

தமிழறிஞர், வரலாற்று ஆய்வாளர்
தமிழகத்தின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவரும் முதன்முதலாக முறையான காலவரலாற்று ஆய்வு நிகழ்த்திய ஆய்வாளர் என்ற பெருமை பெற்றவருமான வி.கனகசபை பிள்ளை (V.Kanagasabhai Pillai) பிறந்த தினம் இன்று (மே 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* சென்னை, கோமலீஸ்வரன் பேட்டையில் பிறந்தார் (1855). யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவரது தந்தை தமிழறிஞர். சென்னை அரசினர் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். பி.எல். முடித்து, மதுரையில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார்.
* பின்னர் அஞ்சல் துறையில் எழுத்தராகச் சேர்ந்தார். பதவி உயர்வு பெற்று, கள்ளிக்கோட்டையில் அஞ்சலக மேற்பார்வையாளராக பணியாற்றினார். கடைசியாக சென்னைக்கு மாற்றலானார். தமிழ் - ஆங்கில அகராதி தயாரித்துக் கொண்டிருந்த வின்சுலோ என்பவருக்கு இவரது தந்தை செய்து வந்த ஆய்வு உதவிகளை, அவரது மறைவுக்குப் பின் இவர் மேற்கொண்டார்.
* தன் பணி நிமித்தமாக எந்த ஊர் சென்றாலும் அங்கு ஏட்டுச் சுவடிகளையும் கல்வெட்டுகளையும் படியெடுத்தார். இவ்வாறு தொடர்ந்து 20 ஆண்டுகாலம் கடுமையாக உழைத்துத் தொகுத்த அத்தனை ஏடுகளையும் உ.வே.சாமிநாத ஐயருக்கு அவ்வப்போது வழங்கி வந்தார்.
* இலக்கியங்களை, வரலாற்றுச் செய்திகளைத் தரும் ஆவணங்களாகவே கருதி அவற்றின் அடிப்படையில் ஆய்வுகளைத் தொடங்கினார். இவரது கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, ‘Tamils 1800 years ago’ என்ற நூலாக வெளியிடப்பட்டது. இது பின்னர் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. சென்னை பல்கலைக்கழகத்தில் பாட நூலாகவும் இடம்பெற்றிருந்தது.
* இதில் தமிழ்நாட்டின் புவியியல், வெளிநாட்டினர் வணிகம், தமிழ் இனம், சோழர்கள், பாண்டியர்கள், சேரர்கள், சிற்றரசர்கள், சமூக நிலை, திருக்குறள், சிலப்பதிகாரக் கதை, மணிமேகலைக் கதை, தமிழ்க் காவியமும் ஆசிரியர்களும், ஆறுவகைத் தத்துவ முறைகள், மதம் ஆகிய தலைப்புகள் இடம்பெற்றிருந்தன. சீனாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான பண்பாட்டு, நாகரிக, இன ஒற்றுமைகளை ஆராய்ந்து எழுதினார்.
* வங்காளம், பர்மா ஆகிய நாடுகளைத் தமிழர்கள் வென்ற வரலாற்றுப் பெருமைகளை ‘தி கான்க்வெஸ்ட் ஆஃப் பெங்கால் அன்ட் பர்மா பை தமிழ்ஸ்: ராஜராஜசோழா’ என்ற நூலாக எழுதினார்.
* தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை கொண்டிருந்த இவர், முதலில் சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட காப்பியங்களை ஆராய்ந்து, பண்டைய தமிழ்ச் சமூகம், அவற்றின் வரலாறு குறித்த பல ஆய்வுக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார்.
* இவை தனியாகத் தொகுக்கப்பட்டு ‘தி கிரேட் எபிக்ஸ் ஆஃப் தமிழ்’ என்ற நூலாக வெளியிடப்பட்டது. ‘தி மெட்ராஸ் ரெவ்யு’ மாத இதழில் இந்தக் கட்டுரைகள் வெளிவந்தன. ‘மகா வம்சம்’ போன்ற புத்த இலக்கியங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதினார்.
* இவரது கட்டுரைகள் மூலமே தமிழ்நாட்டின் பண்டைய வரலாறு, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரப் பெருமைகள் உலகுக்கு ஆங்கில மொழி மூலம் தெரிவிக்கப்பட்டன. கலிங்கத்துப் பரணிக்கு ஆங்கிலத்தில் பொழிப்புரை எழுதி அவற்றை பம்பாயின் பிரபல வரலாற்று இதழான ‘இந்தியன் அனிகுவாரி’ இதழில் வெளியிடச் செய்தார்.
* ‘களவழி நாற்பது’, ‘விக்கிரம சோழனுலா’ ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தமிழின் பெருமைகளை உலகம் அறிந்து கொள்ளச் செய்தலில் இணையற்ற பங்களிப்பை வழங்கிய வி.கனகசபை பிள்ளை 1906-ம் ஆண்டு 51-வது வயதில் மறைந்தார்.