

பிரபல கர்னாடக, இந்துஸ்தானி, மேற்கத்திய இசைக்கலைஞரான டி.வி.கோபாலகிருஷ்ணன் (T.V.Gopalakrishnan) பிறந்தநாள் இன்று (ஜூன் 11). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* கேரள மாநிலம் திருப்புணித்துராவில் (1932) பிறந்தவர். தந்தை கொச்சி அரசவை இசைக் கலைஞர். இரு நூற்றாண்டுகளாக இசை வல்லுநர்களாகத் திகழ்ந்த பாரம் பரியமிக்க குடும்பத்தில் பிறந்தவர். தந்தையும், தாயும் இசைக் கலைஞர்கள் என்பதால், சிறு வயது முதலே இசையில் ஈடுபாடும், திறமையும் கொண்டிருந்தார்.
* தந்தையிடம் வாய்ப்பாட்டு பயின்றார். மாமாவிடம் கற்றுக்கொண்டு 4 வயதுமுதல் மிருதங்கம் வாசிக்கத் தொடங்கினார். 6-வது வயதில் கொச்சி அரண்மனையில் அரங்கேற்றம் நடைபெற்றது. வாய்ப்பாட்டு, மிருதங்கம் இரண்டிலும் தேர்ச்சி பெற்று, பல மேடை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
* பின்னர், குடும்பம் சென்னையில் குடியேறியது. பிரபல இசைக் கலைஞர் செம்பை வைத்தியநாத பாகவதரிடம் பயின்று, கர்னாடக இசை அறிவை வளர்த்துக்கொண்டார். 9-வது வயதில் தன் குருவுக்கு பக்கவாத்தியமாக மிருதங்கம் வாசித்தார்.
* பிரபல இசைக் கலைஞர்களுடன் இணைந்து பல கச்சேரிகளில் பங்கேற்றார். வாய்ப்பாட்டுக் கலைஞராக அதிக மேடைகளில் கச்சேரிகள் நடத்தியபோதிலும், 1950-களில் சிறந்த மிருதங்க இசைக் கலைஞராகவே அதிகம் அறியப்பட்டார்.
* 20 வயதுக்குள் நாடு முழுவதும் பிரபலமடைந்தார். 1952 முதல் 1961 வரை சென்னை ஏஜிஎஸ் அலுவலகத்தில் பணியாற்றினார். அலுவலகப் பணிகள் அதிகம் இருந்தாலும், அதிகாலையில் எழுந்து 4 மணிநேரம் இசைப் பயிற்சி மேற்கொள்வார். பல மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார்.
* கேள்வி ஞானத்திலேயே இந்துஸ்தானி இசை பாடத் தொடங்கினார். பின்னர் பிரபல இசைக் கலைஞர் கிருஷ்ணானந்திடம் முறையாக இந்துஸ்தானி இசை கற்றார். 6 மாதங்களில் அதிலும் தேர்ச்சி பெற்று கச்சேரிகளில் பங்கேற்றார். குரல்வள மேம்பாடு, இசை தெரப்பி ஆகியவற்றில் இவர் மேற்கொண்ட ஆய்வுகளின் பலனாக, பல கலைஞர்கள் தங்கள் குரல் பிரச்சினையில் இருந்து மீண்டனர்.
* தவில், மிருதங்கம், வயலின், சாக்ஸபோன் என பல வாத்தியங்களை வாசிக்கக்கூடியவர். மேற்கத்திய இசை கற்று அதிலும் நிபுணத்துவம் பெற்றார். ஒரு ஜாஸ் இசைக் குழு தொடங்கி, மேற்கத்தியக் குழுக்களுடனும் சேர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். இசைத் திறன் படைத்தவர்கள், இசை ஆர்வம் கொண்டவர்கள், மேதைகளை அடையாளம் கண்டு, இசை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்தவர்.
* இளையராஜா, ராஜ்குமார் பாரதி, கத்ரி கோபால்நாத் ஆகியோர் இவரது மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். உலகின் பல்வேறு நாடுகளிலும் 30 ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச இசை விழாக்கள், இசைக் கருத்தரங்குகள், பயிலரங்குகளில் பங்கேற்றவர். அமெரிக்கா, இங்கிலாந்தின் இசைக் கல்வி நிறுவனங்களில் கவுரவ பேராசிரியராகவும் பணியாற்றியவர்.
* பத்மபூஷண், சங்கீத கலாநிதி விருது, சங்கீத நாடக அகாடமி விருது, சங்கீத சூடாமணி விருது, செம்பை வைத்தியநாத பாகவதர் விருது, சுவாதித் திருநாள் வாழ்நாள் சாதனையாளர் விருது என ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். கானகலா பாரதி, மிருதங்க சக்கரவர்த்தி என்று போற்றப்பட்டார்.
* டிவிஜி என அன்போடு அழைக்கப்படும் இவர், இசையைக் கற்றுத்தருவது, இசை நூல்கள் எழுதுவது ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 50 ஆண்டு காலமாக இசை உலகில் இணை யற்ற கலைஞராகப் புகழ்பெற்றுள்ள டி.வி.கோபாலகிருஷ்ணன் இன்று 86-ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார்