Last Updated : 27 Feb, 2014 12:00 AM

 

Published : 27 Feb 2014 12:00 AM
Last Updated : 27 Feb 2014 12:00 AM

நீலக்குயிலும் இசைராஜனும்

இமைகள் திறக்க மறுக்கும் காலையில், மெலிதான உறக்கத்தில் அசங்கும் குழந்தையின் கையாய் தொட்டது அந்தப் பாடல். சின்ன ஸ்வர வரிசையில் ஆரம்பித்த அந்த பாடலின் முனைகளில் கட்டியிருந்த மயிலிறகுகள் வீசிய கவரியில் குளிர்ந்த காற்று விலக்கியது நித்‘திரையை’!. ‘மகுடி’ படத்தில் வரும் ‘நீலக்குயிலே’ பாடலில் கேட்கும் குரல்களின் வசீகரம், சுகமான மலைச்சாரலில் நகரும் பேருந்தின் ஜன்னல் பயணமாய் மெட்டின் மிதமான வேகம், குளிர் நேர வெந்நீர் குளியலாய் இறங்கியது மனசை வழுக்கி கொண்டு.

வாழ்வதற்கான அர்த்தங்கள் எத்தனையோ இருக்கிறது அதில். மகோன்னதமான ஒரு விஷயம், இசையறிதல் அல்லது இளையராஜா அறிதல்.

திருவிழாக்காலங்களில், கல்யாணத்தில், சீமந்தம், காதுகுத் தில் என்று எல்லா விசேஷ காலங்களுக்கும், எழுபதின் இறுதியில் கேட்ட ‘கேட்டேளா அங்கே அத...’ என்று சிவக்குமாரின் வசனத்துடன் ஆரம்பாகும் பாடல், சுழலும் தட்டில் வெள்ளி விளிம்பென வந்து முகம் காட்டும் ‘கண்ணன் ஒரு கைக்குழந்தை’ போல் முத்துக்கள் எத்தனையோ. இங்கு தொடப்போகும் பாடல்கள் இளையராஜாவின் தேர்வாகவும் இருந்த சில பாடல்களும் இருக்கும்.

ஒரு முறை ஒரு வார இதழில் இளையராஜாவிற்குப் பிடித்த பத்து பாடல்களை பட்டியலிடச் சொன்னார்கள். அதில் அவரும் பத்து பாடல்களைச் சொல்லியிருந்தார். எனக்கு அந்த பத்தும் ஞாபகம் இல்லை இப்போது? இதை அவரே “இது இப்போதைக்கு ஞாபகம் இருப்பது நாளை கேட்டால் வேறு சொல்லலாம்” என்று கூறினார். அது எனக்கும் பொருந்தும்.

மறுபடியும், நாம் பாடலின் தொழில்நுட்பம் குறித்தோ, அல்லது இந்த பாடல் அமைந்த ராகம், சிக்கலான ஸ்வரக்கட்டுமானம் குறித்தோ பேசப்போவதில்லை. ஒரு சாமான் யனின் இசை ரசனை அல்லது இசையை அறிந்து கொள்ள முயல்பவனின் முனைப்பு மட்டுமே இங்கு பிரதானம். பெயரறியா பறவைகளின் பாடல்கள் மனதை நனைக்கும்போது அதைப் பகுத்தறியாது அந்த நொடி நேர மயக்கம் பற்றி மட்டுமே தங்கிவிடும்.

‘கபகரிசா...’ என்று ஆரம்பமாகும் அந்த பாடலின் வார்த்தை பிரயோகங்களோ அல்லது அதன் பொருட்செறிவோ அத்தனை சிறப்பில்லை என்றாலும், எஸ்.பி.பி. மற்றும் ஜானகியின் குரல்களில் இருக்கும் வசீகரம் முக்கியமானது. இதன் விசேஷமே... இளையராஜாவின் மெட்டும், அதில் இருக்கும் சின்ன சந்தங்களும், குழலிசையும், வீணை ஒழுகி நிரப்பும் இசையும் தான். இந்தப் பாடலின் அழகே, சிறப்பே அதன் எளிமையும், பாடல் முழுக்க பயணிக்கும் கர்னாடக இசை பாணியும் தான்.

மலையமாருதம், ரீதி கௌளை என்று பலவாறு ராகம் பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் பேசிக்கொள்ளட்டும். நமக்கென்ன! இந்தப் பாடலைக் கேட்டு ரசிக்கும் புத்தி போதும். ஒரு ஆழமான பசும் பள்ளத்தாக்கு, அல்லது ‘ஹோ’ என்று கொட்டுற அருவியைப் பார்க்கும் போது, ‘ஆ’ என்று ஒரு உணர்வு வருமே அது போதும் நமக்கு. அந்த நொடி வாழ்க்கை போதும் எதையும் கொண்டாட...

‘நீலக்குயிலே உன்னோடு தான்’ என்று தொடங்கும் அந்த பாடலை எங்கு கேட்டாலும் நின்று விட தோன்றுகிறது. இதன் மேல் உள்ள ஈர்ப்பிற்கு முழு காரணமும் இளையராஜாவாகத் தான் இருக்க முடியும். குரலிசை தேர்வும், மெட்டும், வாத்தியக்கலவையும் உன்னதமாய் இருப்பதற்கு ‘நானன்றி யார் வருவார்’ என்று வந்து நிற்பது ராஜா தான்.

மிகச்சிறந்த பெண் குரலிசை பாடல்கள் இளையராஜாவின் இசையில் இருந்து வந்தவைதான் என்று சத்தியம் செய்யமுடியும் எல்லோராலும். பழைய சுசீலாவின் பாடல்கள், ஜிக்கி, ஜமுனா ராணி, லீலா, ராஜேஸ்வரி என்று பெரிய பாடகர்கள் இருந்தும் மிகச்சிறந்த பாடல்கள் எழுபதுகளின் ஆரம்பத்திலும், எண்பதுகளின் முன் பாதியிலும்தான் இருந்தது என்று உறுதியாக சொல்ல முடியும்.

ஜானகி, உமா ரமணன், சுசீலா, சசிரேகா, ஜென்சி என்று வித்தை காட்டிய மாயக்காரன் இளையராஜா. ‘நிழல்கள்’ படத்துக்காக இசைக்கப் பட்ட ‘தூரத்தில் நான் கண்ட உன் முகம்’ என்ற படத்தில் இடம்பெறாத இந்த பாடல், படமாக்க வேண்டிய சிக்கலினால் கூட கை விடப்பட்டிருக்கலாம். பாலுமகேந்திரா, மகேந்திரன் வரிசையில் இன்னுமொருவர் வேண்டும் ராஜாவின் பாடலைப் படமாக்கும் விதம் பற்றி பேச!​

ராகவன் சாமுவேல்,வலைஞர் - http://koodalkoothan.blogspot.in/

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x