

இந்தியப் பொதுவுடைமை அரசியல்வாதிகளின் முன்னோடி
சுதந்திரப் போராட்ட வீரரும் இந்தியப் பொதுவுடைமை அரசியல்வாதிகளின் முன்னோடி எனப் போற்றப்படுபவருமான ராம் மனோகர் லோகியா (Ram Manohar Lohia) பிறந்த தினம் இன்று (மார்ச் 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* உத்தரப்பிரதேச மாநிலம், அம்பேத்கர் மாவட்டத்தில் உள்ள அக்பர்பூரில் பிறந்தார் (1910). தந்தை, காங்கிரஸ் கட்சித் தலைவர். மகாத்மா காந்தியின் தீவிர விசுவாசி.
* 10 வயதில் அப்பாவுடன் சேர்ந்து சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டார், 1928-ல் மாணவராக இருந்த இவர், சைமன் கமிஷனை எதிர்த்து தன் பகுதியில் போராட்டம் நடத்தினார். அடுத்த ஆண்டு காசி இந்து பல்கலைக்கழகத்தில் இடைநிலைப் படிப்பை முடித்தார்.
* கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததும் மூன்றே மாதங்களுக்குள் ஜெர்மன் மொழி கற்றார். பெர்லினில் ‘உப்பு சத்தியாக்கிரகம்’ என்ற தலைப்பில் காந்தியின் சமூகப் பொருளாதாரக் கோட்பாடுகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
* 1932-ல் இந்தியா திரும்பினார். இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். 1934-ல் காங்கிரஸ் கட்சிக்குள் இயங்கும், காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியைத் தொடங்கினார். காங்கிரஸ் சோஷலிஸ்ட் இதழில் தொடர்ந்து பல அரசியல் கட்டுரைகள் எழுதினார்.
* 1936-ல் காங்கிரஸ் கமிட்டியின் வெளிவிவகாரத் துறையின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார். ‘ஹரிஜன்’ இதழில் ‘இன்றைய சத்தியாக்கிரகம்’ என்ற கட்டுரையை எழுதினார். இதில் உள்ள கருத்துகள் அரசுக்கு எதிராக இருப்பதாகக் குற்றம்சாட்டி, அரசு இவரை சிறையில் அடைத்தது. ஒரே ஆண்டில் விடுதலையானார்.
* பல்வேறு போராட்டங்களில் முக்கியத் தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டதால் கட்சியின் தலைமைப் பொறுப்பேற்றார். பம்பாயில் ‘காங்கிரஸ் ரேடியோ’ என்ற ரகசிய வானொலியை மூன்று மாதங்கள் வெற்றிகரமாக நடத்தினார். காங்கிரஸ் மாதப் பத்திரிகையான ‘இன்குலாப்’ இதழை, அருணா ஆசப் அலியுடன் இணைந்து வெளியிட்டார். இந்த நடவடிக்கைகளால் எரிச்சலடைந்த பிரிட்டிஷ் அரசு இவரைக் கைது செய்யத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டது.
* பல்வேறு மாறுவேடங்களில் முதலில் கல்கத்தாவுக்கும் பின்னர் நேபாளத்துக்கும் சென்றார். பம்பாய் திரும்பியதும் கைது செய்யப்பட்டு, லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். காந்திஜியின் தலையீட்டால் இவரும் ஜெயப்பிரகாஷ் நாராயணனும் விடுதலையானார்கள்.
* நாடு விடுதலை பெற்ற பிறகு மூண்ட மதக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைதி திரும்பப் பாடுபட்டார். மக்களே கால்வாய்கள், சாலைகளை அமைக்க வேண்டும் எனக் கூறிய இவர், மக்களை ஒன்று திரட்டி பாணியாரி நதியின் குறுக்கே அணை கட்டினார். அதற்கு ‘லோகியா சாகர் அணை’ எனப் பெயர் சூட்டப்பட்டது.
* மக்களுக்கான திட்டங்கள் சரியாக மக்களைப் போய்ச் சேர்வதில்லை என்பதை விளக்கும் ‘தீன் அணா பந்தரஹ் அணா’ என்ற இவரது நாடாளுமன்றப் பேச்சு மிகவும் பிரசித்தம். மக்களிடம் அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும் என்பதற்காக ‘ஹிந்த் கிசான் பஞ்சாயத்’ என்ற அமைப்பை நிறுவினார்.
* ‘ஐதராபாத் நவகிந்த்’, ‘ஃபாரின் பாலிசி’, ‘ஃபிராக்மன்ட்ஸ் ஆஃப் ஏ வேல்ர்ட் மைன்ட்’, ‘மைத்ரவாணி’, ‘இந்தியா, சீனா அன்ட் நார்த்தன் ஃபிரான்டீஸ்’ உள்ளிட்ட பல நூல்களைப் படைத்துள்ளார். இந்திய அரசியல் வரலாற்றின் மகத்தான ஆளுமைகளில் ஒருவரான ராம் மனோகர் லோகியா 1967-ம் ஆண்டு 57-வது வயதில் மறைந்தார்.