Published : 06 May 2017 10:25 AM
Last Updated : 06 May 2017 10:25 AM

விக்டர் கிரிக்னார்டு 10

நோபல் பெற்ற பிரான்ஸ் வேதியியலாளர்

நோபல் பரிசு பெற்ற பிரான்ஸ் வேதியியல் அறிஞர் பிரான்சுவா அகஸ்டே விக்டர் கிரிக்னார்டு (Francois Auguste Victor Grignard) பிறந்த தினம் இன்று (மே 6). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* பிரான்ஸின் செர்போர்க் நகரில் (1871) பிறந்தார். தந்தை படகு தயாரிப்பாளர். உள்ளூர் பள்ளிகளில் தொடக்கக் கல்வி பயின்றார். பின்னர், உதவித்தொகை பெற்று, எகோலே நார்மலே சிறப்பு பள்ளியில் பயின்றார். அறிவியலில், குறிப்பாக வேதியியலில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.

* லியோன் பல்கலைக்கழகத்தில் கணிதப் படிப்பில் சேர்ந்தார். கணிதத்தில் இவருக்கு அவ்வளவாக ஈடுபாடு இல்லாததால், பெரிய அளவில் சாதிக்கவில்லை. ஓராண்டு காலம் ராணுவ சேவையில் ஈடுபட்ட பிறகு, மீண்டும் லியோனில் படிப்பைத் தொடர்ந்து, பட்டம் பெற்றார்.

* அதே பல்கலைக்கழகத்தில் உதவி ஆய்வு விஞ்ஞானியாக சேர்ந்தார். அங்கு பணியாற்றும் விஞ்ஞானி கூறிய ஆலோசனையின்படி, வேதியியலில் மேற்படிப்பு படிக்கத் தீர்மானித்தார். கல்விக்கு இடையே, பல ஆய்வுகளையும் மேற்கொண்டு வந்தார்.

* கரிம வேதியியலின் தந்தை எனக் கருதப்படும் பிரபல விஞ்ஞானி பிலிப் பார்பியரோடு இணைந்து பணியாற்றும் அளவுக்கு விரைவி லேயே உயர்ந்தார். அவருடன் இணைந்து தனது முதல் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். செறிவூட்டப்படாத ஹைட்ரோகார்பன் உள்ளிட்டவை தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்டார்.

* முனைவர் பட்டம் பெற்றார். முனைவர் பட்ட ஆய்வில் மெக்னீசியம் கரிமக் கலவைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டார். இந்தக் கலவைகளின் எதிர்வினைகள் மூலம் ஆல்கஹால், அமிலம், ஹைட்ரோகார்பன் தயாரிப்பு குறித்து விவரித்தார்.

* இந்த ஆய்வு பின்னர் கரிமத் தொகுப்புகள் (Organic Synthesis) தொடர்பான ஆய்வுகள், கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது. மேலும், ஆர்கனோமெக்னீசியம் கலவைகள் குறித்த இவரது கண்டுபிடிப்புகள், வேதியியலில் கரிமத் தொகுப்பு என்ற பரந்த களத்தைத் திறந்துவிட்டது.

* ‘கிரிக்னார்டு எதிர்வினை’ (Grignard Reaction) என இவரது பெயரில் வழங்கப்படும் செயற்கை எதிர்வினையை 1900-ல் கண்டறிந்தார். இதற்காக, 1912-ம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு இவருக்கும், இன்னொரு பிரெஞ்ச் விஞ்ஞானியான பால் செபாட்டியருக்கும் இணைந்து வழங்கப்பட்டது. கரிமச் சேர்மங்கள் தயாரிக்க இவரது கிரிக்னார்டு எதிர்வினை முக்கிய வழிமுறையாகப் பின்பற்றப்படுகிறது.

* நான்சி பல்கலைக்கழகத்தில் 1910-ல் பேராசிரியராகப் பணியாற்றினார். ரசாயனத் தாக்குதலுக்குப் பயன்படும் மஸ்டர்ட் எரிவாயுவைக் கண்டறிந்தார். மெக்னீசியத்தைப் பயன்படுத்தி கார்பன் - கார்பன் பிணைப்புகளை உருவாக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்தார். கீட்டோன்கள், ஆல்டிஹைடுகளின் செறிவூட்டப்படாத கலவைகள், செறிவூட்டப்பட்ட கலவைகளில் ஓசோனேஷன் குறித்து ஆராய்ந்தார்.

* வினையூக்க ஹைட்ரஜன், டிஹைட்ரோஜனேஷன் வழிமுறைகள், அலுமினியம் குளோரைட்டில் ஹைட்ரோகார்பன்கள் உடைதல், செறிவூட்டப்படாத கலவைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆராய்ந்தார். கரிம வேதியியல் தொடர்பாக பல நூல்கள் எழுதினார். தனது ஆராய்ச்சிகள் குறித்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள், குறிப்புகளை எழுதினார். இவை தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டது.

* பிரெஞ்ச் வேதியியல் கழகத்தின் லாவோசியர் பதக்கம், கஹுர்ஸ் பரிசு, பிரிக்ஸ் ஜேக்கர் பரிசு, பெர்த்தலோட் பதக்கம் உள்ளிட்ட பல விருதுகள், கவுரவங்களைப் பெற்றுள்ளார். பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின. வேதியியல் துறைக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய பிரான்சுவா அகஸ்டே விக்டர் கிரிக்னார்டு 64-வது வயதில் (1935) மறைந்தார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x