

ஒரு
தீபத் திரியிலிருந்து
இன்னொரு திரியை
சுடர்விக்கும் நெருப்பென்பது
வளர்கின்றதா...
தேய்தலடைகிறதா?
தீயைப் பயிரிட்டு
வெளிச்ச அறுவடை.
முதல் சுடரின்
பிள்ளைகளெனலாமா
மற்றவற்றை
இல்லை நகல்களா...
ஒற்றைச் நெருப்பில்
ஏற்றிய ஆயிரம் சுடர்களின் தீ
ஒன்றா
பலவா
இன்னொரு விளக்கை
உயிர்வித்த
சுடரின் நெருப்பு
அடையும் மரணமென்பதும்
மரணமாயிருப்பதில்லை...
ஒதுங்க
இடமிருந்தும்
பெருமழையின்
கண்ணாடிக் கல்லெறிதலை
ரசித்து வாங்கி
நனைய நனைய பறப்பதும்
சிறகு சிலிர்த்து
மழைக்குள்
இன்னொரு மழை பெய்விப்பதுமாய்
கொண்டாடும்
ஒற்றைச் சிறுபறவைக்கானதாய் இருக்கலாம்
இன்றைய பொழிவு.
இரவின்
அழுக்கை
கழுவிக் கழுவி
விடியலில் வென்றது மழை.
உச்ச
வேகத்தில்
உறுமிப் பாய்கின்றன வாகனங்கள்
விபத்தில் இறந்தவனின்
சவ ஊர்வலத்தில் சிதறிய
மலர்களை நசுக்கியபடி..
அகால
அலைபேசி அழைப்பு
அதிர்ந்து தயங்கும் விரல்கள்
இறந்த நண்பனின் எண்.
சுடரின் நெருப்பொன்று...