Published : 20 Jul 2016 06:01 PM
Last Updated : 20 Jul 2016 06:01 PM

நாசர் தலைமையில் பிரான்ஸில் உலகத் தமிழ் நாடக விழா!

இயல், இசை, நாடகம் கொண்டு தமிழ் வளர்த்தனர் முன்னோர். அங்கே கற்றோர் புத்தகங்களைக் கொண்டு பயனுற, படிக்காதவர்கள் இசையைக் கேட்டு இன்பமுற்றனர். நாடகக்கலை இரு சாரராலும் போற்றப்பட்டது. தொலைக்காட்சிகள் வீட்டை ஆக்கிரமிக்கும் வரையிலும் மக்களின் சிறந்த பொழுதுபோக்காக நாடகங்களே திகழ்ந்தன.

தற்போது திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சியின் வருகையால் நாடகக் கலையின் வீச்சு குறைந்துகொண்டிருக்கும் நிலையில் நாடகக் கலையை மீட்டெடுக்கும் பொருட்டு உலகத் தமிழ் நாடக விழா நடைபெற உள்ளது. இவ்விழா பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் வரும் செப்டம்பர் 24, 25 மற்றும் 26-ம் தேதிகளில் மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது.

இவ்விழாவை நாடக மேடை மூலம் திரைக்கு வந்தவரும், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருமான நாசர் தொடங்கி வைக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக நாடக அரங்கியல் சார்ந்து வெளிவரும் 'உடல்' இதழின் ஆதரவில் விழா நடக்கவுள்ளது. இவ்விழாவில் உலகம் முழுவதும் உள்ள ஏராளமான நாடகக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

உலகத் தமிழ் அரங்கையும், அரங்கியலாளர்களையும் ஒருங்கிணைக்கும் விழா இது. விழாவின் முக்கிய நிகழ்வாக இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, சுவிட்ஸர்லாந்து, லண்டன், ஜெர்மனி, நார்வே, ஸ்வீடன், டென்மார்க் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நாடகக் கலைஞர்கள் தங்கள் நாடகங்களை அரங்கேற்ற உள்ளனர்.

இவ்விழாவில் இந்தியாவிலிருந்து இரண்டு குழுக்கள் பங்கேற்க உள்ளன. முதலாக தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத்துறை தலைவரான ரவீந்திரன் இந்த நாடக விழாவில் பங்கேற்கிறார். இவர் கிராமியக் கலைகளைப் பற்றிய ஆய்வினை மேற்கொண்டு, பல நாடக வரலாற்று நூல்களை வெளியிட்டவர்.

இரண்டாவதாக கூத்துப்பட்டறையில் நாடகப் பயிற்சி எடுத்த கே.எஸ்.கருணா பிரசாத். இவர் இப்போது மாணவர்களிடையே நாடகப் பயிற்சி பட்டறைகளை நடத்தி வருகிறார். இவர்கள் இருவரின் தலைமையிலும் நாடகக் கலைஞர்கள் விழாவில் பங்கேற்க உள்ளனர்.

பேராசிரியர் ஞானசம்பந்தன், நாடகவியலாளர் பிரளயன் ஆகியோர் நாடக விழா செவ்வனே நடைபெற தங்கள் வாழ்த்துகளைப் பரிமாறியுள்ளனர். ''நாடகங்கள் உலகெங்கும் உள்ள நாடகக் கலைஞர்களை ஒன்றிணைக்கின்றன. அவர்களை ஊக்குவிக்கவும் அதன்மூலம் நாடகக் கலையை வளர்க்கவும் இந்த விழா உதவும், மொத்தத்தில் இந்த நிகழ்வு தமிழ்த்தாய்க்கு அளிக்கப்படும் மற்றொரு மகுடம்'' என்று ஞானசம்பந்தன் கூறியுள்ளார்.

தொடர்புக்கு: >tamildramafestival.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x