Last Updated : 15 Jan, 2014 12:29 PM

Published : 15 Jan 2014 12:29 PM
Last Updated : 15 Jan 2014 12:29 PM

ட்விட்டரில் கலக்கும் கேஜ்ரிவால் குறும்(பு)பதிவுகள்!

ஆம் ஆத்மி கட்சி மூலம் சாமானிய மக்களின் பிரதிநிதியாகி டெல்லி முதல்வராகி இருக்கும் அரவிந்த் கேஜ்ரிவால், ட்விட்டரில் நிச்சயம் இப்படி ஒரு புகழை எதிர்பார்த்திருக்க மாட்டார்.

அரசியலில் அவர் வலியுறுத்தும் நேர்மை பற்றி நாட்டு மக்கள் பேசுகிறார்களோ இல்லையோ... ட்விட்டரில் அவரது நேர்மை பற்றிய குறும்பதிவுகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

இந்தக் குறும்பதிவுகளை கேஜ்ரிவால் எந்த அளவுக்கு விரும்புவார் என்று தெரியவில்லை. ஆனால் அவர் தன்னையறியாமல் புன்னகைத்து கொள்ளக்கூடும். காரணம், இந்த குறும்பதிவுகள் எல்லாமே அவரது நேர்மையை கிண்டல் செய்பவை.

ட்விட்டர் வழக்கப்படி, இந்த குறும்பதிவுகளுக்காக என்றே, ஒரு ஹாஷ்டேகும் உருவாக்கப்பட்டுள்ளது. #YoKejriwalSoHonest (கேஜ்ரிவால் மிகவும் நேர்மையானவர்) எனும் ஹாஷ்டேகுடன் இந்த நகைச்சுவை குறும்பதிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு குறும்பதிவுகளும் ஒரு விதத்தில் கேஜ்ரிவாலின் நேர்மையை பற்றை நையாண்டி செய்யும் வகையில் அமைந்துள்ளன.

உதாரணத்திற்கு சில குறும்பதிவுகள்:

'கேஜ்ரிவால் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சி விருந்துக்குக்கூட கட்டணம் வசூலித்தார்.'

'அவர் பள்ளி படிவத்தில் தன் தந்தை பெயரை எழுதுவதற்கு முன்னர் மரபணு பரிசோதனை செய்து கொண்டார்'.

'மனைவி நான் குண்டாக இருக்கிறேனா என்று கேட்டால் அவர் ஆம் என்றே பதில் சொல்வார்'.

'ட்ரு லைஸ் படத்தின் முதல் பாதியை மட்டுமே அவர் பார்த்தார்'.

இவை எல்லாம் மாதிரிகள் மட்டுமே. இதே போல விதவிதமான முறையில் கேஜ்ரிவாலின் நேர்மையை கிண்டலடிக்கும் நகைச்சுவை குறும்பதிவுகள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கின்றன.

இதன் பயனாக #YoKejriwalSoHonest ஹாஷ்டேக் ட்விட்டரில் சமீபத்தில் முன்னிலை இடத்தை பிடித்தது. பலரும் இந்த குறும்பதிவுகளை பார்த்து ரசித்து தங்கள் பங்கிற்கு புதிய கேஜ்ரிவால் நகைச்சுவை குறும்பதிவுகளை உருவாக்கி பகிர்ந்து கொள்கின்றனர். பலர் ஏற்கெனவே வெளியான குறும்பதிவுகளையும் பகிர்ந்து கொள்கின்றனர்.

கேஜ்ரிவால் நகைச்சுவை குறும்பதிவுகளில் மிகச் சிறந்தவை என்று எடுத்து தனியே பட்டியலிப்படும் அளவுக்கு இந்த குறும்பதிவுகள் ட்விட்டர் வெளியில் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.

ட்விட்டரில் இப்படி திடீர் புகழுக்கு ஆளாவது அடிக்கடி நடப்பதுதான். பொதுவாக சர்ச்சைக்குரிய வகையில் ஏதாவது கூறி, சிக்கிக்கொண்டால் அதை வைத்துக்கொண்டு ட்விட்டரில் குறும்பதிவுகளில் வறுத்தெடுத்து விடுவார்கள். சில நேரங்களில் குறும்பதிவுகளில் கொண்டாடவும் செய்வார்கள்.

சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றபோது, தேங்க்யூசச்சின் எனும் ஹாஷ்டேக் மூலம் அந்த சாதனை நாயகனுக்கு குறும்பதிவுகளில் நன்றிக் கனைகளை தொடுத்தனர். சில நேரங்களில் ஏதாவது ஒரு அம்சத்தை வைத்துக்கொண்டு குறும்பதிவுகளில் நையாண்டி செய்து தீர்த்துவிடுவார்கள்.

இந்த வகை குறும்பதிவுகளை யார் துவக்குகிறார்கள், எதற்காக துவக்குகிறார்கள் என்று தெரியாது, ஆனால் திடீரென் பார்த்தால் ட்விட்டரில் குறும்பதிவுகள் ஆறாக பெருகத் துவங்கி, புதிய போக்காக உருவாகிவிடும்.

ஹாலிவுட் பிரபலங்களில் துவங்கி நம் நாட்டு அரசியல்வாதி வரை பலருக்கு இந்தப் பெருமை கிடைத்திருக்கிறது. இப்போது கேஜ்ரிவால் இந்தப் பெருமைக்கு ஆளாகியிருக்கிறார்.

மாற்று அரசியலை முன்வைத்திருக்கும் கேஜ்ரிவால் ஏற்படுத்தியுள்ள தாக்கம், மக்களவை தேர்தலில் எந்த அளவுக்கு பிரதிபலிக்கும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ட்விட்டரில் அவரது நேர்மையை வைத்துக்கொண்டு நகைச்சுவை விருந்து படைத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால், இந்த கேலியையும் கிண்டலையும் எப்படிப் புரிந்து கொள்வது என்பது சுவாரஸ்யமான கேள்வி. ட்விட்டரில் நடிகர் ரஜினி காந்த் பற்றிய குறும்பதிவுகள் மிகவும் பிரபலமானவை. அவரது அதீத ஆற்றலை மையப்படுத்தி பஞ்ச் வசனம் பாணியில் நூற்றுக்கணக்கில் நகைச்சுவை குறும்பதிவுகள் இருக்கின்றன.

அதேபோல சமீபத்தில் வட இந்திய நகைச்சுவை நடிகர் அலோக் நாத் பற்றிய நகைச்சுவை குறும்பதிவுகள் பிரபலமாகின. புனியாத் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்ற அலோக் நாத் எல்லா தொடர்களிலும் வாழ்க்கையில் மதிப்பீடுகளை வலியுறுத்தி பேசுவதை மையமாக வைத்துக்கொண்டு பல்வேறு நையாண்டி குறும்பதிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆனால், அரவிந்த் கேஜ்ரிவால் நேர்மையை கிண்டலடிக்கும் குறும்பதிவுகள் இதை எல்லாம் மிஞ்சியிருக்கிறது. கேஜ்ரிவால் ஆதரவாளர்களுக்கு இவை வருத்தம் தரலாம். அவரது எதிர்ப்பாளர்களுக்கு ஆனந்தம் தரலாம். ஆனால், என்னதான் கிண்டலடித்தாலும் ஒருவிதத்தில் கேஜ்ரிவால் நேர்மைக்கான அடையாளமாகக்கூட இந்த குறும்பதிவுகளை கருதலாம்.

இவற்றில் பெரும்பாலானவை, கேஜ்ரிவாலை கிண்டலடிப்பது என்பதை விட, இந்தப் போக்கை மையமாக கொண்டு ஒரு புதிய நகைச்சுவை தெறிப்பை உருவாக்கும் ஆர்வத்தின் வெளிப்பாடாக இருப்பதை பார்க்கலாம்.

'கேஜ்ரிவால் வைரஸ் பாதுகாப்பு சேவையை பயன்படுத்துவதில்லை. ஏனெனில் அவருக்கு பாதுகாப்பு பிடிக்காது', 'கேஜ்ரிவால் கம்ப்யூட்டரில் படத்தை டவுண்லோடு செய்து பார்த்தால்கூட டிக்கெட் வாங்கிவிடுவார்' என்பது போன்ற குறும்பதிவுகள் இவற்றுக்கு உதாரணம்.

'கேஜ்ரிவால் விசிட்டிங் கார்டில் யாருமில்லை (நோபடி) என்றே குறிப்பிடப்பட்டுள்ளது'. 'சுற்றி யாரும் இல்லாவிட்டாலும்கூட அவர் தும்மல் வந்தால் மன்னிப்பு கேட்பார்' என்பது போன்ற குறும்பதிவுகளும் மேலும் சில உதாரணங்கள்.

எனவே, இதில் பங்கேற்பவர்களுக்கு கேஜ்ரிவாலை கிண்டலடிக்க வேண்டும் என்ற நோக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்று தெரியவில்லை. ட்விட்டரில் பொங்கும் நகைச்சுவை உணர்வுக்கு இவை அடையாளம். அல்லது சமூக வலைத்தள யுகத்தில் ஒருவர் முன்வைக்கும் மதிப்பீடுகளுக்கான அங்கீகாரமாக இவற்றைக் கருதலாமா?

கேஜ்ரிவால் தொடர்பான நகைச்சுவை குறும்பதிவுகள்>#YoKejriwalSoHonest

கட்டுரையாளரின் வலைத்தளம்>http://cybersimman.wordpress.com/

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x