Published : 02 Jul 2016 11:16 AM
Last Updated : 02 Jul 2016 11:16 AM

அதிசய உணவுகள் 1

இந்த உலகத்தில் வாழ்கிற ஒவ்வோர் உயிருக்கும் உண்ணுவதும் இனவிருத்தி செய்வதுமே முக்கியத் தொழில். வயிறே பிரதானம் என்றும் நம் முன்னோர் சொல்லியுள்ளனர்.

‘ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்/ இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்/என்நோ(வு) அறியாய் இடும்பை கூர் என் வயிறே/ உன்னோடு வாழ்தல் அரிது’

- இது வயிற்றுப் பசியின் கொடுமையைப் பற்றி ஒளவையார் சொன்னது. வயிற்றுப் பசிக்கு உணவு கிடைத்துவிட்டால் போதுமா? நாக்கு ருசிக்கு மனிதர்கள் அடிமையாகி கிடக்கிறார்கள்தானே!

ஒரு வேடிக்கையான சம்பவத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். என் கணவரின் கிளினிக்கிற்கு, ஒரு நோயாளியைத் தூக் கிக்கொண்டு வந்தனர். உலகின் சோகம் அத்தனையையும் முகத்தில் தாங்கி, ஒளி மங்கிய கண்களுடன் அவர் பரிசோதனை மேஜையின் மீது படுத்திருந்தார். அவரை நன்றாக பரிசோதித்த என் கணவர் சொன்னார்: ‘‘உங்களுக்கு பயப்படும்படி ஒன்றுமில்லை. சில மாத்திரைகளை எழுதித் தருகிறேன். தினம் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள்’’.

அதை கேட்ட நோயாளி ‘‘டாக்டர், எனக்கு வாழவே பிடிக்கவில்லை. மூன்று மாதங்களாக உப்பில்லா உணவை சாப்பிடுகிறேன்’’ என்றார்.

‘‘அப்படியா, இந்த தெரு முனையில் ஒரு பிரபல உணவகம் உள்ளது. அங்கே சென்று அரை பிளேட் பிரியாணி சாப்பிட்டுவிட்டு ஊருக்குப் புறப்படுங்கள்’’ என்று என் கணவர் சொல்லி முடித்த மறுவினாடி, அந்த நோயாளி, ஸ்பிரிங் பொம்மையைப் போல துள்ளிக் குதித்து எழுந்தார். முகத்தில் ஆயிரம் வாட்ஸ் மின் விளக்குப் பிரகாசத்துடன் ‘‘என்னது! பிரியாணி சாப்பிடலாமா?’’ ஓங்கி குரல் எடுத்து கேட்டார்.

‘‘ஆமாம்’’ என்று என் கணவர் தலையாட்டி புன்ன கைக்க, நான்கு நபர்கள் தூக்கிக் கொண்டுவந்த அந்த நோயாளி துள்ளல் நடைப் போட்டு விடைபெற்றார்.

அப்போது ருசிக்காக நீளும் மனித நாவின் சக்தி எனக்குப் புரிந்தது. உலகின் பல நகரங்களுக்கும் நான் பயணித்திருக்கிறேன். அங்கே எல்லாம் பலவகையான உணவுகளை உண்டு மகிழ்ந்திருக்கிறேன். கண்டு மிரண் டும் இருந்திருக்கிறேன். அந்தந்த நாட்டில் உள்ளவர் களுக்கு அவரவர் உணவு வகைகள் பிடித்தமானதாக இருக்கும். முதலில் இதை நாம் புரிந்துகொண் டால் உலகெங்கிலும் கடை விரிக்கப்பட் டிருக்கும் உணவு வகைகளை ருசித்து மகிழலாம் அல்லது பார்த்து மகிழலாம்.

இப்படி பல உலக நாடுகளின் உணவகங் களில், இரவு உணவுச் சந்தைகளில், அங்கே வசிக்கும் மக்களின் வீடுகளில், நண்பர்களின் இல்லங் களில், இந்தியாவின் பல நகரங்களில் உண்டு மகிழ்ந்த உணவு வகைகளைப் பற்றியும், பல வேடிக்கையான அனு பவங்களை பற்றியும் பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.

தாய்வான்...

உலக வரைப்படத்தில் நம் கையில் உள்ள கட்டை விரல் அளவுக்கான சிறிய இடத்தை ஆக்கிரமித்திருக்கும் சிறு தீவு. கிழக்கு சீனாவில் இருந்து 180 கி.மீ தொலைவில் உள்ள இங்கே, பாரம்பரியம் மிக்க நகரங்கள், கொதிக்கும் நீரூற்றுகள், அழகிய மலைத் தொடர்கள் என்று சிந்தையைக் கவரும் இடங்கள் பல இங்கே உண்டு. தாய்வானின் தலைநகரம் ‘டைபி’. இந்நகரத்தின் பொருளாதாரமே சுற்றுலாத் துறையைச் சார்ந்துதான் இருக்கிறது. 2013-ம் ஆண்டில் மட்டும் 6.3 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இங்கே வலம் வந்துள்ளனர். இப்படி வருபவர்களை முக்கியமாக கவரும் இரண்டு அம்சங்களில் ஒன்று, ‘டைபி 101'. மற்றொன்று, இங்கே இருக்கும் இரவு மார்க்கெட்டுகளும், அங்கே விற்கப்படும் பலவிதமான உணவு வகைகளும்தான். 2004-ல் கட்டிமுடிக்கப்பட்ட ‘டைபி 101' என்ற இந்தக் கட்டிடம் உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடமாக, துபாயில் உள்ள ‘புர்ஜ் கலிஃபா’ கட்டப்படும் வரை திகழ்ந்தது.

டைபியின் இரவு உணவுச் சந்தைகளைப் பற்றி கேள்விபட்டிருந்ததால், அங்கே போக வேண்டுமென்று விரும்பினேன். இந்த நகரத்தின் பல எழில்மிக்க, சரித்திர புகழ்மிக்க இடங்களைப் பார்த்துவிட்டு, நாங்கள் தங்கி யிருந்த ஹோட்டலுக்கு வந்துச் சேரும்போதே இரவு நேரம் மணி 7. உணவுச் சந்தைகள் நள்ளிரவையும் தாண்டி இயங்கும் என்பதால், உற்சாகத்துடன் கிளம்பினோம்.

‘‘சாந்தி... நாம் தங்கியிருக்கும் ஹோட்டலிலேயே ஏதாவது ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு செல்லலாமா?’’ என்றார் என் கணவர்.

‘‘அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், வாங்க. இரவு உணவுச் சந்தையிலேயே சாப்பிடுவோம்’’ என்றேன்.

நான் கடல் உணவை விரும்பிச் சாப்பிடுவேன். தாய்வான் ஒரு தீவாக இருப்பதால் அங்கே ஏராளமான கடல் உணவுகள் கிடைக்கும். இதைத் தவிர தாய்வான், சைனாவின் ஒரு பகுதியாக கருதப்படுவதால் அல்லது சைனாவின் அருகே இருப்பதால் அங்கே சைனீஸ் உணவு வகைகளும் கிடைக்கும் என்று எண்ணினேன்.

எங்கள் ஹோட்டலில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இருந்த ‘ஷிலின்’ இரவு உணவு மார்கெட்டுக்குள் நுழைந்தோம். தெருவின் இருபுறமும் வரிசையாக சின்னச் சின்ன ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், வெளிநாட்டு உல்லாசப் பயணிகளும், போதாத குறைக்கு தள்ளுவண்டிகளில் செல்லப் பிராணிகளான நாய்களும் வலம் வந்து கொண்டிருந்தன.

என் மூக்கை பலவிதமான வாசனைகள் ஒரே சமயத்தில் படையெடுத்து வந்து தாக்கின. சோயா சாஸின் வாசனை, வறுக்கப்படும் மாமிச உணவுகளில் இருந்து எழும் புகை, தங்கள் உணவை வந்து ருசிக்கும்படி கூவி அழைக்கும் வியாபாரிகளின் கூக்குரல், கைகளில் தட்டை ஏந்தி தங்கள் முறைக்காகக் காத்து நிற்கும் வாடிக்கையாளர்களின் தரிசனம்… என்று அந்த இரவு உணவு மார்க்கெட் பல காட்சிகளைப் படம் பிடித்துக் காட்டியது.

அந்தக் கூட்டத்தில் புகுந்து நானும் என் கணவரும் முதலில் வலது பக்க உணவுக் கடைகளை நோட்டம்விட்ட படி நடந்தோம். ‘இங்கே (Frog Eggs Drink) தவளை முட்டைகளின் பானம் கிடைக்கும்’ என்ற அறிவிப்பு இருந்த இடத்தில் நின்று, பச்சை கலரில் இருந்த அந்த பானத்தை ஆச்சரியம் கொண்டு பார்த்தேன்.

- பயணிப்போம்...

சாந்தகுமாரி சிவகடாட்சம் - சுற்றும் உலகைச் சுற்றி பயண இலக்கியம் படைப்பவர். இவர் போகாத நாடுகளை விரல்விடாமல் எண்ணிவிடலாம். உலகம் முழுதும் பறந்து, தான் ரசித்து மகிழ்ந்த விஷயங்களை கண்முன் குவியும் காட்சியாக எழுத்தில் பதிவு செய்பவர். இவருடைய ‘சுற்றும் உலகில் சுற்றிய இடங்கள்’, ‘உலகம் சுற்றலாம் வாங்க’ என்கிற இரு பயண நூல்கள் இருமுறை தமிழக அரசின் பரிசினைப் பெற்றுள்ளன. இது தவிர தாகம், கலங்கரை வெளிச்சம், கங்கையில் ஒரு சங்கமம், கருப்புச் சிலந்தி, சூரியன் ஆகிய நூல்களையும் எழுதியுள் ளார். இவரது கணவர் டாக்டர் சிவகடாட்சம், புகழ்பெற்ற இதய சிகிச்சை நிபுணராவார்

சாந்தகுமாரி சிவகடாட்சம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x