

பல தலைமுறைகள் தாண்டி ஏரிக்கரைகளிலும், ஆற்றங்கரைகளிலும் நிமிர்ந்து நிற்கும் மரங்களின் பின்னே நமது முன்னோர்களும், மூத்த குடிகளும் வேர்களாக வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஒவ்வொரு மரத்தின் வேர்கள், கிளைகள், இலைகளில் எல்லாம் இயற்கையின் ஆயுள்ரேகை படிந்து இருக்கின்றது. காற்றின் மூலக்கூறுகளும், கதிரின் ஒளிக்கூறுகளும், மரங்களின் அணுக்களாகின்றன. மண் படலம் உடலாகின்றது. நீரின்றி அமையும் உயிரேது உலகில்? மரமும் அத்தகையதே.
வாழ்ந்து மடிந்து போன நம் மூத்த குடிகளின் முகச் சுருக்கங்களை, இன்று உயிரோடு இருக்கும் ஒவ்வொரு மரத்திலும், அதன் தடித்த மரப்பட்டைகளின் மடிப்புகளில் நாம் பார்க்கிறோம். காலங்காலமாய் கடந்து போன மழைக்காலமும், மழை பொய்த்த பருவகாலங்களும் வட்டவட்டமாய் தன் வடுக்களை தண்டின் நடுப்பகுதியில் விட்டு சென்றிருக்கின்றன.
காடுகளில் சுள்ளி பொறுக்க போனோம். தேன் கூடு தேடி அலைந்து பிள்ளைகளுக்கு கொண்டுவந்து கொடுத்தோம். இலந்தை பழம் பொறுக்கி, நாவல் மரம் உலுக்கி ஊதி ஊதித் தின்றோம். ஈச்சம் பழ குலை பறித்து முள் குத்த கைகள் சிவந்தோம். இலுப்பை பழம் உறித்து தின்று, பனம்பழ கொட்டை சப்பி பல்லெல்லாம் கூசிட, பல்லிடுக்கில் நார் சிக்கி கொண்டிருக்கிறதே.
மரங்களே, காடுகளே, நாங்கள் உங்களை உணவாக உண்டோம், பழமாக ருசித்தோம், குடித்தோம். உங்களைத் தழுவித்தழுவி ஏறி மகிழ்ந்தோம். கிளைகள் தாவினோம். இலைகள் பறித்து மருந்து கண்டோம். நோய் தீர்த்து ஆயுள் கூட்டினோம். பூக்கள் பறித்து மாலை சூடி, மணம் நுகர்ந்து, மகிழ்ந்து கிடந்தோம்.
ஓ... எம் மரங்களே... நீங்கள் மரங்களாக இருந்தபோது எம் புவிக்கு நிழல் தந்தாய்… எம் மூத்த குடிகள் விட்டுச்சென்ற நிழலில், நாங்கள் இளைப்பாறி வருகின்றோம்.
நாளை எம் பிள்ளைகள் உன் மடியில் விளையாடி கிடப்பார்கள். புவியெல்லாம் மரங்கள் நடுவோம். மரங்கள் காடுகளாகும்.
மரத்தின் வேர்கள் மண்ணை இறுக அணைத்தப்படி தழுவிக் கிடக்கும். மரத்தின் தடித்த, பழுப்பு நிற மரப்பட்டைகளில் எங்கள் முகத்தினை எம் பிள்ளைகள் பார்ப்பார்கள். அவர்கள் கைகளில் ஒரு மரக்கன்று இருக்கும்…