ஜாவேத் அக்தர் 10

ஜாவேத் அக்தர் 10
Updated on
2 min read

திரைப்பட பாடலாசிரியர், உருது படைப்பாளி

சிறந்த உருது படைப்பாளியும் 5 முறை சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருதுகளையும் வென்றுள்ள ஜாவேத் அக்தர் (Javed Akhtar) பிறந்த தினம் இன்று (ஜனவரி 17). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* குவாலியரில் பிறந்தவர் (1945). தந்தை பிரபல உருது கவிஞர், தாய் பிரபல எழுத்தாளர்; ஆசிரியர். இவர் பிறந்த சிறிது காலத்திலேயே குடும்பம் லக்னோவில் குடியேறியது.

* இவரது 7வது வயதில் அம்மா இறந்ததால், தாயின் பெற்றோர் வீட்டில் சில காலம் வசித்துவந்தார். அங்கேயே ஆரம்பக் கல்வி கற்றார். பின்னர், அலிகரில் அத்தை வீட்டில் வளர்ந்த இவர், உயர்நிலைப் பள்ளிக் கல்வியை அங்கே பெற்றார். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மெட்ரிக் தேர்வில் வெற்றிபெற்றார்.

* பின்னர் போபாலில் சாஃபியா கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். கவிதைகள், பாடல்கள் எழுதுவதில் ஆர்வமும் திறனும் கொண்டிருந்த இவர், திரைப்படங்களில் பாடலாசிரியராக வேண்டும் என்ற தனது கனவை நிஜமாக்கிக்கொள்ள 1964-ல் பம்பாய் சென்றார்.

* 100 ரூபாய் சம்பளத்தில் திரைப்படங்களுக்கு வசனம் எழுதிக் கொடுக்கும் வேலையில் சேர்ந்தார். அந்தப் படங்கள் வெற்றி பெறவில்லை. பின்னர் வசனகர்த்தா சலீம் கானைச் சந்தித்தார். இருவரும் இணைந்து திரைக்கதை - வசனம் எழுதத் தொடங்கினார்கள்.

* 1970-ல் இருவரும் இணைந்து பணியாற்றிய ‘அந்தாஜ்’ திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தன. ‘அதிகார்’, ‘ஹாத்தி மேரா சாத்தி’, ‘சீதா அவுர் கீதா’, ‘ஜன்ஜீர்’, ‘யாரோங் கீ பாராத்’, ‘தீவார்’, ‘ஷோலே’ உள்ளிட்ட பல தொடர் வெற்றிகள் கைகூடின.

* 1980 வரை சலீம் கானுடன் இணைந்து பணியாற்றி வந்தார். பின்னர் தனியாக இயங்கத் தொடங்கி பாலிவுட்டில் தலைசிறந்த திரைக்கதையாசிரியராகத் தனி முத்திரை பதித்தார். அதோடு பாடல்கள் எழுதிவதிலும் கவனம் செலுத்தி வந்த இவர், அதில் பெற்ற மகத்தான வெற்றிகளுக்குப் பிறகு முழு மூச்சாக இதிலேயே இறங்கிவிட்டார்.

* ‘ஏக் லடகீ கோ தேகா தோ’, ‘பாப்பா கஹதே ஹை’, ‘கர் சே நிகல்தே ஹீ’, ‘ராதா கைஸே நா ஜலே’, ‘சந்தேஷே ஆத்தே ஹை’ உள்ளிட்ட இவரது பாடல்கள் பிரபலமடைந்தன. உருது மொழியிலும் பாடல்கள், கவிதைகள் எழுதினார். 1995-ல் இவரது முதல் உருது கவிதைத் தொகுப்பு வெளிவந்தது.

* நல்ல பேச்சாளர். ஹாவர்ட், மேரிலான்ட் பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி அமைப்புகளில் கவிதைகள், சமூக நல்லிணக்கம், சமூக நீதி, இந்திய சினிமா உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும் உரையாற்றியுள்ளார்.

* 2010-ல் மாநிலங்களவையின் கவுரவ உறுப்பினராகத் தேர்ந்தெடுக் கப்பட்டார். 2013-ல் உருது மொழிக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றார். தேசிய ஒருங்கிணைப்பு விருது, ஆவாஜ் ரத்தன் விருது, பத்ம, பத்ம பூஷண், விருதுகள் தவிர, சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை 5 முறை வென்றுள்ளார்.

* சிறந்த திரைக்கதையாசிரியர் மற்றும் சிறந்த பாடலாசிரியருக்காக 14 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளையும், ஃபிலிம்ஃபேரின் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் வென்றுள்ளார். இன்று 73 வயதில் அடியெடுத்து வைக்கும் இவர், இப்போதும் திரையுலகிலும், சமூக செயல்பாடுகள், அரசியலிலும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in