

அலாஸ்கா, ஐஸ்லாந்து, நார்வே போன்ற பனி படர்ந்த வட துருவ நாடுகளில் இரவு நேர வானம் மாயாஜாலமாகத் தோன்றும்.
இரவில் வானம் வண்ணமயமாக மாறும். அதைக் குறைந்த வெளிச்சத்தில் துல்லியமாகப் பதிவுசெய்ய கேமராவின் கண்கள் தொடர்ந்து கண் சிமிட்டக் காத்திருக்க வேண்டும். இதைச் செய்ய 19-வது நூற்றாண்டின் இறுதிவரை யாரும் முயற்சிக்கவில்லை.
1892 ஜனவரி 5-ல் ஜெர்மானிய இயற்பியலாளர் மார்டின் பெரண்டல் தன் நண்பரோடு நார்வேயின் வடக்குப் பகுதிக்குச் சென்றிருந்தார்.
மேகங்களை ஒளிப்படம் எடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் கேமரா அவர்களிடம் இருந்தது. அப்போது ஆச்சரியமூட்டும் விண்ணின் வண்ணங்களைக் கருப்பு வெள்ளையில் காத்திருந்து பொறுமையாகப் படம் எடுத்தார் பெரண்டல்.
ஆனால், அந்த ஒளிப்படம் எதிலும் பிரசுரமாகவில்லை. பிறகு, 1897-ல்தான் முதல் அரோரா படம் ‘செஞ்சுரி’பத்திரிகையில் வெளியானது. பெரண்டலின் இந்த அரிய முயற்சி ‘ஆல் ஸ்கை கேமரா’கண்டுபிடிப்புக்கு வித்திட்டது.