

உங்களுக்கெல்லாம் வின்ஸ்டன் சர்ச்சில்லை தெரிந்து இருக்கும்; ஆனால், பலரும் கிளமென்ட் அட்லி பற்றி அதிகளவில் அறிந்திருக்க மாட்டீர்கள். இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தபொழுது இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்தவர் இவர்தான்.
சர்ச்சில்லை பற்றி சில விஷயங்கள்: சர்ச்சில் இந்தியர்கள் தங்களை தாங்களே ஆட்சி செய்து கொள்ள அருகதையற்றவர்கள் என்கிற பார்வை கொண்டவர்; இந்தியாவிற்கு சுதந்திரம் எல்லாம் தரமுடியாது என அழுத்தந்திருத்தமாக சொன்னவர் ;இந்தியாவே பசியால் வாடிக்கொண்டு இருந்த பொழுது உணவுக்கப்பலை இங்கே அனுப்ப முடியாது என சொல்லி பல மக்களை பசியில் சாகவிட்டவர் .
அட்லி பாரிஸ்டர் படிப்பு படித்துக்கொண்டிருந்த பொழுது சமூக சேவையில் ஈடுபட வந்து படிப்பை துறந்தார். அதோடு ராணுவத்தில் இணைந்தும் போரிட்டார். இளம் வயதில் பேபியன் அமைப்பில் உறுப்பினராக இருந்தார். நேரடிப்புரட்சியில் இறங்காமல் படிப்படியாக மக்களின் சிந்தனையில் மாற்றம் கொண்டு வந்து சமூகத்தில் மாற்றத்தை உண்டு செய்யும் இந்த அமைப்பில் பணியாற்றிய பின்னர் சோசியலிசம் அவரை ஈர்த்தது.
அதே சமயம் அவர் பூர்ஷுவாக்களை வெறுக்கவில்லை. வறுமையும்,பசியும் மக்களை விட்டுப் போகவேண்டும் என்பதே அவரின் கனவாக இருந்தது. அதை ஜனநாயக முறையில் அவர் சாதிக்க எண்ணினார். “இன்றைக்கு இரவு உணவுக்கு வீட்டுக்கு போகிறேன். ஆனால்,இரவு உணவு இருக்குமா என்றுதான் தெரியவில்லை.” என்ற தெருவோர இளைஞனின் குரல் அவரை வாழ்நாள் முழுக்க உலுக்கியது.
லேபர் கட்சியில் படிப்படியாக உயர்ந்த இவர், ஹிட்லரை சமாளிக்க அமைக்கப்பட்ட கூட்டரசில் சர்ச்சில் உடன் இணைந்து துணைப்பிரதமராக பணியாற்றினார் .தங்களுக்கு வாக்களித்தால் நாட்டை உலகப்போரின் அழிவுகளில் இருந்து மீட்டெடுப்போம் என வாக்குறுதி கொடுத்து ஆட்சியை பிடித்தார் .
அட்லியின் சறுக்கல்கள் என்று இரண்டை சொல்லலாம். இந்தியாவின் பிரிவினையை அவசர அவசரமாக செயல்படுத்த மவுன்ட் பேட்டனை அனுப்பினார். அவர் கேட்டபடியே அனைத்தையும் செய்ய அனுமதித்தார். எண்ணற்ற உயிரிழைப்பை ஒழுங்கான திட்டமிடலின் மூலம் தடுத்திருக்க வேண்டிய ஆங்கிலேய ஆட்சி, தன் மக்களை மட்டும் காத்துக்கொண்டு போகும் வேலையை சிறப்பாக செய்தது. பாலஸ்தீன் தேசம் உருவாகாமல் யூதர்கள் ஒருங்கிணைந்து நின்று இஸ்ரேலை உருவாக்கிய காலத்தில், ஒரு வார்த்தை கூட எதிர்க்காமல் அதை கச்சிதமாக ஏற்றுக்கொண்டவர் இவர்.
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்த இந்தியா, பாகிஸ்தான், பர்மா, இலங்கை, ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு விடுதலை கொடுத்தார். மேலும் நாடு முழுக்க மேல்நிலைக்கல்வியை இலவசமாக்கினார். நாடே திவாலாகும் என்று கருதப்பட்ட சூழலில் தேசிய அளவில் மருத்துவ நலம் பேணும் திட்டங்களை கொண்டு வந்தார்; விமானத்துறை, மின்சாரம், ரயில்வே என பலவற்றை தேசியமயமாக்கினார்.
சர்ச்சில் மற்றும் பெரும்பாலான இங்கிலாந்து பிரதமர்களை போல தான் சொன்னதையே பெரும்பாலும் செயல்படுத்த எண்ணாமல், பலரின் கருத்துக்களை கேட்டு சுமுகமாக ஆட்சி செய்தார். போருக்கு பின் இங்கிலாந்தை கட்டமைத்த சிற்பி இவர்.
இங்கிலாந்தின் கடந்த நூற்றாண்டின் தலை சிறந்த பிரதமராக ஓட்டெடுப்பு ஒன்றில் தெரிவு செய்யப்பட்டார் அட்லி. மொத்தத்தில் சர்ச்சிலை விட பல மடங்கு கருணைகொண்ட அல்லது நிதர்சனம் உணர்ந்த பிரதமர் இவர் என்பதே சரி.
செப்.8 - கிளமென்ட் அட்லி நினைவு தினம்.