ஜெயகாந்தனோடு பல்லாண்டு - 4

ஜெயகாந்தனோடு பல்லாண்டு - 4
Updated on
3 min read

ஜெயகாந்தன், நான், வையவன் மூவரும் சென்னை மவுண்ட் ரோடில் இருந்த ‘நியூஎல்பின்ஸ்டன்’ திரையரங்கத்தில் ‘39 ஸ்டெப்ஸ்’ என்கிற ஆங்கிலப் படம் பார்த்துவிட்டு, திருவல்லிக்கேணியில் வந்து மாலைச் சிற்றுண்டி சாப்பிட்டோம். அப்புறம் கடற்கரைக்குப் போனோம்.

எனது கடற்கரை அனுபவங்கள் சொற்பமானவை. அவற்றுள் இன்றளவும் பிரகாசமாய்த் திகழ்வது அன்றைய கடற்கரை அனுபவம்தான். அன்றைக்கு ஒரு பெரிய நிலவு வானத்தில் இருந்தது.

நாங்கள் மூவரும் ஓர் ஒதுக்கமான இடத்தில் போய் உட்கார்ந்தோம். பேச ஆரம்பித்தோம். அந்தக் கடற்கரையின் பிற ஓசைகள் எல்லாம் எங்கள் காதில் படாமல் போயின.

அன்று பகல் பூராவும், தார் ரோடு, டவுன் பஸ், பிறரின் பிரஸன்னம் இவற்றின் ஊடாக நாங்கள் மேற்கொண்ட சிறுசிறு உடையாடல்கள் எல்லாம் எங்களுக்குள் ஓர் ஐக்கியத்தை ஏற்கெனவே உண்டாக்கிவிட்டிருந்தன. அவருக்குப் பிடிக்காதவை எல்லாம் எஙகளுக்கும் பிடிக்காமல் போய்விட்டன. அவருக்குப் பிடித்தது எல்லாம் எங்களுக்கும் பிடித்துப் போய்விட்டன.

இப்படிப்பட்ட ஒருவரோடு, நிலவு பிராகாசிக்கும் ஒரு கடற்கரையில் அமர்ந்து, கடலையும் பிற காட்சிகளையும் மறந்து உரையாடுவது என்பது எப்பேர்ப்பட்ட ஆனந்தம்!

ஆரம்பத்தில் ஜெயகாந்தனின் கவனம், வானிலிருந்து பொழியும் நிலவொளியின்பால் சென்றது. தமிழ் எழுத்தாளர்கள் எங்ஙனமெல்லாம் நிலவை வர்ணிப்பார்கள் என்று அவர் கிண்டலடித்தார்.

எப்போதுமே அவரது உரையாடல்களின் பல சிறப்பம்சங்களில் ஒன்று அவ்வப்போது பீறிட்டு ஊற்றெடுக்கும் ஹாஸ்ய ரஸம்தான். ஒரு சீரியஸான நபர், இத்தகைய சிரிப்பலைகளை மூட்டிவிடுவதை நான் வேறு யாரிடத்தும் கண்டதில்லை. ‘Wit is Salt of Conversation’ என்று எங்கேயோ படித்தது அப்போது எனக்குக் கவனத்தில் வந்தது.

அன்று அதற்கப்புறம் என்னென்னவோ, காந்தியைப் பற்றி, நேருவைப் பற்றி, பாரதியைப் பற்றி, விவேகானந்தரைப் பற்றி, கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி, அங்கே அவருக்கு நேர்ந்த அருந்தோழமைகளைப் பற்றி, அவரது இளம்பிராயம் மற்றும் அவர் எழுத வந்தது பற்றியெல்லாம் பேசிய பின், நாங்கள் அன்று பகல் பூராவும் அறியாது போன ஜெயகாந்தப் புஷ்பத்தின் இன்னொரு மடல் அவிழ்ந்தது. அவர் பாடலானார். அவர் பாடியபோது… ஒரு பல்லக்கு கட்டி, கடலுக்கும் நிலவுக்கும் வானுக்கும் மேலே எங்களைத் தூக்கியது போல் இருந்தது.

‘நாடு வளர்ந்து செழிக்குது - புது

நம்பிக்கைகள் பிறக்குது..!’

- என்று ஒரு வரி பாடினார். அது ஒரு காலத்தில், ஜெயகாந்தனே இயற்றி, கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளில் பாடிய பாடலாம். கடற்கரையில் அந்தப் பாடலை அவர் பாடியபோது, ஒரு நம்பிக்கையின் த்வனி ஆகாயமெல்லாம் பரவியது போல் எங்களுக்குத் தெரிந்தது.

‘கத்துங் கடல்தன் மடியின் செல்வம்

வித்திட நம்மை அழைக்குது;

முத்தும் பவளமும் மூலப் பொருள்களும்

தெற்குக் கரையினில் கிடைக்குது!’

- இந்த வரியை அவர் பாடியபோது, நாங்கள் தென்னிந்தியக் கடற்கரையின் அத்தனை ஆகாசத் திலும் நீந்தினோம்.

‘மிக விரைவாக இயங்கி அதிர்ந்திடும்

எந்திர ஆலைகள் முழங்குது;

முகிலெனத் திரண்ட பஞ்சிலிருந்து

துகில் இழை மழையென வழங்குது!’

- இதன் முதல் வரியை அவர் பாட ஆரம்பித்த உடனேயே எங்களுக்கு எந்திரங்களின் ஓசைகள் கேட்க ஆரம்பித்துவிட்டன.

‘மிக விரைவாக இயங்கி அதிர்ந்திடும்…’ என்ற கம்பீரமான அந்தக் குரல் இப்போதும் என் காதில் அதிர்கிறது. டி.கே.சி-யாக இருந்தால், தனது கானக் குரலில் அந்த முதல் வரியில் வரும் ‘க’ கரங்கள் எல்லாம் எப்படி எந்திர ஓசைகளின் அடிநாதம் ஆகின்றன என்று நிரூபித்திருப்பார்.

அப்புறம் ஜெயகாந்தன், கவிஞர் தமிழ்ஒளியைப் பற்றிப் பிரஸ்தாபித்து, அவருடைய, ‘வீதியோ வீணையோ’-வில் வரும் சில வரிகளைப் பாடிக் காட்டினார்.

ஜெயகாந்தனின் சங்கீத ஞானம் அவருக்கு அமைந்த ஒரு மகா பாக்கியம் என்று நான் கருதுகிறேன். எழுத்தாளர்களுக்கு இசை ஞானம் என்பது கலைமகள் அளிக்கும் அரிய பரிசாகும். மனோபாவனைகளை முழுக்கவும் சிறப்பாகவும் ஊகித்து உணரவும், காலவெளிகளை அநாயஸமாகக் கடக்கவும் அது அவர்களுக்கு வழியமைத்துத் தருகிறது என்றெல்லாமும் நான் கருதுவதுண்டு.

பின்னால் நிகழ்ந்த பல சந்திப்புகளில், ‘‘பாடுங்கள்…’’ என்று நாங்கள் வேண்ட, அவர் குரலெடுத்துப் பாடுவார். தனது தனிமையில் தோய்ந்து தோய்ந்து அவ்வப்போது தானாகவும் பாடுவார். இந்த அற்புதமான அனுபவங்களுக்கெல்லாம் அன்று அந்தக் கடற்கரையின் ஓர் இறை ஆசியோடு கூடிய ஆரம்பம் நிகழ்ந்ததெனலாம்.

காலம் என்பது எப்போதுமே மனிதர்களைக் கட்டாயப்படுத்துவதாகவே இருக்கிறது. எனவேதான் அன்று கடற்கரையில் இருந்து நாங்கள் எழுந்தோம். திருவல்லிக்கேணியில் ஒரு பஸ் ஸ்டாப்புக்கு வந்தோம். திருப்பத்தூரில் பாரதி விழா ஞாயிற்றுக் கிழமை என்றால், தான் சனிக்கிழமையே வந்து விடுவதாக ஜெயகாந்தன் எங்களிடம் கூறினார்.

பிராட்வேவுக்குப் போகிற ஒரு டவுன் பஸ்ஸில் எங்களை ஏற்றிவிட்டு, அப்புறம் அவர் போக வேண்டிய பஸ்ஸுக்குப் போனார் ஜெயகாந்தன். நானும் நண்பர் வையவனும் ஏக காலத்தில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து, ‘‘ரொம்ப நல்லவர் இல்லே…’’ என்று இருவருமே சொல்லிக்கொண்டோம்.

மறுநாள் நாங்கள் திருப்பத்தூருக்குப் போய்ச் சேர்ந்தோம்.

எங்கள் நண்பர்கள் எங்களைப் பார்த்து, ‘‘என்னப்பா… ஜெயகாந்தன் என்ன சொன்னான்?’’ வர்றானாமா..?’’ என்று கேட்டனர். ஜெயகாந்தனுக்கு, ‘அன்’ விகுதி போட்டு அவர்கள் பேசியது எங்கள் காதுகளில் ’நாராசமாக’ ஒலித்தது.

‘‘அவர் ரொம்ப நல்லவருப்பா..!’’ என்று அவர்களை முதலில் ‘அன்’ விகுதியில் இருந்து ‘அர்’ விகுதிக்கு மாற்றினோம்.

- வாழ்வோம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள…
Pisakuppusamy1943@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in