

பிரான்ஸ் படைப்பாளி, தத்துவமேதை
உலகப் புகழ்பெற்ற பிரான்ஸ் படைப்பாளியும், மெய்யியல் அறிஞரும், தத்துவமேதையுமான சிமோன் டி பொவார் (Simone de Beauvoir) பிறந்த தினம் இன்று (ஜனவரி 9). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
*பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் (1908) பிறந்தவர். சட்ட வல்லுநர், நடிகரான தந்தை, இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இந்த ஆர்வத்தை தன் குழந்தைகளிடமும் உருவாக்கினார்.
*கெட்டிக்கார மாணவியான பொவார், சிறுவயதிலேயே சிறந்த பிரெஞ்சு இலக்கியங்களைப் படித்தார். தந்தை தந்த ஊக்கத்தால் அவ்வப்போது எழுதியும் வந்தார். படிப்பில் அனைத்துப் பாடங்களிலும் சிறந்து விளங்கினாலும், மெய்யியலில் அதிக நாட்டம் கொண்டார்.
*ஒரு மனைவியாக, தாயாக இருப்பதைவிட ஒரு எழுத்தாளராக, ஆசிரியராக வேண்டும் என்ற ஆசை 15-வது வயதில் கிளை விரித்தது. உயர் கல்விக்காக பாரீஸ் பல்கலைக்கழகம் சென்று கஷ்டப்பட்டு படித்தார். அங்கு உலகப் புகழ்பெற்ற தத்துவவாதிகள், இலக்கியவாதிகளைச் சந்தித்துப் பழகும் வாய்ப்பு கிடைத்தது.
*தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். கணிதம், தத்துவத்தில் பட்டம் பெற்றார். இலக்கியம், பிரெஞ்ச், லத்தீன் மொழிகளும் பயின்றார். தத்துவ வரலாறு, தர்க்கம், உளவியலில் சான்றிதழ் தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்றார். நெறிமுறைகள், சமூகவியலும் கற்றார்.
*கல்விப் பணியில் சேர்வதற்கான தேர்வில் தேர்ச்சி பெற்று, பிரான்ஸ் நாட்டின் இளம் தத்துவ ஆசிரியர் என்ற பெருமையை 21 வயதில் பெற்றார். நெருங்கிய தோழி உட்பட ஏறக்குறைய அனைத்துப் பெண்களும் வீட்டிலும், சமூகத்திலும் அனைத்துவிதமான அடக்குமுறைகளாலும் வதைபடுகிறார்கள் என்பதை அறிந்து மனம் வருந்தினார்.
*பாரீஸை ஜெர்மன் படை 1940-ல் கைப்பற்றியபோது, அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் இவரது வேலை பறிபோனது. அதுமுதல் மீண்டும் எழுதுவதில் கவனம் செலுத்தினார். ‘லெஸ் டெம்பஸ் மோடர்னஸ்’ என்ற இதழின் ஆசிரியராக சிறிதுகாலம் பணியாற்றினார்.
*‘ஷி கேம் டு ஸ்டே’, ‘தி மாண்ரின்ஸ்’, ‘தி எதிக்ஸ் ஆஃப் ஆம்பிகியுட்டி’ உள்ளிட்ட இவரது படைப்புகள் உலகப் புகழ்பெற்றன. ‘தி செகண்ட் செக்ஸ்’ என்ற இவரது பகுப்பாய்வு நூல் பிரபலமானதுடன், பல்வேறு சர்ச்சைகளையும் கிளப்பியது.
*தத்துவம், மெய்யியல், அரசியல், சமூகப் பிரச்சினை சார்ந்த கட்டு ரைகள், நாடகம், நாவல், வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல், நாட்குறிப்பு என அனைத்துக் களங்களிலும் முத்திரை பதித் தார். பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக 1970-களில் நடந்த போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்தார். பிரெஞ்சு பெண் கள் விடுதலை இயக்கம் உருவாக பெரிதும் உதவியாக இருந்தார்.
*நெறிமுறைகள், அரசியல், இருத்தலியல் குறித்த இவரது கருத்துகள் இவரது படைப்புகளில் அதிகம் பிரதிபலித்தன. வாழ்நாள் முழுவதும் பிரான்சின் அறிவுசார் தத்துவவாதிகள், படைப்பாளிகள், அறிஞர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பையும் அவர்களின் அங்கீகாரத்தையும் பெற்றார்.
*இருத்தலியல் தத்துவ அறிஞர், பெண்ணியவாதி, அரசியல் ஆர்வலர், சமூக சீர்திருத்தவாதி என பல வகையிலும் இவரது பங்களிப்பு போற்றப்பட்டது. பெருமை வாய்ந்த பிரான்ஸ் அரசின் இலக்கிய விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகள், பதக்கங்கள், கவுரவங்களைப் பெற்றார். பிரான்ஸின் முன்னணி படைப்பாளிகளில் ஒருவராக விளங்கிய சிமோன் டி பொவார் 78-வது வயதில் (1986) மறைந்தார்.
- ராஜலட்சுமி சிவலிங்கம்