ஜி.என்.பாலசுப்பிரமணியம் 10

ஜி.என்.பாலசுப்பிரமணியம் 10
Updated on
2 min read

கர்னாடக இசைக் கலைஞர்

கர்னாடக இசைக் கலைஞர், பல கீர்த்தனைகளை எழுதியவர், நடிகர் என பன்முகத் திறன் கொண்ட ஜி.என்.பாலசுப்பிரமணியம்(G.N.Balasubramaniam) பிறந்த தினம் இன்று (ஜனவரி 6). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* கும்பகோணம் அடுத்த ஆடுதுறை அருகே உள்ள கூடலூரில் (1910) பிறந்தவர். குடும்பம் பின்னர் சென்னையில் குடியேறியது. தந்தை, திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தார். அவர் ஒரு சபா நடத்திவந்தார். இதனால், முன்னணி இசைக் கலைஞர்களுடன் சிறுவனுக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டது.

* சிறுவயதில் கேள்வி ஞானத் திலேயே பல கீர்த்தனைகளைச் சிறப்பாகப் பாடுவாராம். மகன் வழக்கறிஞராக வேண்டும் என்ற ஆசை ஒருபக்கம் இருந்தாலும், நண்பர்களது ஆலோசனையின்பேரில், மதுரை சுப்பிரமணிய ஐயரிடம் மகன் இசை கற்க ஏற்பாடு செய்தார் தந்தை.

* சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் ஆங்கிலத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் இசையில் டிப்ளமோ பட்டம் பெற்றார். சங்கீத ஞானம் பெற்றவராக இருந்தாலும், தொழில்முறை இசைக் கலைஞராக அவர் மாறியது தற்செயலான நிகழ்வு.

* மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் 1928-ல் ஒருமுறை முசிறி சுப்பிரமணிய ஐயர் பாடுவதாக இருந்தது. எதிர்பாராதவிதமாக அவரால் வர முடியவில்லை. அவருக்குப் பதிலாக இவரைப் பாட அழைத்தார்கள். இவரது அசாதாரண குரல் வளம், அதிரடி ஸ்வரக் கோர்வை, ஆழ்ந்த இசை ஞானம் ரசிகர்களைப் பிரமிக்கவைத்தது.

* சென்னை மியூசிக் அகாடமியில் இவரது முதல் கச்சேரி நடந்தது. தொடர்ந்து ஏராளமான நிகழ்ச்சிகள், கச்சேரிகள், திரைப்படங்கள், கேசட்கள் என மாபெரும் வளர்ச்சி பெற்றார். கிருதிகள், ராகம், பல்லவி ஆகியவற்றை அலசி ஆராய்ந்து, மேடையில் பாடும்போது அவற்றில் புதுமைகளைப் புகுத்துவது இவரது வழக்கம். ராக ஆலாபனைகளில் கிரகபேதத்தை அறிமுகம் செய்தார்.

* எம்.எல்.வசந்தகுமாரி, ராதா ஜெயலட்சுமி, எஸ்.கல்யாணராமன், திருச்சூர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பிரபல பாடகர்கள் இவரது மாணவர்கள். அவர்களை நண்பர்கள்போல நடத்தினார். அவர்களது முன்னேற்றத்துக்கு மிகவும் உதவியாக இருந்தவர். சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் கர்னாடக இசைப் பிரிவின் இணை இயக்குநராக நீண்டகாலம் பணியாற்றினார்.

* அந்த காலகட்டத்தில் இசைத் தட்டுகளுக்குப் பாட சில கலைஞர்கள் தயங்கினர். இவரோ ஹட்சின்ஸ் கிராமபோன் பிளேட் புகழ் வித்வான் ஆனார். இவர் பாடிய ‘வாசுதேவயனி’ என்ற பாடல் இசைத்தட்டாக வெளிவந்து, விற்பனையில் சாதனை படைத்தது.

* ராக ஆலாபனையில் புதிய முறைகளைக் கையாண்டார். பல கீர்த்தனை கள் இயற்றியுள்ளார். பல புதிய ராகங்களைக் கண்டுபிடித்தார். தமிழ், தெலுங்கு, சமஸ்கிருத மொழிகளில் 250 பாடல்களை இயற்றியுள் ளார். அவை தொகுக்கப்பட்டு 2 நூல்களாக வெளிவந்தன.

* இசைக் கச்சேரிகளில் தற்போது பின்பற்றப்படும் பாணியை வகுத்துக்கொடுத்து, செம்மைப்படுத்தியது இவர்தான். இது ‘ஜிஎன்பி’ பாணி எனப்படுகிறது. திரையுலகிலும் பாடகராகப் புகழ்பெற்றார். ‘சகுந்தலை’, ‘சதி அனுசுயா’, ‘உதயணன் வாசவதத்தா’, ‘ருக்மாங்கதன்’, ‘பாமா விஜயம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

* பரந்த மனப்பான்மை கொண்டவர். அனைவருக்கும் வாரி வழங்கியவர். தனித்தன்மை வாய்ந்த இசையாலும் இயல்பான குரல் வளத்தாலும் ஏராளமான ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளைகொண்ட ஜி.என்.பாலசுப்பிரமணியம் 55-வது வயதில் (1965) மறைந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in