Last Updated : 23 Feb, 2017 10:39 AM

 

Published : 23 Feb 2017 10:39 AM
Last Updated : 23 Feb 2017 10:39 AM

இதுதான் நான் 64: ஒரு செல்ஃபி... ஒரு கண்ணாடி!

‘செய்யும் தொழிலே தெய்வம்’னு சொல்வோம். எனக்கு ரொம்பப் பிடிச்ச வாசகம் இது. நமது வேலையை நாம் சரியா செய்தாலே போதும்; அதுதான் பயபக்தியும்கூட! இந்த மாதிரியான ‘பயபக்தி’ சினிமாவில் இருக்குறவங்களுக்கு மட்டும்தான்னு இல்லை. ஒரு இன்ஜினீயர், பத்திரிகை யாளர், வழக்கறிஞர், போலீஸ் அதிகாரி இப்படி எல்லாருமே அவங் கவங்க வேலையில் சரியா இருந் தாலே போதும். ஒரு டாக்டர் ஆபரேஷனை சரியா செய்யாமல், ஒரு உயிர் விஷயத்துல பிரச்சினையை உருவாக்கிட்டு அதில் வரும் பணத்தை வைத்து, ‘‘நான் ரெண்டு பேருக்கு ஹெல்ப் பண்றேன்’’னு சொன்னா… அது எப்படி? அதே, அந்த டாக்டர் அவரோட தொழிலை சரியா செய்தாலே 100 பேருக்கு உதவின மாதிரிதான். இந்த மாதிரி எல்லாரும் அவங்கவங்க தொழிலை சரியா செய்தாலே, அதுவே இந்த நாட்டுக்கு செய்ற நல்லதுதான்!

‘தொழில்தான் தெய்வம்!’னு சொல் றப்ப இங்கே இன்னொரு விஷயம் நினைவுக்கு வருது. ஷூட்டிங் ஸ்பாட்ல யாராவது குடி போதையில இருந்தா எனக்கு ஆகவே ஆகாது. உடனே, அவங்களை வெளியே அனுப்பிடுவேன். இவ்வளவுக்கும் அவங்க கஷ்டப்பட்டு நல்ல லெவலுக்கு வளர்ந்திருப்பாங்க. அவங்களோட அந்த ரெண்டு நிலையையுமே நான் பார்த்திருப்பேன். வளர்ந்ததுக்கு அப்புறம் இப்படி ஒரு விஷயத்தை செய்வாங்க. ஆனா, அப்படி போதையில இருக்குறவங்க என்னைவிட பெரியவங்களா இருந்தா, எப்படி அவங்கள வெளியே போகச் சொல்றதுன்னு யோசனையாவே நிற் பேன். அதுவொரு மாதிரி கஷ்டமா இருக்கும். அந்த இடத்தில் அவங்க அப்படி இருப்பதும் தப்பு. நான் அவங்களைக் கேட்காமவிடுறதும் தப்பு. அவங்களை, ‘‘வெளியில போங்க’’ன்னு இதுவரைக்கும் நான் சொல்லலை. ஆனா, இனிமேல் சொல்வேன்னு தோணுது.

ஷூட்டிங்ல இப்படி இருக்குற நான் அங்கே இருந்து வீட்டுக்கு வந்துட் டேன்னா, அதில் இருந்து வெளியே வந்துடுவேன். அதுக்கு அப்புறம் டைரக் டரா, நடிகனா, கொரியோகிராஃபரா என்னால் இருக்க முடியாது. வீட்ல ஒரு ஷாட்ஸ், டி-ஷர்ட் போட்டுட்டு சாதாரண பிரபுவாதான் என்னோட பொழுது போகும். டி.வி அதிகம் பார்ப்பேன். படம் பார்க்குறது பிடிக்கும். காலையில சாமி கும்பிட்டுட்டேத்தான் எழுந்திருப்பேன். அடுத்து முப்பத்தஞ்சி, நாப்பது நிமிஷம் உடற்பயிற்சி போகும். காலையில் அவ்வளவா சாப்பிடுறது இல்லை. சில சமயம் நல்லா சாப்பிடுவேன். அன்றைக்கு சாப்பிடுறதுக்காகவே காலையிலேயே எழுந்திருப்பேன். எனக்கு ஒரே மாதிரி சாப்பிட எல்லாம் போர் அடிக்காது. உதாரணத்துக்கு காலையில கான்ப்ஃளேக்ஸ் எடுத்துக்கு றேன்னா தொடர்ந்து ரெண்டு, மூணு வருஷத்துக்கு சாப்பிடுவேன். சாப்பிட்டுக் கிட்டிருக்கேன். மதியம் நல்ல சாப்பாடு. அதுவும் வெஜிடேரியன் மட்டும்தான். அப்பளம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இரவு ஆறுலேர்ந்து ஏழு மணிக்குள்ள இரவு சாப்பாடு ஓவர். அதுவும் சில சமயம் சாப்பிடுவேன். சமயத்தில் சாப்பிடவும் மாட்டேன். ஏன்னா, ‘நைட்ல சாப்பிட்டா உடம்பு குண்டாகிடும்’னு சொன்னாங்க. நானும் இதை ஆரம்பத்தில் ஃபாலோ பண்றப்ப ரொம்ம்ம்ம்ப கஷ்டமா இருந்துச்சு. நைட்ல ஒரு மணி, ரெண்டு மணிக்கெல்லாம் பசி பின்னியெடுக்கும். அதுக்கு அப்புறம் எழுந்துபோய் சாப்பிட்டிருக்கேன். நார்மலைவிட அந்த நேரத்தில் ரெண்டு மடங்கு அதிகமா சாப்பிடுவேன். இப்படியெல்லாம் நாம வாழணுமாடான்னு சாப்பிட்டுட்டே நினைச்சிப்பேன்.

ஆனா, அதுக்கு அப்புறம் போகப் போக பழகிடும். அது எப்படி? யாராவது நம்மை பார்த்து, ‘‘சார் இன்னும் அப்படியே ஸ்லிம்மா, ஃபிட்டா இருக் கீங்களே… சூப்பர்!’’னு சொல்றப்ப அந்த வார்த்தைகளே இந்த ‘டயட்’டை பழக்கிவிட்டுடும். அப்படித்தான் எனக்கு பழக்கமாச்சு. எங்கரேஜ்மென்ட் எவ்வளவு முக்கியம்னு பாருங்க! உங்களுக்கு பக்கத்தில் இருக்குறவங்களை நீங்க எங்கரேஜ் பண்ணினா, அது அவங் களுக்கு பூஸ்டா இருக்கும். நினைச் சதையும் அடைய முடியும்.

ஷூட்டிங்ல இருக்குறப்ப இதில் சின்னச் சின்ன மாற்றம் இருக்கும். டான்ஸ் ஆடுறேன்னா கம்மியாத்தான் சாப்பிடுவேன். டைரக்‌ஷன் பண்றப்ப கொஞ்சம் பெட்டரா சாப்பிடுவேன். நடிக்கிறப்ப கொஞ்சம் டயட் ஃபாலோ பண்ணுவேன். உடம்போட வெயிட் எப்பவுமே எழுபத்திரெண்டுல இருந்து எழுபத்தி மூணுக்குள்ளத்தான். டான்ஸ் ஆடுறப்ப எழுபத்தொண்ணு, எழுபதுக்கு அதுவாவே வந்துடும்.

இப்போ ரெண்டு நாட்களுக்கு முன்னாடியிலேர்ந்து கண்ணாடி போட ஆரம்பிச்சிருக்கேன். கண்ணாடியைப் போட்டதும் ஃபிரெண்ட்ஸோட ஞாபகம் வந்துச்சு. உடனே ஒரு செல்ஃபி எடுத்து, ‘அட் லாஸ்ட். நானும் போட்டுட்டேன்’ன்னு அவங்களுக்கு அனுப்பி வெச்சேன். கீழே இருக்குற அந்த போட்டோவை பாருங்க. அதான். தாடியில வெள்ளை வந்தப்ப கூட நான் பெருசா கண்டுக்கலை. ஆனா, கண்ணாடி போட்டதும் ரொம்ப கொஞ்சூண்டு ஒரு மாதிரியா இருந்துச்சு. இவ்ளோ நாள் என் பேச்சை உடம்பு கேட்டுச்சு. இப்போ உடம்பு பேச்சை நான் கேட்க ஆரம்பிச்சிருக்கேன். டக்குன்னு என் டான்ஸ் எனக்கு ஞாபகம் வந்துச்சு. இத்தனைக்கும் என் பையன் கண்ணாடி போட்டிருக்கான். ஆனா, அது வேற? இது வேற. நாம லைஃப்ல மீட் பண்ற ஒவ்வொரு கட்ட மும் ஒரு மாதிரி புதுமையாத்தான் இருக்கு. ஆமாம். இதுதானே லைஃப்!

கொரியோகிராஃபி பண் றப்ப ஆரம்பத்துலேர்ந்தே எனக்கு அதிகம் வேக மான பாடல்தான் அமை யும். அதுவும் ஓபனிங் பாட்டு முழுக்க டான்ஸ் பாட்டாத்தான் அமையும். ‘‘ஏம்ப்ப்பா.. ஈஸியா நடந்து போகறது? உட்கார்ந்து பேசுறது? ஐஸ் கிரீம் சாப்பிடுற மாதிரி எல்லாம் பாட்டுங்க கொடுக்க மாட்டீங்களா’’ன்னு கேட் பேன். அதுக்கு, ‘‘பிரபு தேவான்னா பாஸ்ட். பாஸ்ட்னா பிரபு தேவா!’’ன்னு சொல்லி நிறைய புகழ ஆரம்பிப் பாங்க. அதை பாதி யிலேயே நிறுத்தி, ‘புரிஞ்சிடுச்சு. போதுங்க… போதுங்க. நான் என்ன சொன் னாலும் நீங்க கேட்கப் போறதில்லை. ஓ.கே… ஓ.கே. பண்றேன்… பண் றேன்!’’ன்னு வேலையைப் பார்ப்பேன்.

இந்த மாதிரி நேரத்தில், நான் நடிக்க ஆரம்பிச்சதும் எனக்கு ஒரு ஸ்லோ பாட்டு அமைஞ்சது. எப்பவும் வேகமா ஆடிட்டிருக்குற எனக்கு, அப்போ அதை எப்படி பண்ணப் போறேன்னு தெரியலை.

அப்புறம் என்ன பண்ணேன்? அது என்ன பாட்டு? மக்களுக்கு அது பிடித்ததா?

- இன்னும் சொல்வேன்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x