

நோபல் பரிசு பெற்ற பிரிட்டன் இயற்பியலாளர்
பிரிட்டனைச் சேர்ந்த அறிவியலாளரும் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றவருமான ஆண்டனி ஹெவிஷ் (Antony Hewish) பிறந்த தினம் இன்று (மே 11). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* பிரிட்டனில் கார்ன்வெல் நகரில் பிறந்தார் (1924). தந்தை வங்கியாளர். சிறுவயதில் எங்கு, எந்த இயந்திரத்தைப் பார்த்தாலும், அவை இயங்கும் நுட்பங்களைத் தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டினார்.
* பள்ளி தங்கும் விடுதியில் சாதாரண ரேடியோ வைத்துக்கொள்ள அனுமதி இல்லை என்பதால், ஒரு கிறிஸ்டல் செட் ரேடியோவைத் தானே தயாரித்துப் பயன்படுத்தினார். பள்ளிப் படிப்பு முடிந்த உடன் டவுண்டன் கிங் கல்லூரியில் இயற்பியல், கணிதம், வேதியியல் பயின்றார்.
* போர் நடைபெற்று வந்ததால் ராயல் ஏர்கிராஃப்ட் நிறுவனத்தில் யுத்த சேவைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு முதலில் ரேடியோ தகவல் பெறும் யூனிட்டில் பணியாற்றினார், பின்னர் எதிரி ரேடார்களைச் செயலிழக்கச் செய்யும் கருவி ஒன்றை மேம்படுத்தும் குழுவில் இணைந்தார். அதன் தொலைத்தொடர்பு ஆராய்ச்சி நிலையத்தில், பிரபல விஞ்ஞானி மார்ட்டின் ரைலுடன் இணைந்து பணியாற்றினார்.
* இவரது இந்த அனுபவமும் யுத்த சேவை அனுபவமும், ரேடியோ அஸ்ட்ரானமி வரலாற்றில் இவரை ஆர்வம் கொள்ள வைத்தன. 1946-ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்குத் திரும்பி வந்தார். படிப்பைத் தொடர்ந்து, பட்டம் பெற்றார். பின்னர் கேவண்டிஷ் வானியற்பியல் ஆய்வகத்தில் ஆராய்ச்சி மாணவராக இணைந்து 1952-ல் முனைவர் பட்டம் பெற்றார்.
* சூரியனிலிருந்து தொடர்ச்சியாக வெளிப்படும் துகள்களின் (solar wind) ஓட்டம் குறித்த ஆய்வுகளுக்காக இருதுருவ ஆன்டெனாவை (dipole antenna) வடிவமைத்தார்.
* மிகப் பெரிய மற்றும் மிகத் தொலைவில் காணப்படும் நட்சத்திரங்களான குவாசார்கள் குறித்தும், எந்த நட்சத்திரங்கள் உண்மையில் இந்தப் பிரிவைச் சேர்ந்தவை என்பதைக் கண்டறிவதற்காகவும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
* கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக இயற்பியல் விரிவுரையாளராகவும், ரேடியோ வானியல் பேராசிரியராகவும் பணியாற்றினார். கிரகங்களுக்கு
* இடையேயான பொறி சிதறல் (scintillation) குறித்த ஆய்வுகளுக் காக முல்லார்ட் ரேடியோ வானியல் ஆய்வகத்தை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தொடங்குவதில் முக்கியப் பங்கு வகித்தார்.
* 1982 முதல் 1988 வரை இதன் தலைவராகவும் செயல்பட்டார். சக விஞ்ஞானிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் முதல் துடிவிண்மீனைக் (பல்சர்) கண்டறிந்தார். இது தொடர்பான பங்களிப்புக்காகவும் கதிர்வீச்சுப் பொருள் வில்லைத் தொகுப்பை (radio aperture synthesis) உருவாக்கியதற்காகவும் கதிர்வீச்சு வானியலாளர், மார்ட்டின் ரைலுடன் இணைந்து 1974-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார்.
* உலகம் முழுவதும் உள்ள பல அறிவியல் மையங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் விரிவுரையாற்றினார். பிரிட்டிஷ் வானியல் கழகத்தின் எடிங்டன் பதக்கம், ஆல்பர்ட் ஏ மைக்கேல்சன் பதக்கம் உள்ளிட்ட பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றார்.
* மான்செஸ்டர், கேம்பிரிட்ஜ், எக்சேட்டர் உள்ளிட்ட ஆறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டங்கள் வழங்கின. பெல்ஜியம் கலை, அறிவியல் கல்விக்கழகம், அமெரிக்க கலை அறிவியல் கல்விக்கழகம், இந்திய தேசிய அறிவியல் கல்விக் கழகம் ஆகியவற்றின் அயல்நாட்டு உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். அரை நூற்றாண்டுக்கும் மேல் வானியற்பியல் களத்தில் முக்கிய பங்களிப்புகளை வழங்கி வந்த ஆண்டனி ஹெவிஷ், இன்று 94-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.