Published : 23 Jul 2016 10:31 AM
Last Updated : 23 Jul 2016 10:31 AM

அதிசய உணவுகள் 4 - சவப்பெட்டி ரொட்டி!

இயற்கை படைத்த விலங்குகளில் மாமிசங்களை சாப்பிடுவதும் உண்டு. சாப்பிடாததும் உண்டு. ஓடும் மானை அடித்து சாப்பிடும் சிங்கத் திடம் இருக்கும் சக்தி, தாவரங்களை உண்ணும் யானையிடமும் இருக்கிறது. இதைப் போல பிறந்த நாடு, வீடு, வளரும் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல ஒருவருடைய உணவுமுறை அமை கிறது. ஆகையினால், வெளிநாடுகளில் வாழும் மக்கள் சாப்பிடும் வித்தியா சமான, உணவுகளைக் கண்டு நான் அதிர்ந்திருக்கிறேனே தவிர, அருவ ருப்பு அடைந்ததே இல்லை. அவர்கள் சாப்பிடும் இப்படிப்பட்ட உணவு வகைகளை எப்படி தயாரிக்கிறார்கள் என்று தெரிந்துகொள்வதில்தான் அதி கமான ஆர்வத்தை காட்டுவேன்.

‘ஷிலின்’ இரவு உணவுச் சந்தையில் விற்கப்பட்ட பலவிதமான உணவு வகை கள், பலவீனமான இதயம் படைத்தவர் கள் மனதை அதிர வைக்கும். ஆனால், உலகெங்கிலும் கடை விரிக்கப் பட்டிருக்கும் அதிசய உணவு வகை களை நம் கண்களால் பார்க்க வேண்டும் என்றால் மகிழ்ச்சியான மனநிலையுடன் இந்த இடங்களில் வலம் வர வேண்டும்!

‘இங்கே சவப்பெட்டி ரொட்டி (coffin bread) கிடைக்கும்’ என்று கொட்டை எழுத்துகளில் எழுதப்பட்டிருந்த பலகை யைப் பார்த்த உடனேதான் என் கால்கள் ‘சடக்’ என்று நகர்வதை மறந்தன. அடுத்த நொடியே ‘‘என்ன சவப்பெட்டி ரொட்டியா..?’’ என்று வாய்விட்டு கூவி விட்டேன்.

எங்களுடன் வந்த எங்கள் வழிகாட்டி கடகடவென்று சிரித்துக்கொண்டே ‘‘மேடம், இதை நீங்கள் கட்டாயம் சாப் பிட வேண்டும்… வாருங்கள்’’ என்று அழைத்தார். நான் ‘‘ஐயோ வேண்டாம்…’’ என்று மறுத்தேன்.

‘‘மேடம், பயப்படாதீங்க. 1940-ல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உணவுக்கு இந்தப் பெயர் வந்ததை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு பெரிய ரொட்டியை எடுத்து உள்ளே இருக்கும் மிருது வான பகுதிகளை நீக்கி விடுவார்கள். பிறகு, அதை நன்றாக ரோஸ்ட் செய்துவிட, அதற்கு சவப் பெட்டித் தோற்றம் வந்து விடுவதால்தான் இந்தக் காரணப்பெயர் வந்தது. இந்த காலி இடத்தில், வேக வைத்த காய்கறிகள், சோளம், காளான் இவைகளோடு சாஸ்ஸை கலந்து பிறகு சிக்கனையும், பன்றியின் வயிற்றுப் பகுதியையும் சேர்ப்பார்கள். நான் உங்களுக்கு கடைசியில் சொன்னதை சேர்க்காமல் தரச் சொல்கிறேன். சாப்பிட்டால் உங்கள் மனமும் வயிறும் நிறையும்…’’ என்றார்.

சிறிது நேரத்துக்குப் பிறகு கொதிக்க கொதிக்க, ‘சவப்பெட்டி ரொட்டி’யை நானும் என் கணவரும் சாப்பிட்டோம். ஒன்று என்று தொடங்கி பிறகு இரண்டு ரொட்டியில் முடிந்தது என்றால் அதன் சுவையை என்னென்பது?!

மீண்டும் நடக்கத் தொடங்கினோம். ஒரு கடையில் சிப்பிகளைக் குவித்து வைத்திருந்தனர். அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. அதன் மீது இரும்பு சட்டி (pan) காய்ந்துகொண்டிருந்தது. சிப்பிகளை உடைத்து உள்ளே இருப்பதை (oyster) வழித்து எடுத்து, துண்டுகளாக்கி அதோடு முட்டை, வெங்காயம் போட்டு கலக்கி அடித்து, அடுப்பில் காய்ந்துகொண்டிருக்கும் கல்லில் ஊற்றினால் சிப்பி ஆம்லெட் ரெடியாகிவிடுகிறது. இதை சாப்பிட ஒரு கூட்டம் ஆலாய் பறக்கிறது.

ஒரு கடையில், ‘அட, நம்ம ஊர் பாகற்காய்களைப் போல இருக்கே…’ என்று அருகில் சென்று நோட்டமிட்டேன். அதுவேதான். ஆனால், என்ன அதிசயம்! பச்சை நிறத்துக்கு பதிலாக, அவை வெள்ளை நிறம் கொண்டிருந்தன.

‘‘சிவா, இங்கே பார்த்தீர்களா? வெளி நாட்டில் இருப்பதால் பாகற்காய்கள் வெள்ளைக்காரிகள் ஆகிவிட்டன’’ என்று சொல்லி சிரித்தேன். என் சிரிப்பில் என் கணவரும் கலந்துகொண்டார்.

அங்கே பாகற்காய் களை ஜூஸாக்கி விற்றுக் கொண்டிருந்தனர். ஐஸ் கட்டிகளுக்கு நடுவே செருகப்பட்டிருந்த பாட் டில்களில் அதன் சாறு அடைக்கப்பட்டிருந்தன.

‘‘இந்த பாகற்காய் சாறு கசக்காது. குடித்துப் பாருங் கள்’’ என்று அந்த கடைக் காரர் கூறியதை, எங்கள் வழிகாட்டியும் ஆமோதித்தார்.

வெள்ளை பாகற்காய்

என்ன ஆச்சரியம்! ஜில்லென்று தொண்டைக்கு இதமாக, லேசான கசப் போடு ஆனால், மிகுதியான இனிப் போடு அந்த பாகற்காய் ஜூஸ் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

டைபியின் இரவு உணவுச் சந்தை களில் ஐநூறுக்கும் அதிகமான பல வகை யான உணவுகள் விற்கப்படுகின்றன. ‘பபுள் மில்க் டீ’ என்ற பானம் கொண் டாடப்படுகிறது. எண்ணற்ற உயிரினங் களின் உடல்களும், உறுப்புகளும் சுவை மிக்க உணவுகளாக மாறி உலா வரு கின்றன. சைவ உணவு உண்பவர்களை யும் ‘டைபி’யில் உள்ள உணவு விடுதிகள் கைவிடுவதில்லை.

அரிசியினால் அவிக்கப்பட்ட பன்கள் உள்ளே பலவிதமான வேக வைத்த காய்கறிகளை வைத்து ‘ஸ்டீம்டு ரைஸ் பன்’ என்று விற்கிறார்கள். அரிசி மாவினால் உறை போல தயாரித்து மிளகு தூவிய காய்கறிகளை வறுத்து அடைத்து ‘ஸ்பைசி வெஜிடெபிள் ராப்’ (wrap) என்று கொடுக்கிறார்கள். இதைத் தவிர, தீயில் வாட்டிய சோளம், உருளைக் கிழங்கு மீது உப்பு, மிளகுத் தூள் தூவி விற்கிறார்கள்.

தைவானில் ஆண்களும், பெண் களுமாக வேலைக்குச் சென்று மாலை திரும்புகிறார்கள். இரவு சமைக்க வேண் டிய அவசியமில்லாமல், ‘ஷிலின்’ போன்ற இரவு உணவு சந்தைகள் தைவான் பெண்களுக்கும் அவர்களு டைய குடும்பத்தாருக்கும் கைக்கொடுக் கின்றன.

‘ஷிலின்’ உணவுச் சந்தையில் துருவிய ஐஸ்கட்டிகளின் மீது, உறைய வைத்த இனிப்பு பாலை ஊற்றி, மூன்று விதமான பழ ஜெல்லிகளை சேர்த்து, வெட்டிய மாம்பழத் துண்டுகளைப் போட்டு கொடுத்த ஷேவ்டு ஐஸ்க்ரீமை (shaved ice cream) கடைசி ஐட்டமாக சாப்பிட்டோம்.

ஒவ்வொரு ஸ்பூன் ஐஸ்க்ரீமும் வாயில் விழுந்தவுடன் அதை மென்றோம். ஆறு வகையான சுவைகளை ஒன்றாக சாப்பிட்டால் கிடைக்கும் இன்பத்தை அடைந்தோம்.

‘‘சாந்தி, ஹோட்டலில் சாப்பிட வேண் டாம். இந்த உணவுச் சந்தையில் சாப்பிட லாம் என்றாயே… உனக்கு என் மன மார்ந்த நன்றி’’ என்று சொல்லிவிட்டு, மற்றொரு ஷேவ்டு ஐஸ்க்ரீமை விழுங்கினார், என் கணவர்.

பதில் சொல்லும் நிலையில் நான் இல்லை. ஐஸ்க்ரீமின் தாக்கம் என்னை பேச்சிழக்க வைத்திருந்தது!

தைவானின் மற்றொரு மறக்க முடியாத சுவை மிகுந்த உணவு டம்ப் ளிங்ஸ் (dumplings) என்று அழைக்கப் படும், ஆவியில் வேக வைத்த கொழுக் கட்டைகள். காய்கறிகள், சூப், இறால், மாமிசம் என்று உள்ளே அடைக்கப்பட்டு, மூங்கில் தட்டுகளில் அடுக்கி, மூங்கில் பெட்டிகளில் வேக வைக்கப்படும் இந்த வகை கொழுக்கட்டைகளுக்கு தைவான் மக்களும் அடிமையாகிக் கிடக்கிறார்கள். நாங்களும் அந்தப் பட்டியலில் அந்த நாட்டில் இருந்து திரும்பிய பிறகும் சேர்ந்திருக்கிறோம்; சேர்ந்திருப்போம்!

- பயணிப்போம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: shanthisiva12@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x