Published : 29 Jun 2016 05:16 PM
Last Updated : 29 Jun 2016 05:16 PM

யூடியூப் பகிர்வு: பொரிவரை- தென்னிந்தியாவின் மிகப்பெரிய பாறை ஓவியம்!

நீலகிரி மாவட்டத்தின் இதயப்பகுதி கோத்தகிரி. அங்கிருந்து 40 கி.மீ. தொலைவில் இருக்கிறது பொரிவரை பகுதி. அங்கே சுமார் கி.மு. 2000 வாக்கில் மனித வாழ்வியல் குறித்த வரலாற்று ஆதாரங்கள் பாறைகளில் ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பாறை ஓவியங்கள் அனைத்தும் 53 மீ நீளம், 15 மீ அகலத்தில் ஒரே பாறையில் வரையப்பட்டுள்ளன.

இதில் மனித உருவங்கள் நடனமாடும் வகையிலும், போர்க் கருவிகளுடன் சண்டையிடும் காட்சிகளும், யானை மீது போர்க் கருவிகளுடன் அமர்ந்திருக்கும் காட்சிகளும் வரையப்பட்டுள்ளன. காட்டெருமைகள் நகர்வது போலவும், மனிதத்தலை குதிரை உடல் கொண்ட கடவுள் உருவம் நிற்பது போன்ற ஓவியங்களும் இருக்கின்றன. அத்தோடு குதிரை, குரங்கு, மாடு, காட்டுப் பன்றி, எருது, மான், ராட்சத பல்லி, மீன் போன்ற உருவங்களும் காணப்படுகின்றன.

இப்பாறைகளில் 4500 ஆண்டுகளுக்கு முன்பு இடை கற்காலத்தில் மனிதன் கால்நடைகளுடன் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள், பாறைகளில் ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் பழங்கால மனிதர்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம், பாரம்பரியம் குறித்த சான்றுகள் தெரியவருகின்றன. இதுவே தென்னிந்தியாவின் மிகப்பெரிய பாறை ஓவியம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் இவற்றைப் பாதுகாப்பதற்காக எந்த ஏற்பாடும் செய்யப்பட்டிருப்பது போலத் தெரியவில்லை. பொதுமக்களின் கிறுக்கல்களால் ஓவியங்கள் பாழாகி வருகின்றன. நம் கண் முன்னாலேயே பாரம்பரிய ஓவியங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன.

பாறை ஓவியப் பயணக் காணொலி