Last Updated : 22 Mar, 2017 03:25 PM

 

Published : 22 Mar 2017 03:25 PM
Last Updated : 22 Mar 2017 03:25 PM

யூடியூப் பகிர்வு: தூய்மைக்கேட்டை விரட்டச் சொல்லும் அடையாளம் குறும்படம்

நாம் வாழும் இடம் சுத்தமாக இருக்கவேண்டும்... நமது சுற்றுப்புறம் தூய்மையாக இருக்கவேண்டும். இதனால் நமது குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழவேண்டும் என்கிறது மூன்றரை நிமிடக் குறும்படமான 'அடையாளம்'.

நமக்கு வரும் பெரும்பாலான நோய்கள் நம்மைச்சுற்றியுள்ள சுகாதாரக் கேடுகளால்தான் உருவாகிறது. கிராமங்களில் கழிப்பறை உபயோகிக்கும் விழிப்புணர்வற்ற நிலை ஒருவகை சுகாதாரக் கேடு என்றால் நகரங்களில் கண்ட இடத்தில் கழிவுப்பொருள்களை கொட்டுவதும் நகரப்பெருக்கத்தினால் கழிவுநீர் செல்ல உரிய கால்வாய்கள் அமைக்காததும் பெரும் சுகாதாரக்கேட்டை உருவாக்கி வருகின்றன.

இக்குறும்படத்தில் முக்கியமானதாக நாம் உணர்வது குழந்தைகள் சக குழந்தைகளிடம் அவமானப்படுவது. குழந்தைகள் எல்லாம் கூடி விளையாடும்போதுகூட பேதங்கள் சுற்றுத்தூய்மைப் பற்றியதாகவே இருக்கிறது... ''டேய் பால் டாய்லெட்ல விழுந்துடிச்சிடா இதுக்குத்தான்டா உங்க தெருவுக்கெல்லாம் விளையாட வர்றதில்லை.''

இதுமட்டுமில்லை. ''இங்கே பெயிண்டர் செல்வராஜ் வீடு எங்கிருக்குதுங்க...?'' ''இப்படியே ஸ்ட்ரெயிட்டா போனீங்கன்னா பெரிய சாக்கடை வரும்... அதுல ரைட் திரும்புனா பெரிய குப்பமேடு இருக்குது.. அதுக்கு பக்கத்துலதான் அவரு வீடு....'' ''தாத்தா இந்த பசங்க வீடெல்லாம் குப்பமேட்லதான் இருக்கு... இவங்களுக்குத் தெரியும் கூப்பிட்டுப் போங்க தாத்தா....'' என முகவரிசுட்டிக் காட்டுவதும்கூட தூய்மைக்கேட்டை குத்திக்காட்டும் அடையாளமாக அமைந்துவிடுவதை போகிறபோக்கில் கூர்மையான வசனங்களில் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதேநேரத்தில் இதெல்லாம் அரசாங்கத்தின் பணிகள் அல்லவா? கழிப்பறை வசதிகூட இல்லாத குழந்தைகளுடன் விளையாட வருவதற்கே சலித்துக்கொள்ளும் நிலையில் மக்களை அப்படியே வைத்திருப்பதில் யாருடைய பங்கு அதிகம் போன்ற கேள்விகள் எழுவதை தடுக்கமுடியவில்லை.

தெருக்குழந்தைகளாகவும் பகுதி மக்களாகவும் வருபவர்கள் இயல்பாக நடித்துள்ளார்கள். தெளிவான ஒளிப்பதிவு, யதார்த்தமான காட்சிகள், சின்னச்சின்ன்ன ப்ரேம்களில் காட்சிப்படுத்தல்கள், கூர்மையான வசனங்கள் என இயக்குநர் எஸ்.ராஜாவின் இயக்கம் பாராட்டத்தகுந்ததாக அமைந்துள்ளது.

மக்களுக்கும் இதில் பொறுப்பு உண்டு குழந்தைகள் மனதில் பதிகிற விதமாக மாற்றங்களை உருவாக்கமுடியும் என மூன்றரை நிமிடத்திற்குள்ளாகவே காட்சிகளை அமைத்துள்ள விதம் எப்படி என்பதை நீங்களும் பாருங்களேன்.

நீங்கள் காண விரும்பும் மாற்றத்தை உங்களிடமிருந்து தொடங்குங்கள் என்ற காந்தியின் கூற்றுதான் இப்படத்தின் அடிநாதம்.