Published : 02 Jan 2016 10:17 AM
Last Updated : 02 Jan 2016 10:17 AM

முத்துக் குளிக்க வாரீகளா 22: ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்!

பெய்யாதிருந்து கெடுப்பதும் கெட்டுப் போனவர்களைக் கைகொடுத்து எடுப்பதும் இவையிரண்டும் செய்ய வல்லது மழை என்று மழையின் ஆற்றலை விளக்குகிறார் திருவள்ளுவர்.

‘கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை’

அண்மையில் பெய்த மழை இக்குறளுக்குப் புதிய பொருளைக் கொடுத்திருக்கிறது!

அண்மையில் பெய்த மழை மனிதர்களுக்குப் பல தீமைகளைச் செய்திருந்தாலும் ஒரு பெரிய நன்மையைச் செய்திருக்கிறது.

மக்களிடையே இருந்த சாதி, மத, இன, மொழி, கட்சி பேதம் என்ற அருவருப்பான அழுக்கைக் கழுவிவிட்டது. வறண்ட பாலையாகக் கிடந்த இதயங்களில் அன்பு என்னும் தெய்வீக நீரூற்றைப் பீறிடச் செய்துவிட்டது.

எவ்வளவோ சமூகச் சீர்திருத்தவாதிகளும், மத குருமார்களும் செய்ய முடியாததை மழை செய்துவிட்டது.

இந்துக் கோயில்களில் முஸ்லிம்களுக்கு அடைக்கலம்! முஸ்லிம்களின் பள்ளிவாசல்களில் இந்துக்களுக்கு ஆதரவு!

நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இந்த அதிசயத்தை மழைதான் சாதித்தது. வெறும் வழிபாடு மட்டும்தான் மதம் என்று நினைத்திருந்த மதவாதிகளுக்கு ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்ற மாபெரும் தத்துவத்தை மழை உணர்த்திவிட்டது.

மதவாதிகள் அனைவரும் மக்கள் சேவை என்ற உயர்ந்த - உண்மையான மதத்திற்கு மத மாறிவிட்டார்கள். வாங்குவதுதான் இன்பம் என்று நினைத்தவர்கள், கொடுப்பதில்தான் இன்பம் என்பதை அனுபவபூர்வமாக அறிந்து கொண்டார்கள்.

மனித மனங்களில் புழுதி மூடிக் கிடந்த மனிதாபிமானம் என்ற மாபெரும் வைரத்தை வெளியே கொண்டுவந்துவிட்டது மழை.

பணக்காரன் பசிக்குப் பணத்தைச் சாப்பிட முடியவில்லை. அவன் உணவுக்காகக் கையேந்தி னான். பதவியில் இருந்தவர்கள் தாகத்திற்கு தங்கள் அதிகாரத்தை அருந்த முடியவில்லை. அவர்கள் தண்ணீருக்காகக் கையேந்தினார்கள்.

இந்த நேரத்தில் நினைவூட்ட வேண்டிய கதை:

பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை மரத்திலிருந்து சுமார் 100 பழங் கள் உள்ள ஒரு பெரிய தாற்றை அறுத்தார். தன் வேலைக்காரனை அழைத்து, ‘‘இந்த வாழைத் தாற்றைக் கோயிலுக்குக் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வா’’ என்றார். வேலைக்காரனும் அவ்வாறே செய்தான்.

அன்றிரவு பண்ணைக்காரன் கனவில் தோன் றிய இறைவன், ‘‘நீ அனுப்பிய ஒரு வாழைப்பழம் கிடைத்தது’’ என்றான்.

திடுக்கிட்ட பண்ணையார், ‘‘இறைவா! நான் நூறு பழங்களையல்லவா அனுப்பினேன்’’ என்றான்.

இறைவன், ‘‘இல்லை ஒரு பழம்தான் எனக்கு வந்து சேர்ந்தது’’ என்றான்.

விடிந்ததும் பண்ணையார் வேலைக்காரனை அழைத்து, ‘‘நான் கொடுத்த வாழைத் தாற்றை முழுமையாகக் கொண்டுபோய் கோயிலில் கொடுத்தாயா?’’ என்று கேட்டார்.

அவன், ‘‘ஆம்’’ என்றான்.

பண்ணையாருக்குக் கோபம் வந்துவிட்டது. அவர் வேலைக்காரனை வேகமாக அறைந்தார். ‘‘உண்மையைச் சொல். இல்லையென்றால் அடித்தே கொன்றுவிடுவேன்’’ என்றார்.

அவன் ‘‘உண்மையைச் சொல்லிவிடுகிறேன். நான் தாறு எடுத்துக் கொண்டு கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்தேன். வழியில் ஒருவன் பசியாய் இருக்கிறது என்றான். நான் பரிதாபப் பட்டு அவனுக்கு ஒரு பழத்தைக் கொடுத்தேன். மீதமுள்ள எல்லாப் பழங்களையும் கோயிலில் கொடுத்துவிட்டேன்’’ என்றான்.

பண்ணையாருக்குப் புரிந்துவிட்டது. ஏழைக் குக் கொடுத்த பழமே இறைவனுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. கோயிலுக்குக் கொடுத்த பழம் சேரவில்லை.

இதே கருத்தைச் திருமந்திரத்தில் திருமூலர் கூறுகிறார்.

‘படமாடக் கோயில்/ பகவற்கு ஒன்று ஈயில்

நடமாடும் கோயில்/ நம்பர்க்கு அங்கு ஆகா

நடமாடும் கோயில்/நம்பர்க்கு ஒன்று ஈயில்

படமாடக் கோயில்/பகவற்கு அது ஆமே’

கோயிலில் இருக்கும் இறைவனுக்கு நீ ஏதாவது கொடுத்தால் அது ஏழைகளுக்கு போய்ச் சேராது. ஏழைகளுக்கு நீ ஏதாவது கொடுத்தால் அது இறைவனிடம் போய்ச் சேர்ந்துவிடும்.

கோயிலில் போய்க் கொடுப்பதும், ஏழைக்குக் கொடுப்பதும் ஒன்றா என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்குப் பதில் சொல்வதுபோல ஏழை களை ‘நடமாடும் கோயில்’ என்கிறார் திருமூலர்.

நடமாடும் ஆலயம்! உயிராலயம்! இதை உணர்பவன் ஞானியாகிவிடுவான்.

ஏழையின் வயிறு அஞ்சல்பெட்டி இறைவனுக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தை இதில் போட்டால் அவனுக்குப் போய்ச் சேர்ந்துவிடும்.

மனித சேவையின் மகத்துவத்தைப் பைபிளும் கொண்டாடுகிறது.

திருச் சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து இயேசு பெருமானைச் சோதிக்கும் நோக்குடன், ‘‘போத கரே! நிலையான வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்’’ என்று கேட்டார். அதற்கு இயேசு “திருச் சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? நீர் என்ன வாசிக்கிறீர்? ” என்று அவரிடம் கேட்டார். அவர் மறுமொழி யாக, “உன் முழு ஆன்மாவோடும், முழு உள்ளத் தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வா யாக. உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக’’ என்று எழுதியுள்ளது என்றார்.

இயேசு, ‘‘சரியாய் சொன்னீர். அப்படியே செய்யும். அப்பொழுது வாழ்வீர்’’ என்றார்.

அவர் தம்மை நேர்மையாளராகக் காட்ட விரும்பி, ‘‘எனக்கு அடுத்திருப்பவர் யார்?’’ என்று இயேசுவிடம் கேட்டார். அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமைக் கதை:

ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர்கள் கையில் அகப்பட்டார். அவர்கள் அவரது ஆடைகளை உரிந்து, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுச் சென்றார்கள்.

குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறு லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார்.

ஆனால் அவ்வழியே பயணம் செய்து கொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரை கண்டபோது, அவர் மீது பரிவு கொண்டார். அவர், அவரை அணுகி காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சத்திரத்துக்குக் கொண்டு போய் அவரைப் பராமரித்தார்.

மறுநாள் இரண்டு பொற்காசுகளை எடுத்து சத்திரப் பொறுப்பாளரிடம் கொடுத்து இவரைக் கவனித்துக்கொள்ளும். இதற்கு மேல் செல வானால் நான் திரும்பி வரும்போது உமக்கு தருவேன் என்றார்.

‘‘கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவ ருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?’’ என்று இயேசு கேட்டார். அதற் குத் திருச்சட்ட அறிஞர், ‘‘அவருக்கு இரக்கம் காட்டியவரே’’ என்றார். இயேசு, ‘‘நீரும் போய் அப்படியே செய்யும்’’ என்று கூறினார்.

குருவும் லேவியரும் மதவாதிகள். அடிபட்ட வனுக்கு உதவி செய்தால் இரத்தம் தங்கள் மேல் பட்டுத் தீட்டாகிவிடுவோம் என்று அவர்கள் அஞ்சினார்கள்.

அவர்கள் தங்கள் மதத்தைக் காப்பாற்ற நினைத்தார்களே தவிர, காயம்பட்டுக் கிடந்த மனிதனைக் காப்பாற்ற நினைக்கவில்லை.

இஸ்லாமும் மனித சேவைக்கு முக்கியத்துவம் தருகிறது. இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர் களுடைய ஒரு வாக்கில் இவ்வாறு காணப்படு கிறது: இறைவன் மறுமையில் மனிதனை நோக்கி, ‘‘மனிதனே! நான் நோயாளியாய் இருந்தேன். நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லையே?’’ என்று கேட்பான்.

மனிதன், ‘‘இறைவா! நீயோ அகிலத்தை ஆளும் அதிபதி. உனக்கு எப்படி நோய் வரும்? உன்னை நலம் விசாரிக்க வேண்டிய அவசியம் ஏது?’’ என்று மனிதன் சொல்வான்.

இறைவன், ‘‘உனக்குத் தெரியாது. இன்ன மனிதன் நோயாளியாக இருந்தான். நீ அவனை நலம் விசாரிக்கச் சென்றிருந்தால் அங்கே என்னை தரிசித்திருப்பாய்’’ என்பான்.

இறைவன் மீண்டும், ‘‘மனிதனே! நான் உனக்கு உணவளித்தேன். நீ எனக்கு உணவளிக்க வில்லையே?’’ என்று கேட்பான்.

மனிதன், ‘‘இறைவா! நீயோ அகிலத்தின் அதிபதி உனக்கு நான் எப்படி உணவளிக்க முடியும்?’’ என்று கேட்பான்.

இறைவன், ‘‘உனக்குத் தெரியாது. என் அடி யான் ஒருவன் உன்னிடம் உணவு கேட்டு வந்தான். நீ அவனுக்கு உணவளிக்கவில்லை. நீ அவனுக்கு உணவளித்திருந்தால் அங்கே என்னை தரிசித் திருப்பாய்’’ என்பான்.

இறைவன் மீண்டும், ‘‘மனிதனே! நான் பருகத் தண்ணீர் கொடுத்தேன். நீ எனக்குப் பருகத் தண் ணீர் கொடுக்கவில்லையே?’’ என்று கேட்பான்.

மனிதன், ‘‘இறைவா! நீயோ அகிலத்தின் அதிபதி. உனக்குப் பருக தண்ணீர் நான் எப்படிக் கொடுக்க முடியும்?’’ என்று கேட்பான்.

இறைவன், ‘‘உனக்குத் தெரியாது. என் அடி யான் உன்னிடம் பருகத் தண்ணீர் கேட்டான். நீ தரவில்லை. நீ அவனுக்குத் தண்ணீர் கொடுத்திருந் தால் அங்கே என்னை தரிசித்திருப்பாய்’’ என்று கூறுவான். (முஸ்லிம், திர்மிதீ, முஸ்னது அஹமது)

இதையே, ‘‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’’ என்றார் அறிஞர் அண்ணா.

ஆயிரம் ஆண்டு வழிபாடு செய்தாலும் காண முடியாத இறைவனை, காட்டுக்குப் போய்க் கடுந் தவம் புரிந்தாலும் காண முடியாத இறைவனை, தேவையுள்ளவனுக்கு உதவுவதன் மூலம் தரிசிக்கலாம்.

ஏனென்றால் அதுதான் உயர்ந்த வழிபாடு. இறைவனே விரும்பும் வழிபாடு!

- இன்னும் முத்துக் குளிக்கலாம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: Kaviko2003@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x