Published : 24 Jan 2017 10:09 AM
Last Updated : 24 Jan 2017 10:09 AM

டான் ஷெக்மன் 10

நோபல் பெற்ற இஸ்ரேல் வேதியியலாளர்

நோபல் பரிசு பெற்ற இஸ்ரேல் வேதியியல் வல்லுநரான டான் ஷெக்மன் (Dan Shechtman) பிறந்தநாள் இன்று (ஜனவரி 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* இஸ்ரேலின் டெல்அவிவ் நகரில் (1941) பிறந்தார். அங்கு பள்ளிக்கல்வி பயின்றார். இளம் வயதிலேயே அறிவியல் நூல் களை அதிக நாட்டத்துடன் படிக்கத் தொடங்கினார். பிரபல விஞ்ஞானி ஜுல்ஸ் வெர்னேவின் ‘தி மிஸ்டீரியஸ் ஐலண்ட்’ நூலைப் படித்ததும், பொறியியலில் ஆர்வம் பிறந்தது.

* ராணுவத்தில் சிறிது காலம் பணியாற்றிய பிறகு, இஸ்ரேல் தொழில்நுட்பக் கல்வி (டெக்னியான்) நிறுவனத்தில் இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்றார். மெட்டீரியல் இன்ஜினீயரிங்கில் முதுகலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து படித்து, முனைவர் பட்டம் பெற்றார்.

* டெக்னியான் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியில் அமர்ந்தார். ஓஹியோ மாநிலத்தில் உள்ள வான்வெளி ஆய்வுக்கூடத்தில் ஃபெல்லோவாக நியமிக்கப்பட்டார். டைட்டானியம், அலுமினியத்தின் பண்புகள், மைக்ரோ ஸ்ட்ரக்சர் குறித்து அங்கு 3 ஆண்டுகாலம் பயின்றார். இதுகுறித்த ஆய்வுகளையும் மேற்கொண்டார்.

* பால்டிமோரில் உள்ள அமெரிக்க தேசிய தரம் மற்றும் தொழில்நுட்பத்துக்கான அமைப்பில் பணியாற்றினார். வேகமாக திடப்படுத்தப்படும் அலுமினியம் மற்றும் 10 முதல் 14 சதவீத மாங்கனீஸ் கொண்ட கலவையை எலெக்ட்ரான் மைக்ரோஸ்கோப் மூலம் பார்க்கும்போது அணுக்கள், இருபதுமுக (Icosahedral) அமைப்பில் நீண்ட தொடராகக் காணப்படுவதைக் கண்டறிந்தார்.

* சீரற்ற ஆனால் சீரானதுபோலத் தோற்றமளிக்கும் அடுக்குமுறைகள் கொண்ட படிகங்கள் இருப்பதைக் கண்டறிந்தார் . இவை குவாசிகிரிஸ்டல் (Quasicrystal) எனக் குறிப்பிடப்பட்டன. இதன்மூலம் திடப்பொருள்களின் அணு அமைப்பை விவரித்தார். ஆனால் இது உடனடியாக ஏற்கப்படாமல் பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியது. இறுதியில் இவரது முடிவுதான் சரி என நிரூபணமானது.

* குவாசிகிரிஸ்டல், இருபதுமுக முக்கோணக வடிவநிலையை (Icosahedral Phase) கொண்டது என்பதைக் கண்டறிந்தார். குவாசிகிரிஸ்டல்களைக் கண்டறிந்ததற்காக 2011-ம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

* பெரும்பாலான திடப் பொருட்கள் படிக வடிவிலானவை என்பதால், அவற்றின் அணுக்கள் அமைப்பு குறித்த இந்த முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பு குவாசிபீரியாடிக் கிரிஸ்டல்கள் (அரைதனிம படிகங்கள்) என்ற புதிய களம் உருவாகக் காரணமாக இருந்தது. மேலும் பல முக்கிய ஆராய்ச்சிகளுக்கும் வழிகோலியது. குறைந்த அளவிலான வெப்பம், மின்சாரத்தைக் கடத்துகிற, அதேநேரம், உயர் அளவிலான கட்டமைப்பு உறுதிகொண்ட இதே மாதிரியான குவாசிகிரிஸ்டல்கள் கண்டறியப்பட்டன.

* இயற்பியலுக்கான உல்ஃப் பரிசு, இஸ்ரேல் அரசின் இயற்பியல், வேதியியலுக்கான பரிசுகள், ஐரோப்பிய பொருள் ஆய்வுக் கழகத்தின் 25-வது ஆண்டுப் பரிசு, வேதியியலுக்கான இஸ்ரேல் ஈமெட் பரிசு, ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ் பரிசு, ரோத்ஸ்சைல்ட் பரிசு என ஏராளமான விருதுகள், பரிசுகளைப் பெற்றுள்ளார்.

* அமெரிக்காவின் இயோவா பல்கலைக்கழகம், அமெரிக்க அரசின் ஆற்றல்சார் துறையைச் சேர்ந்த ஆமெஸ் ஆய்வகத்தின் இணை ஆய்வாளராகவும் பணியாற்றியுள்ளார். தனது கண்டுபிடிப்புகள் குறித்து பல கட்டுரைகள், நூல்களை எழுதியுள்ளார்.

* டெல் அவீவ் டெக்னியான் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் தற்போது பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இயற்பியல்சார் வேதியியல், கட்டமைப்பு வேதியியல் துறைகளுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ள டான் ஷெக்மன் இன்று 76-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x