Published : 19 Jul 2016 10:35 AM
Last Updated : 19 Jul 2016 10:35 AM

சிலை சிலையாம் காரணமாம் - 10: நடராஜரும் நர்த்தன கிருஷ்ணரும்!

சுபாஷ் கபூரின் நம்பிக் கைக்குரிய கூட்டாளி களில் ஒருவரான சஞ்சீவி அசோகன் கேரள மாநிலத்தின் கொச்சியில் பிறந்து சென்னைவாசி ஆன வர். சென்னை எழும்பூரில் ‘செல்வா எக்ஸ்போர்ட்ஸ்’ என்ற ஆர்ட் கேலரியை நடத்திக் கொண்டே கபூரின் கடத்தல் கூட்டாளியாக இருந்தவர். இவர் மீது கடந்த காலங்களில் பல்வேறு சிலைக் கடத்தல் வழக்குகள் பதிவாகி இருந்தும் போலீஸ் கையில் சிக்காமல் இருந்தார். இவர் மூலமாகத்தான் தமிழகத்தின் பழமையான கோயில்கள், சிலைகள், தொல்லி யல் சின்னங்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்தார் கபூர்.

குறிப்பாக, South Indian Bronzes, Master Pieces of Indian Sculptures And Survey Maps என்ற புத்தகங்களில் இருந்தே இவர்கள் தகவல்களை திரட்டியதாகச் சொல்கிறது சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு (சி.ஐ.டி.) போலீஸ். அரியலூர் மாவட்டம் புரந்தானில் உள் ளது கைலாசநாதர் கோயில். மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டது இந்தக் கோயில். சரியான பராமரிப்பு இல்லாமல் இருந்த இக்கோயி லுக்குள் ‘கதண்டு இருப்பதாக யாரோ சிலர் கிளப்பிவிட, ஆண்டுக்கணக்கில் மூடிக் கிடந்தது கோயில். இதை நோட்டம்விட்ட சஞ்சீவி, அங்கிருந்த ஐம்பொன் சிலைகளை கடத்துவதற்கு திட்டம் போடுகிறார்.

இதற்காக உடையார் பாளையத்தைச் சேர்ந்த கலிய பெருமாளையும் உள்ளூர்வாசி யான ரத்தினத்தையும் தயார் செய்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஜனவரி 2006-ல், விநாயகர், சம்பந்தர், அம்மன் ஆகிய மூன்று சிலைகளை கோயிலிருந்து கடத்துகிறார்கள். கடத்தப்பட்ட சிலைகளை சூட்டோடு சூடாக சென்னைக்கு கொண்டுவந்து சஞ்சீவியிடம் ஒப்படைக்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு 2 லட்ச ரூபாய் கொடுத்த சஞ்சீவி, அவைகளைப் போலவே மூன்று போலி சிலைகளை தயாரித்து அத்துடன் ஒரிஜினல் சிலை களையும் வைத்து அனைத்துமே கைவினைப் பொருட்கள்தான் என தொல்லியல் துறையில் சான்றிதழ் பெறுகிறார்.

இந்தப் போலி ஆவணத்தை வைத்துக்கொண்டு தனது கூட் டாளி பாக்கியகுமாரின் ‘எவர் ஸ்டார் இண்டர்நேஷனல் சர் வீசஸ்’ கம்பெனி மூலமாக ஜனவரி 2006-ல் சென்னை துறை முகம் வழியாக புரந்தானின் மூன்று சிலைகளையும் அமெரிக் காவுக்குக் கடத்துகிறார் சஞ்சீவி. அடுத்ததாக 2006 மே மாதத்தில் கலியபெருமாளும் ரத்தினமும் அதே கோயிலில் தனி அம்மன், சந்திரசேகரர், சிவகாமி அம்மன் ஆகிய மூன்று சிலைகளையும் திருடுகிறார்கள். இதற்கு சஞ்சீவி கொடுத்த சன்மானம் 2 லட்ச ரூபாய்.

இந்த மூன்று சிலைகளும் வழக்கமான பாணியில் போலி ஆவணங்களோடு 2006 மே மாதம் 12 மற்றும் ஜூலை 28-ல் இரண்டு பிரிவாக சென்னை துறைமுகம் வழியாக கபூரின் ‘நிம்பஸ்’ கம்பெனிக்குப் போய்ச் சேர்ந்தன. இரண்டு முறை திருட்டுச் சம்ப வங்கள் நடந்த பிறகும் சிலைகள் திருடுபோன விவகாரம் உள்ளூர் முக்கியஸ்தர்களுக்கோ, கோயில் நிர்வாகத்துக்கோ தெரிய வில்லை. கோயிலில் உள்ள சிலைகளைக் கொள்ளையடிக்க வசதியாகவே ‘கதண்டு’ புரளி கிளப்பப்பட்டிருக்கிறது என்பது பின்னாளில் போலீஸுக்குக் கிடைத்த தகவல். இதேபோல் இந்தக் கடத்தலுக்குப் பிறகு, அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் திடீர் பணக்காரர்கள் ஆனதாகவும் சொல்லப்படுகிறது.

தங்களுக்குச் சாதகமான பல அம்சங்கள் இருந்ததால் அதே சிவன் கோயிலில் இருந்த நடராஜர், நர்த்தன கிருஷ்ணர் சிலைகளை கடத்த திட்டமிடுகிறார் சஞ்சீவி அசோகன். இம்முறை ராஜபாளையத்தைச் சேர்ந்த பிச்சைமணியிடம் அசைன்மென்ட் ஒப்படைக்கப்படுகிறது. ரத் தினம், கலியபெருமாளை துணைக்கு வைத்துக் கொண்டு இதை கச்சிதமாக செய்து முடிக் கிறார் பிச்சைமணி. இதற்காக அவருக்கு 3 லட்ச ரூபாய் தருகிறார் சஞ்சீவி.

நடராஜரும் நர்த்தன கிருஷ்ண ரும் வழக்கமான பாணி யில், வழக்கமான வழியில் 25.11.2006-ல் அமெரிக்காவுக்கு வழியனுப்பப்படுகிறார்கள். இந்த நிலையில், சிலைகள் கடத்தலை சிக்கலின்றி செய்துமுடித்த சஞ்சீவிக்கு தனது நியூயார்க் ஹெச்.எஸ்.பி.சி. வங்கிக் கணக் கிலிருந்து 1,16,37,694 ரூபாயை டாலராக டிரான்ஸ்ஃபர் செய் கிறார் சுபாஷ் கபூர்.

இந்நிலையில் (சிலைகள் திருடுபோன பிறகு), புரந்தான் சிவன் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்ப தாக(!?) கருதிய அறநிலையத் துறை அதிகாரிகள், சிலைகளை எடுத்துக் கொண்டுபோய் பக்கத் துக் கோயிலில் பாதுகாப்பாக வைப்பதற்காக 14.06.2008-ல் அங்கு வருகிறார்கள். அப்போது, ‘எங்கள் ஊர் கோயிலில் இருந்து சிலைகளை எடுக்க வேண்டாம். நாங்களே கிரில் கதவுகள் அமைத்து சிலைகளைப் பத்திர மாகப் பார்த்துக் கொள்கிறோம்’ என்று ஊர்மக்கள் ஒருமித்து சொல்லவும்; வந்த வழியே திரும்புகிறார்கள் அறநிலையத் துறை அதிகாரிகள்.

சொன்னபடியே, கோயில் வாசலுக்கு புதிதாக கிரில் கதவை ஏற்பாடுசெய்த ஊர்மக்கள், அதை பொருத்துவதற்காக 18.08.2008-ல் கோயிலுக்குப் போகிறார்கள். அப்போதுதான், கோயில் பூட்டு உடைக்கப்பட்டு சிலைகள் திருடப்பட்ட விஷ யமே தெரியவருகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த விக்கிரமங்கலம் போலீ ஸார், சென்னையில் பதுங்கி இருந்த கலிய பெருமாளையும் ரத்தினத்தையும் 24.08.2008-ல் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு 3.11.2008-ல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு (சி.ஐ.டி)-க்கு மாற, அப்புறம்தான் விசாரணை சூடுபிடித்தது.

- சிலைகள் பேசும்..

முந்தைய அத்தியாயம்: >சிலை சிலையாம் காரணமாம் - 9: கடத்தப்பட்ட பிரத்தியங்கரா கற்சிலைகள்!

படங்கள் உதவி: IFP/EFEO - புதுச்சேரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x