் ஷபாப் இயக்கத்தை ஒடுக்குவதற்காக ஆப்பிரிக்க ராணுவத்திற்கு உதவிடும் கென்யா ராணுவத்தின் நடவடிக்கைக்கு பதிலடியாக, இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறது அல் ஷபாப்.

அதிலும் முஸ்லிம் - முஸ்லிம் அல்லாதவர்கள் என்று பிரித்துப் பார்த்து, முஸ்லிம் அல்லாதவர்களை மட்டும் கொன்று குவித்துள்ளனர் இந்த மாபாதகர்கள். நிச்சயம் இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒரு துன்பியல் சம்பவம்.

இதில் சம்பந்தப்பட்ட மனித உருவில் இருக்கும் மிருகங்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. இதில் மனிதாபிமானமுள்ள யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

உலகில் எங்கு இத்தகைய சம்பவங்கள் நடந்தாலும் இஸ்லாத்தின் பேரும் சேர்த்தே உருட்டப்படுகிறது. இஸ்லாம் இப்படிப்பட்ட தீவிரவாதத்தை ஆதரிக்கிறதா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கும்.

இஸ்லாத்தின் பெயரால், இஸ்லாமிய பெயர் தாங்கிகளால் நடத்தப்படும் இந்த கொடூரங்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த விதத்திலும் சம்பந்தமில்லை. போர்க்களத்தில் கூட இஸ்லாம் சில யுத்த தர்மங்களை விதித்திருக்கிறது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், மத குருமார்கள் போன்றவர்களைக் கொல்ல இஸ்லாம் தடை விதித்திருக்கிறது.யுத்த காலங்களிலேயே இந்த சட்டம் என்றால் மற்ற நேரங்களில் எப்படி இருக்க வேண்டும்?

இவ்வுலகில் யாராவது அநியாயமாக ஒருவரை கொலை செய்தால், அது இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் கொன்றதற்கு சமமாகும் என்று எச்சரித்துள்ளார் நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள். மேலும் கொலை என்பது பெரும்பாவங்களில் ஒன்றாகும் என்று சொல்கிறது இஸ்லாம்.

அன்பையும், சகோதரத்துவத்தையும் போதிக்கும் இஸ்லாமில் இத்தகைய தீவிரவாதத்திற்கு துளியும் இடமில்லை. இப்படி காக்கா, குருவிகளை சுடுவதுபோல் மானாவாரியாக உயிர்களை கொன்று குவிக்க ஒரு போதும் இஸ்லாம் சொல்லவில்லை. அப்படி செய்பவர்கள் இஸ்லாமியர்களும் இல்லை.

கட்டுரையாளரின் வலைப்பதிவுத் தளம> http://www.rahimgazzali.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in