

ரஷ்யாவைச் சேர்ந்த புவி உயிர் வேதியியல் அறிஞரான விளாடிமிர் இவனோவிச் வெர்னட்ஸ்கி (Vladimir Ivanovich Vernadsky) பிறந்த தினம் இன்று (மார்ச் 12). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் (1863) பிறந்தார். தந்தை பொருளியலாளர். சிறு வயது முதலே ஏராளமான நூல்களைப் படித்தார். வீட்டில் நூலகம் வைக்கும் அளவுக்கு நிறைய நூல்களை சேகரித்தார். பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
* மாணவர் அமைப்பில் ஒரு அறிவியல் கட்டுரையை சமர்ப்பித்தார். அதில், ‘உயிர் என்றால் என்ன? முடிவற்று இயங்கும் ஆக்கமும் அழிவும் எவ்வாறு நடக்கின்றன?’ என்பது குறித்த தனது சிந்தனைகளை எழுதியிருந்ததோடு பல கேள்விகளையும் எழுப்பினார். இக்கட்டுரை மிகவும் பிரபலமடைந்தது.
* இக்கேள்விகளுக்கு அறிவியலில்தான் விடை கிடைக்கும் என்பதை உணர்ந்தார். மானுட வரலாறு, கணிதவியல், புவி வேதியியலில் நாட்டம் பிறந்தது. புவி வேதியியலில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். பல நாடுகளைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்களோடு தொடர்பு கொண்டிருந்தார்.
* புவி வேதியியல், புவி உயிர்வேதியியல், அணுக்கருப் புவியியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார். உக்ரேன் அறிவியல் கல்விக்கழகம் (தற்போதைய உக்ரேன் தேசிய அறிவியல் கல்விக்கழகம்) என்ற அமைப்பை உருவாக்கினார்.
* உயிர்க்கோளம் (The Biosphere) என்ற நூலை 1926-ல் வெளியிட்டதன் மூலம் உலகப்புகழ் பெற்றார். பல மொழிகளில் இந்நூல் வெளியிடப்பட்டது. பல்வேறு துறையினருக்கும் தேவையான அடிப்படை விஷயங்களை உள்ளடக்கிய படைப்பாக இது போற்றப்படுகிறது.
* புவியின் மேற்பரப்பு குறித்து ஆராய்ந்து, இது கடந்தகால உயிரிக்கோளம் (Bygone Biosphere) என வரையறுத்தார். ‘உணர்திறக்கோளம் (Noosphere) குறித்த சில வார்த்தைகள்’ என்ற இவரது கட்டுரை பல மொழிகளில் வெளிவந்தது. முதன்முதலாக, உயிரினங்களுக்கும் புவியின் வேதி அமைப்புக்குமான தொடர்பு குறித்து ஆராய்ந்த ஒருசிலரில் இவரும் ஒருவர்.
* புவி - வேதி தாக்கம் குறித்தும் ஆராய்ந்தார். இதன் விளைவாக உயிர் புவி - வேதியியல் (Biogeochemistry) என்ற புதிய களமே உருவானது. உயிரியலில் முன்னணி கருதுகோளாகக் கருதப்படும் ‘கயா’ (Gaia) குறித்தும் ஆராய்ந்தார். யுரேனியக் கனிமத் தாதுவை 1916-ல் முதன்முதலாக கண்டறிந்தார். 1918-ல் ரஷ்யாவில் ரேடியம் தயாரிக்கப்பட்டது.
* பீட்டர்ஸ்பர்கில் 1922-ல் ரேடியம் மையத்தை உருவாக்கினார். 1938 வரை இந்த மையத்தின் இயக்குநராக செயல்பட்டார். இங்கு அணுப்பிளவு ஆய்வு மேற்கொண்டார். விண்கற்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். விண்கல் ஆய்வுக் கழகத்தை உருவாக்கி, வாழ்நாள் முழுவதும் அதன் வழிகாட்டியாக செயல்பட்டார்.
* பல்வேறு மதங்கள் குறித்து ஆராய்ந்தார். இந்திய ஆன்மிகம், தத்துவங்களால் ஈர்க்கப்பட்டார். ரிக் வேதத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இந்து மதத்தின் மகத்துவத்தை உலகம் உணரவேண்டும் என்பதை வலியுறுத்தினார். இந்துக்களின் சமய, தத்துவ சிந்தனைகள் மூலம் நிறைய அறியமுடியும் எனக் கூறினார்.
* இந்தியாவின் மதம், சிந்தனை, தத்துவங்கள், ரிக்வேதம் குறித்து தன் நண்பர்களுக்கு விரிவான கடிதங்கள் எழுதினார். தன் இறுதிக்காலத்தில் சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளால் மிகவும் கவரப்பட்டார். அறிவியல் மேம்பாட்டுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்ட விளாடிமிர் வெர்னட்ஸ்கி 82-வது வயதில் (1945) மறைந்தார்.