

கேரள முற்போக்கு எழுத்தாளர்
மலையாள முற்போக்கு எழுத்தாளரும், ஏராளமான சிறுகதைகள், நாவல்கள் படைத்தவருமான உறூப் (Uroob) பிறந்த தினம் இன்று (ஜூன் 8). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# கேரள மாநிலம் பொன்னணியில் (1915) பிறந்தார். இயற்பெயர் பி.சி.குட்டிகிருஷ்ணன். சமஸ்கிருதம் கற்றார். மேல்நிலைக் கல்வி முடித்த பிறகு, கண்போன போக்கில் தென் னிந்தியா முழுவதும் சுற்றியவர், 6 ஆண்டுகள் கழித்து ஊர் திரும்பினார்.
# இலக்கியவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்களுடன் இலக்கிய விவாதங்களில் கலந்துகொண்டார். ‘காலமண்டலம்’ இதழில் சிறிது காலம் வேலை பார்த்தார். திருவனந்த புரத்தில் ‘குங்குமம்’, கோட்டயத்தில் ‘பாஷாபோஷிணி’ பத்திரிகைகளில் ஆசிரியராக பணியாற்றினார். கணக்கர், மொழிபெயர்ப்பாளர், ஆசிரியர், குமாஸ்தா என பல்வேறு வேலைகளில் ஈடுபட்டுவந்தார்.
# மலையாள இலக்கியத்தின் தூண்களாகப் போற்றப்படும் பஷீர், தகழி, கேசவ்தேவ் உள்ளிட்டோருடன் இணைந்து முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தை தொடங்கினார். கோழிக்கோடு அகில இந்திய வானொலி நிலையத்தில் வேலை செய்தபோது, இசையமைப்பாளர் கே.ராகவன் குறித்து ஒரு கட்டுரை எழுதினார்.
# சக ஊழியரான அவரைப் பற்றி எழுதும்போது சொந்தப் பெயரைப் பயன்படுத்துவது சரியாக இருக்காது என்று கருதி ‘உறூப்’ என்ற புனைப்பெயரை சூட்டிக்கொண்டார். அதுவே இலக்கிய உலகில் இவரது பெயராக நிலைத்துவிட்டது. உறூப் என்றால் பாரசீக மொழியில் ‘நிரந்தர இளமை’ என்றும், அராபிய மொழியில் ‘விடியல்’ என்றும் பொருள்.
# ஏராளமான கவிதைகள், சிறுகதைகள், புதினங்கள், குழந்தைகளுக் கான சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது முதல் கதைத் தொகுப்பு ‘நீர்ச்சுழிகள்’ என்ற பெயரில் வெளிவந்தது. ‘பிறன்னாள்’ என்ற கவிதைத் தொகுப்பும் வெளிவந்தது. பல நாடகங் களிலும் நடித்துள்ளார். பல குரலில் பேசுவதிலும் திறன் பெற்றவர்.
# இவரது படைப்புகளில் உரையாடல்கள் தனிச்சிறப்புடன் இருக்கும் என்பதால், ‘உரையாடல்களின் மாஸ்டர்’ எனப் போற்றப்பட்டார். கதைக்கான கருவைத் தேடி மருத்துவமனை, கடைகள், நடைபாதை குடியிருப்புகள் என பல இடங்களுக்கும் சுற்றித் திரிவார்.
# ‘உம்மாச்சு’ என்ற நாவலுக்காக, தொடர்ந்து நீதிமன்றத்துக்குச் சென்று வழக்குகள், நீதிமன்ற நடைமுறை உள்ளிட்ட விவரங் களைத் தெரிந்துகொண்டார். 1958-ல் வெளிவந்த ‘சுந்தரிகளும் சுந்தரன்மாரும்’ நாவலுக்கு கேந்திர சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. 70-களின் பிற்பகுதியில் இது தமிழில் மொழிபெயர்க் கப்பட்ட பிறகு, தமிழகத்திலும் புகழ் பெற்றார். இவை இரண்டும் மலை யாள இலக்கியத்தின் தலைசிறந்த நூல்களாகக் கருதப்படுகின்றன.
# சாகித்ய அகாடமி தலைவராகப் பணியாற்றினார். மலையாள மனோரமா வார இதழில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். மதராஸ் அரசு விருது 3 முறை, ஆஷன் நூற்றாண்டு விருது, கேரள சாகித்ய அகாடமி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். ஏறக்குறைய 40 நூல்களைப் படைத்துள்ளார்.
# மலையாளத் திரையுலகின் மைல்கல் திரைப்படமான ‘நீலக்குயில்’ திரைப்படத்துக்கு பி.பாஸ்கரனுடன் இணைந்து திரைக்கதை எழுதினார். இது தேசிய அளவில் பாராட்டு பெற்றது. சிறந்த பிராந்திய மொழி திரைப்படத்துக்கான குடியரசுத் தலைவர் பதக்கத்தையும் பெற்றது.
# முற்போக்கு எழுத்தாளரும், மலையாள எழுத்துலகில் குறிப்பிடத்தக்க இலக்கியப் படைப்புகளைப் படைத்தவருமான உறூப், மலையாள மனோரமா இதழில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது 64-வது வயதில் (1979) மறைந்தார்.