மெட்றாஸ் அந்த மெட்ராஸ் 28: அம்பத்தூர் ஆவடியை தொழில்மயமாக்கியவர்!
மெட்றாஸ் மாநகரத் தொழிலதிபர் களில் ஏ.எம்.எம். முருகப்ப செட்டியார் குறிப்பிடத்தக்க முன்னோடி. திருவொற்றியூர் பகுதியில் தான் முருகப்பா தொழில் குழுமம், ‘அஜாக்ஸ்’ என்ற நிறுவனத்தின் மூலம் தொழில்துறையில் காலடி எடுத்து வைத் தது. அந்த நிறுவனம் பிறகு ‘கார் போராண்டம் யூனிவர்சல்’ என்று அழைக் கப்படலாயிற்று. அதற்குப் பிறகு அதை விட மிகப் பெரிய தொழில் நிறுவனங் களை அம்பத்தூர், ஆவடிப் பகுதியில் தொடங்கி மாநிலத்தின் தொழில் வளத்தைப் பெருக்கினார் அவர். அப் பகுதியில் அவர் தொடங்கியது நுகர் வோரால் நேரடியாகப் பயன்படுத் தப்படும் நுகர் பொருட்களைத் தயா ரிக்கும் காத்திரமான நிறுவனங்களாக விளங்கின. சைக்கிள்கள், சைக்கிள் டயர்களில் பயன்படுத்தப்படும் டியூபுகள் மற்றும் சைக்கிளில் பொருத்தப்படும் இதர சாமான்களைத் தயாரிக்கத் தொடங்கினர்.
‘அஜாக்ஸ்’ நிறுவனத்தை வட சென்னையில் தொடங்கியதால் அடுத்த ஆலையை (1950-களின் தொடக்கம்) தென் சென்னையிலோ சென்னையின் மேற்குப் பகுதியிலோ தொடங்க வேண்டும் என்று முருகப்பாவும் அவருடைய சகோதரர் அருணாசலமும் தீர்மானித்தனர். சுதந்திர இந்தியாவில் தொழிற்சாலைக்கான கூட்டுத் தயாரிப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு டி.ஐ. நிறுவனத்தை அமைப்பதற்கான இடத்தைத் தேடும் படலம் தொடங்கியது. சில வார தேடுதலுக்குப் பிறகு அம்பத்தூர் ரயில் நிலையத்துக்கு அருகில் நன்கு பராமரிக்கப்பட்ட மாந்தோப்பு ஒன்றை, உரிய இடம் என்று அடையாளம் கண்டனர். மறுக்க முடியாத அளவுக்குப் பெருந்தொகையை அந்த இடத்துக்காக அளிக்க முன்வந்ததால் மாந்தோப்பு உரிமையாளர்கள் விற் பதற்கு சம்மதித்தனர். நிலத்தின் ஆவணங்களைப் பரிசீலித்தபோது அவர்கள் அரசு இடத்தை குத்தகைக் குப் பெற்று மாந்தோப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது.
தொழில் வளர்ச்சிதான் அப்போதைய மதறாஸ் அரசின் குறிக் கோளாக இருந்ததால் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை இது தொடர்பாக சகோதரர்கள் அணுகினர். அந்த 56 ஏக் கருக்கும் அரசுத் தரப்பில் என்ன விலை மதிப்பு இருக்கிறதோ அதைக் கொடுத்துவிட்டு நிலத்தை வாங்கிக் கொள்ளுங்கள், விளைந்த மாமரங் களுக்கு ஒரு மதிப்பைக் கணக்கிட்டு அந்தத் தொகையை மாமரங்களைச் சாகுபடி செய்தவர்களுக்குக் கொடுங்கள் என்று ஆட்சியர் கூறினார். நிலங்களுக்கு அரசு நிர்ணயித்த விலை, மாமரங்களை நட்டவர்கள் கேட்ட விலையைவிட மிகவும் குறைவு!
மாந்தோப்பை நிர் வகித்த சகோதரிகளுக்கு தான் முதலில் கொடுத்த வாக்கை மீற முருகப்பா விரும்பவில்லை. எனவே மாந்தோப் பைப் பராமரித்த சகோதரிகளுக்கு மொத்தமாக ஒரு லட்ச ரூபாயையும் அரசாங்கத்துக்கு 78,000 ரூபாயையும் கொடுத்து நிலங்களைப் பத்திரப் பதிவு செய்துகொண்டார். 1949 செப்டம்பரில் தொழிற்சாலைக்கான பூமி பூஜை, கொட்டும் மழையில் நடந்தது. உலகப் புகழ் பெற்ற சைக்கிள் நிறுவனம் அங்கே உதயமாயிற்று.
சைக்கிள் ஃபேக்டரி தொடங்கியது முதலே நன்கு உற்பத்தியும் விற்பனை யும் கண்டு வேகமாக வளர்ந்தது. அதன் பல்வேறு தேவைகளில் முருகப்பா சகோதரர்கள் அக்கறை செலுத்தி அதை கண்போல் காத்தனர். டியூப் இன்வெஸ்ட் மென்ட்ஸ் நிறுவனத்துடனான ஒத்துழைப் பும் நன்றாக இருந்ததால் டியூப் புராடக்ட்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத் தைத் தொடங்குவதற்கான பேச்சுகள் அடுத்தபடியாகத் தொடங்கின. அந்த ஆலை 1955-ல் தொடங்கப்பட்டாலும் அதற்கான நிலங்களைத் தேடும் பணி 1954-ல் தொடங்கியது.
ஆவடியில் மலாயா அரசின் குடியேற்ற முகாம் ஒன்று பயன் படுத்தப்படாமல் இருந்தது. அது உகந்த இடமாகப் பார்க்கப்பட்டது. மலாயாவில் தோட்டத் தொழிலுக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் இந்தியத் தொழி லாளர்களைத் தங்க வைத்து அழைத் துச் செல்ல அந்த முகாம் பயன் படுத்தப்பட்டது. அப்போது மலாயா சுதந்திரத்தைப் பெறும் நிலையில் இருந்ததுடன் கொந்தளித்துக் கொண்டும் இருந்தது. இனி மலாயாவுக்கு இந்தியாவில் இருந்து தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டிருந்ததால் அந்த முகாம் மூடப்பட்ட நிலையில் இருந்தது.
அந்த முகாமுக்குப் பொறுப்பாக இருந்தவரை முருகப்பா சகோதரர்கள் அணுகினர். அவரோ, “இந்திய அரசாங்கம் 20 லட்ச ரூபாய்க்குக் கேட்டே, மலாயா அரசு தரவில்லை” என்று கூறினார். ஆவடியில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு நடைபெறப் போகிறது, தங்களுடைய கட்டிடங்களில் ஒன்றில் பிரதமர் நேரு தங்கப் போகிறார், எனவே இந்த இடத்தின் விலை மேலும் அதிகரிக்குமே தவிர குறையாது என்று அவர் பிகு செய்துகொண்டார். சரி ஆவடி மாநாடு முடியட்டும், காத்திருப்போம் என்று கூறிவிட்டார் முருகப்பா.
ஆவடி காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிறகு அந்த இடத்தை விலைக்குக் கேட்டு யாரும் வரவில்லை. உடனே முருகப்பா சகோதரர்கள் தங்களுடைய நண்பர்களான முதலமைச்சர் காமராஜ், தொழிலமைச்சர் ஆர்.வெங்கட்ராமன், நிதியமைச்சர் சி. சுப்பிரமணியம் ஆகி யோரை அணுகி, ஆவடியில் தாங்கள் மேலும் ஒரு தொழிற்சாலையைத் தொடங்க திட்டமிட்டிருப்பதைத் தெரி வித்து, அந்த இடம் தங்களுடைய தேவைக்கும் மேல் பெரிதாக இருப்பதால் மாநில அரசு அதை விலைக்கு வாங்கி, அதில் ஒரு பகுதியைத் தங்களுக்குத் தர முடியுமா என்று கேட்டனர். கட்டிடம் கட்டப்பட்ட இடத்தை அரசு எடுத்துக் கொண்டு எஞ்சிய பகுதியைத் தண்ணீர் வசதியுடன் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அரசு அதை ஏற்றதுடன் மலாயாவிலும் அரசுக்கு நன்கு அறிமுகமான முருகப்பாவே, தமிழ்நாடு அரசுக்காக பேச்சு நடத்தி நிலத்தை வாங்கித் தர வேண்டும் என்று பதிலுக்குக் கேட்டுக்கொண்டது. ராஜாஜி அரசு முன்னர் கொடுக்க முன்வந்த 20 லட்ச ரூபாய்க்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்ளும்படியும் அறிவுறுத்தியது.
மலாயா அரசுடன் பேசிய முருகப்பா, “ஒரு சொத்துக்கு எப்போது மதிப்பு என்றால் அதை வாங்குவதற்கு ஆள்கள் போட்டி போட வேண்டும். உங்கள் இடத்தை வாங்குவதற்கு இப்போது யாரும் இல்லை. அத்துடன் அந்த இடத்தைப் பராமரிக்க நீங்கள் ஆட்களை நியமித்து அவர்களுக்குச் சம்பளமும் கொடுத்துக் கொண்டு செலவழித்துக் கொண்டிருக்கிறீர்கள், எனவே தமிழக அரசுக்கு விற்றுவிடுங்கள்” என்று பேசி அந்த இடத்தை 15 லட்ச ரூபாய்க்கு பேரம் பேசி முடித்தார். நிலத்தின் விலையையும் முருகப்பா குறைத்துவிட்டதால் மதறாஸ் அரசுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தொழிற் சாலை அமைக்க உங்களுடைய தேவைக்கேற்ற இடத்தை எடுத்துக் கொண்டு எஞ்சியதை அரசுக்குக் கொடுங்கள் என்று தொழிற்சாலை அமைக்க இடம் தந்தது. இடத்தின் அளவுக்கேற்ப இருவரும் விலையைப் பகிர்ந்து கொண்டனர். இப்படிப்பட்ட முன் முயற்சிகளால் தொழில் வட்டாரங்களில் முருகப்பா மிகவும் பாராட்டப்பட்டார். இதனாலேயே 1965-ம் ஆண்டு மெட்றாஸ் வர்த்தக சபையின் முதல் இந்தியத் தலைவராக முருகப்பா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- சரித்திரம் பேசும்…
