Published : 24 May 2017 10:09 AM
Last Updated : 24 May 2017 10:09 AM

காசி நஸ்ருல் இஸ்லாம் 10

வங்கக் கவிஞர், எழுத்தாளர், இசைக் கலைஞர்

புகழ் பெற்ற வங்க கவிஞர், எழுத்தாளர், இசைக்கலைஞருமான காசி நஸ்ருல் இஸ்லாம் (Kazi Nazrul Islam) பிறந்த தினம் இன்று (மே 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* கிழக்கு வங்காளத்தில் சுருலியா என்ற பகுதியில் பிறந்தார் (1899). தந்தை உள்ளூர் மசூதியின் பராமரிப்பாளர். சிறுவயதாக இருந்தபோதே தந்தையை இழந்தார். மதக் கல்வி பயின்றார். 10 வயதில் உள்ளூர் மசூதியில் அப்பா பார்த்து வந்த வேலையை பார்த்தார்.

* 11-வது வயதில் மீண்டும் படிக்கத் தொடங்கிய இவர், நிதிப் பற்றாக்குறையால் சிறுசிறு வேலைகளைச் செய்து வந்தார். 1914-ல் பள்ளியில் சேர்ந்து, 10-ம் வகுப்பு வரை பயின்றார். வங்க மொழி, சமஸ்கிருதம், பாரசீகம், அராபிய மொழி இலக்கியம் மற்றும் இந்துஸ்தானி இசையையும் கற்றார்.

* 1917-ல் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றினார். பின்னர் கல்கத்தாவில் பத்திரிகைத் துறையில் பணியாற்றினார். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், பாடல்கள், நாடகங்கள், நாவல்கள் எழுத ஆரம்பித்தார். 1921-ல் இவரது முதல் கவிதை ‘பந்தன்-ஹாரா’ வெளிவந்தது.

* பிரிட்டிஷ் ராஜ்யத்தைத் தாக்கி தனது கவிதைகள், பிற படைப்புகள் மூலமாக மக்களிடையே புரட்சியைப் போதித்தார். இதனால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது ‘ராஜ்பந்திர் ஜபன்பந்தி’ என்ற நூலை எழுதினார்.

* 1939-ல் கல்கத்தா வானொலி நிலையத்தில் பணியாற்றினார். பின்னர் ‘நபயுக்’ பத்திரிகையின் ஆசிரியராகவும் செயல்பட்டார். தாகூர் நினைவாக ‘ரபிஹாரா’ என்ற கவிதை எழுதினார். மதம், பக்தி, ஆன்மிகப் புரட்சி, பாசிசம் மற்றும் அடக்குமுறைக்கு எதிராக ஏராளமாக எழுதினார்.

* வங்க தேசத்து இலக்கிய விமர்சகர்கள் இவரை ‘உலகின் தலைசிறந்த புரட்சிக் கவிஞர்களுள் ஒருவர்’ எனப் பாராட்டினர். ‘அக்னி பினா’, ‘தூமகேது’, ‘சத்பாய்’, ‘நிர்ஜர்’, ‘நாதுன் சந்த்’ உள்ளிட்ட கவிதைகள், ‘தோலன் சாபா’, ‘பிஷர் பேஷி’, ‘சாம்யபாதி’ உள்ளிட்ட பாடல்களை இயற்றினார்.

* ‘பிகர் பேதன்’, ‘பியாதர் தன்’ உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகள், ‘பந்தன் ஹாரா’, ‘குஹேலிகா’ உள்ளிட்ட நாவல்கள், ‘ஜில்மில்’, ‘மதுமாலா’, ‘ஷில்பி’ உள்ளிட்ட நாடகங்கள், ‘ஜோக் பானி’, ‘துர்தினெர் ஜத்ரி’ உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகள் வங்க இலக்கியத்துக்கு வளம் சேர்ந்தன. வங்க மொழியில் கஜல்கள் இயற்றினார்.

* ஷாமா சங்கீத், பஜன், கீர்த்தன் உள்ளிட்ட பாடல்களில் இந்து ஆன்மிகப் பாடல்களும் இடம்பெற்றன. 1928-ல் ‘ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்’ என்ற கிராமஃபோன் நிறுவனத்தின் பாடலாசிரியர், இசையமைப்பாளர், இசை இயக்குநராக இணைந்தார். பாரம்பரிய ராகங்கள், கீர்த்தனைகள், தேசபக்திப் பாடல்கள் என மொத்தம் 2600-க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளார்.

* சிவன், லட்சுமி, சரஸ்வதி, ராதா - கிருஷ்ணன் குறித்து சுமார் 500 பாடல்களை இயற்றியுள்ளார். இவர் இயற்றிய பாடல் வகை வங்க தேசத்தில் ‘நஸ்ருல் சங்கீத்’ எனவும் இந்தியாவில் ‘நஸ்ருல் கீத்’ எனவும் புகழ்பெற்றது.

* வங்க இலக்கியத்துக்கான இவரது பங்களிப்புகளுக்காகக் கல்கத்தா பல்கலைக்கழகம் இவருக்கு ஜகத்தாரிணி தங்கப் பதக்கம் வழங்கியது. 1960-ல் பத்ம பூஷண் விருது பெற்றார். ‘வங்கதேசத்து தேசியக் கவிஞர்’ என அறியப்படும் காசி நஸ்ருல் இஸ்லாம் 1976-ம் ஆண்டு 77-வது வயதில் மறைந்தார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x