Published : 07 Jul 2016 05:12 PM
Last Updated : 07 Jul 2016 05:12 PM

யூடியூப் பகிர்வு: காஷ்மீர் பள்ளத்தாக்கில் ரம்ஜான் திருநாள்!

அதிகாலை இரண்டரை மணி. அடிக்கும் முரசொலி காஷ்மீர் பள்ளத்தாக்கையே அசைத்துவிட்டுச் செல்கிறது. அங்கே காஷ்மீரிகள் இஸ்லாமியர்களோடு இணைந்து ரம்ஜானைக் கொண்டாடுகின்றனர். இஸ்லாமிய காலண்டரின் ஒன்பதாவது மாதம், ரம்ஜான்.

சில மணித்துளிகளில் ரம்ஜான் முரசொலிப்பவர்கள், தொழுகைக்கான நேரம் வந்துவிட்டதை மக்களுக்குச் சுட்டிக் காட்டுகிறார்கள். இந்த வழக்கம் காஷ்மீர் பள்ளத்தாக்கின் நூற்றாண்டு காலப் பழமையானது. அலாரத்தையும், செல்பேசியையும் தவிர்த்த முறை இது. முரசு அறிவிப்பாளர்கள் இது தஹஜ்ஜுத் (தூங்கியெழுந்து தொழுவது) நிகழ்வுக்கான நேரம் என்கிறார்கள்.

பொதுவாக தொழுகையின்போது, இஸ்லாமியர்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று விட முடியாது. அலுவலகங்கள், வங்கிகள், சந்தைகளில் தொழுவதற்காக தனியாக இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ரம்ஜான் மாதத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இரவுப் பயணத்துக்கு அனுமதி இல்லை. அங்குள்ள பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

நோன்பு இருப்பவர்களுக்கு சூரியன் சாயும்போது பசி எழுகிறது. இஸ்லாமிய சடங்குகளின்படி, இஸ்லாமியர்களின் நோன்பு ஒரு வாய் தண்ணீராலும், சில பேரிச்சம் பழங்களாலும் முடித்து வைக்கப்படுகிறது. காஷ்மீரில் தர்பூசணி, இனிப்புகள் மற்றும் மூலிகை நீரைக் கொண்டு நோன்பை முடிக்கின்றனர். இஃப்தார் முடிந்த பிறகு இரவு முழுவதும் குரான் ஓதப்படுகிறது.

இஸ்லாமியர்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டளைகளில் ஒன்று ரம்ஜானின்போது நோன்பு இருப்பது. ரம்ஜானுக்குப் பிறகான மூன்று நாட்கள் கொண்டாட்டங்களில் உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் குடும்பமாக ஒன்று கூடுகின்றனர்.

காணொளியைக் காண: