

மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு வந்த தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14.08.2016) சென்னையில் மரணமடைந்தார். தமிழ் சினிமாவில் 92-க்கும் மேற்பட்ட படங்களில் 1500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள முத்துக்குமார் இரு முறை தேசிய விருதுகளைப் பெற்றவர்.
எளிய நடை மூலம் தமிழை எல்லோரிடமும் கொண்டு சேர்த்தவருக்கு, இணைய உலகம் தெரிவித்த இரங்கற்பாக்களின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்..
மஞ்சள் வெய்யில் நீ... மின்னல் ஒளி நீ... உன்னைக் கண்டவரைக் கண்கலங்க நிற்க வைக்கும் தீ!..
#முத்துக்குமார்
ஆனந்தயாழை மீட்டியவர் இன்று ஆழந்த நித்திரையில் ஆழ்ந்துவிட்டார்! ஆறாத்துயரத்துடன் இரங்கல்கள்!!!
கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி போகாதே போகாதே - முத்துக்குமார் தன் மனைவிக்குச் சொன்னதோ?!
மரணம் என்பது ஒரு கறுப்பு ஆடு. பல சமயங்களில் அது நமக்குப் பிடித்தமான ரோஜாக்களைத் தின்று விடுகின்றது.
#நா.முத்துக்குமார்
விருட்சமாய் கிளை பரப்பி, இலையாய் உதிர்ந்தவனுக்கு இரங்கல்கள்..
நீ காலத்தில் கரைந்தாலும்
உன் கவிதைக்கு காலமில்லை
நா.முத்துக்குமார் தன் பாடல் வரிகளை நிறுத்திக்கொண்டார். (41 வயதில்)
ஆனந்த யாழை இனி யாராலும் மீட்ட முடியாது அன்பின் முத்துக்குமார்.
வரிகளுக்கு உயிரினை தந்துவிட்ட மனிதரின் உயிர் இன்று பிரிந்துவிட்டது.
கவிதை எழுத நீண்டநாள் ஆசை எனக்கு. தாளும் மையும் இப்போதுதான் கிடைத்தது. இரண்டு நாள் ஆகிறதாமே?- கவிதை இறந்து.!
எப்போதுமே ஒரு கலைஞனின் மரணம் என்பது அவனது மரணமாக மட்டுமே இருப்பதில்லை போல. அவனது கலையோடு பிணைக்கப்பட்டிருப்பவர்கள் அனைவருமே தாங்களும் உள்ளுக்குள் சிறிது செத்துப் போகிறார்கள் என்று தோன்றுகிறது.
தன்னலம் பேணாது தற்கொலைதான் செய்து கொண்டுவிட்டார் நா.முத்துக்குமார்.
முடியாமல் முடிந்துவிட்டது ஒரு பாடல்... நீ இருக்கிறாயா இல்லையா எனத் தெரியாமல் விளையாடிக்கொண்டிருந்தான் உன் ஒன்பது வயது ஆதவன்... மின்சாரம் இல்லாத புழுக்கத்தில் வியர்த்து அழுதுகொண்டே இருந்தாள் உன் எட்டு மாத யோக லட்சுமி...
விளையாட்டுக்கும் அழுகைக்கும் இடையில் ஏன் இப்படி ஒரு மௌனத்தையும் துயரத்தையும் விட்டுச் சென்றாய் முத்து?
ஒரு மரணத்துக்கு முதன்முறையாக சமூகதளங்களில், ஒரு நெகடிவ் விமர்சனம் கூட இல்லை என்பதே நா.முத்துக்குமார் கடந்து வந்த பாதையை விளக்குகிறது.
எல்லோரையும் இணைக்கும் புள்ளி..
காதலுக்குப் பிறகு..
மரணமாகத்தானே இருக்கமுடியும்?
நா.முத்துக்குமார் எழுதாமல் ஓங்கிச் சொன்ன கவிதை ஒன்றுண்டு, அது "உடல் நலம் பேண்"
வைரமுத்துவுக்குப் பின்னர் ஒரு படத்தின் முழுப்பாடல்களும் எழுதியவர் என்ற ரீதியில்கூட முன்னணியில் திகழ்ந்தவர் நா.முத்துக்குமார்
எடிட்டர் கிஷோர். இப்போது மானுட கவிஞர் முத்துக்குமார்.. பின்புலம் இல்லாமல், கிராமிய சூழலில் வளர்ந்து கலைத்துறையில் வென்று சமூகம் சார்ந்த தொண்டு செய்து விரைவாக இயற்கை எய்தினர்...
பிறர் நலத்துக்காக போராடும் நண்பர்களே உங்கள் உடல்நலம் காப்பது அவசியம். உரிமையுடன், சீற்றத்துடன் பதிவு செய்கிறேன்.
ஊரெல்லாம் மகள்கள் மீட்டும் யாழிசையை ரசிக்க வைத்தவன்
தன் மகளின் ஆனந்த யாழ் மீட்டலை ரசிக்காமலே சென்றான்.
#நா_முத்துக்குமார்
தமிழ் ஆளுமைகளுக்கும், நீள் ஆயுளுக்கும் பெரும்பாலும் ஏழாம் பொருத்தம்தான் போல.
பாரதி
புதுமைப்பித்தன்
பட்டுக்கோட்டை
வரிசையில் இப்போது நா.முத்துக்குமார்.
ஓர் இலக்கியம் நாற்பத்தோரு வரிகளில் முடிந்து போனது.
அழகான நேரம்..
அதை நீ தான் கொடுத்தாய்..
அழியாத சோகம்..
அதையும் நீ தான் கொடுத்தாய்..