

முக்கோண முகத்தோடு
ஒருவனைக் கண்டேன்...
இன்று காலை
கடற்கரைச் சாலையில்.
உருளை வடிவத்தில்
உலோகத் தகடுகளால் ஆகியிருந்தது
அவன் உடல்.
நட்டு போல்ட்டுகளும்
ஸ்குரூ போன்ற
உபரி பாகங்களாலும்
இணைக்கப்பட்டிருந்தன
அவனது உடல் உறுப்புகள்.
இணைப்புகள் அசைந்து
நகரும்போது
கீச்...கர்... போன்ற சத்தங்கள்
எழுந்து அடங்கின.
விநோத அயலுலகவாசி அல்லது
நவீன இயந்திரன் என
நினைத்துக்கொண்டேன்.
சாலையின் ஒரு சந்திப்பில்
காதலர் இருவர் தம்மை மறந்து
முத்தமிட்டுக்கொண்டிருந்ததைக்
கடந்தபோது
அந்த விபரீதம் நிகழ்ந்தது.
ஒரு கும்பல் அவர்களை
ஆயுதங்களால் தாக்கத் தொடங்க
அனைவரும் பதறி ஓடத் தொடங்கினோம்.
முக்கோண முக மனிதன் மட்டும்
வேகமாக அவர்களை நெருங்கிப்
போராடத் தொடங்கினான்.
அவன் ஒரு அயலுலகவாசி என
நான் நினைத்தது சரிதான் என
நினைத்துக்கொண்டேன்!