ஸ்லிம்மா, சூப்பரா.. ஐபேட் ஏர் அறிமுகம்!

ஸ்லிம்மா, சூப்பரா.. ஐபேட் ஏர் அறிமுகம்!
Updated on
1 min read

வர்ணனைகள் இல்லாமல் ஆப்பிள் அறிமுகமா? மேலும் மெலிதானது, மேலும் லேசானது, மேலும் செயல்திறன் வாய்ந்தது எனும் வர்ணனையோடு ஆப்பிளின் ஐபேட் ஏர் ( i pad air )அறிமுகமாகியுள்ளது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற ஆப்பிளின் வருடாந்திர தொழில்நுட்ப திருவிழாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஐபேடின் அடுத்த மேம்பட்ட மாதிரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2010 ம் ஆண்டு அறிமுகமான பலகைக் கணினி என்று சொல்லப்படும் டேப்லெட் வகையைச் சேர்ந்த ஐபேடின் ஐந்தாம் தலைமுறை வடிவமாக இது அமைந்துள்ளது. இதற்கு புதிய பெயரும் சூட்டப்பட்டிருக்கிறது. ஐபேட் ஏர். புதிய பெயர் கொஞ்சம் பொருத்தமானது தான். காரணம் ஐபேட் ஏர் அதற்கு முந்தைய மாதிரிகளை விட மெலிதானது மற்றும் லேசானது. இதன் எடை ஒரு பவுண்ட் தான் என்கிறது ஆப்பிள். அதாவது 500 கிராமுக்கும் குறைவு. இதை கையில் வைத்துப் பார்த்தால் தான் இதன் அருமை தெரியும் என்றும் ஆப்பிள் சொல்கிறது.

எடையில் இளைத்திருப்பதோடு அளவிலும் மெலிந்திருக்கிறது. அகலம் 7.5 மி.மி தான். வழக்கமான அகலத்தை விட 20 சதவீதம் குறைவு . மொத்த அளவு 9.7 இன்ச் ( 24.6 செ.மி). மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பது போல அளவில் சிறிதானாலும் ஐபேட் ஏரின் செயல்திறன் கூடியிருக்கிறதாம். சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 5-ல் உள்ள ஆற்றல் மிக்க ஏ 7 சிப் இதன் இதயமாக இருக்கிறது.டெஸ்க்டாப் பக்கம் போகாமலே வழக்கமான சிபியூவை விட இரண்டு மடங்கு செய‌ல்திறன் சாத்தியம் என்கிறது ஆப்பிள். கிராபிக்ஸ் போன்ற செயல்பாடுகளுக்கு அசத்தலாக இருக்குமாம்.

அதோடு ரெடினா டிஸ்பிலே (Retina display) திரை தகவல்களைப் பார்ப்பதிலும் படிப்பதிலும் மேம்பட்ட அனுபவத்தை தரக்கூடியது. பேட்டரி ஆற்றலும் குறைவாகவே பயன்படுத்தப்படுமாம்.

மேம்பட்ட வயர்லெஸ் வசதி மற்றும் சக்தி வாய்ந்த செயலிகள் ( apps ) இதன் மற்ற சிறப்பம்சங்களாக சொல்லப்படுகிற‌து. 5 மெகாபிக்சல் ஐசைட் காமிரா இருக்கிறது.

நவம்பர் மாதம் சந்தைக்கு வரவிருக்கிறது. இப்பொதே முன் பதிவு துவங்கியிருக்கிறது.

ஆப்பிள் அறிமுகம் என்றாலே அதன் அபிமானிகள் கொண்டாடவும் செய்வார்கள். ஒரு திரைப்படத்தை விமர்சிப்பதை விட அதிக நுணுக்கத்தோடு அதன் குறை நிறைகளை அலசி ஆராயவும் செய்வார்கள். பார்ப்போம், தொழில்நுட்ப விமர்சகர்களிடம் ஐபேட் ஏர் என்ன மதிப்பெண் வாங்குகிறது என்று.

இணையதளம் : http://www.apple.com/ipad-air/

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in