Last Updated : 22 Jun, 2017 10:11 AM

 

Published : 22 Jun 2017 10:11 AM
Last Updated : 22 Jun 2017 10:11 AM

கல கல நாடக உலா!

நாரத கான சபா அரங்கில், பார்த்தசாரதி சுவாமி சபா நடத்திய 4 நாள் நாடக விழாவில் 5 புதிய நாடகங்களைக் கண்டு களிக்க முடிந்தது. 5-வது நாள் குடந்தை மாலி உள்ளிட்ட நால்வருக்கு விருதுகள். இதோ, ஒரு ரவுண்ட் அப்:

இறைவன் கொடுத்த வரம்

நாடகாசிரியர் டி.வி.ராதாகிருஷ்ணன், இறைவன் கொடுத்த வரத்தில் வலியுறுத்துவது கூட்டுக் குடும்ப மகிமை!

ராமநாதன் (பி.டி.ரமேஷ்), மீனாட்சி (ஃபாத்திமா பாபு) சொந்த வீட்டில் வாழும் அந்நியோன்ய தம்பதி. இவர்களுடைய நான்கு வாரிசுகளில் இருவர் இதே ஊரில். மற்ற இருவர் வேறு ஊரில்.

தன் வீட்டுக்கு வந்து தங்கியிருந்து குடும்பத்துக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று அம்மாவை மூத்த மகனும், அதே காரணத்துக்காக இளைய மகனும் தன் வீட்டுக்கு அப்பாவை அழைத்து, பெற்றோரைப் பிரித்துவிடுகிறார்கள்.

மாமியாரை அடிமை வேலைக்காரியாக கேவலப்படுத்துகிறாள் மூத்த மருமகள். இரண்டுக்கு மேல் லேடி ஆர்ட்டிஸ்ட் கட்டுபடியாகாது என்பதால், இளைய மருமகள் வசனங்களில் மட்டுமே வந்து, மாமனாரை வார்த்தைகளால் வறுக்கிறாள். இந்த பாத்திரம் பேசும் எகத்தாள வசனங்கள் அரை நூற்றாண்டு பழசு!

அம்மாவும், அப்பாவும் தனித்தனியே மகன்கள் வீட்டில் கஷ்டப்படுவதை காட்சிப்படுத்தியிருப்பதில் டைரக்டருக்கு பாஸ் மார்க்! ஒரு மாதப் பிரிவுக்குப் பின் அப்பாவும் அம்மாவும் சந்திக்கும் காட்சியில் எகிறிக் குதித்திருக்க வேண்டிய எமோஷன் அதள பாதாளத்தில்!

பேயிங் கெஸ்ட்டாக அப்பா, அம்மா வீட்டில் ஓர் இளைஞன் வந்து தங்கி பரஸ்பரம் பாசம் பொங்க பழகுவதும்கூட ஓ.கே. ஆனால், ஏர்ஃபோர்ஸில் பணிபுரியும் மூன்றாவது மகன் விமான விபத்தில் இறந்துவிட்டதை மனைவியிடம் இருந்து கணவர் மறைத்து வைத்திருந்ததாக இறுதியில் சொல்வது, எதற்கு?

ரமேஷ், ஃபாத்திமா பாபுவுக்கு நடிப்பாற்றலை வெளிப்படுத்த கொஞ்சமாக வாய்ப்பு. மற்றவர் கள், எழுதிக் கொடுத்த வசனங்களைப் பேசும் ரோபோக்கள். முடிவில் தனித்தனியாக ஒவ்வொரு வரும் அல்லல்படுவதைவிட, கூட்டாக ஒரே குடும்பமாக வாழ்வது சாலச் சிறந்தது என்று நாடகம் முடியும்போது அரங்கில் கைத் தட்டல்களையே காணோம்.

கதையோடு ஒன்றிவிட்டார்களோ!

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...

அகவை 80-ஐ நெருங்கும் காத்தாடி ராமமூர்த்திக்கு, 60 வருட மேடை அனுபவம். இன்னமும் அவருக்கு நாடகம் அலுக்கவில்லை. இன்று வரை சாம்பியன் டிராஃபியை தன்வசம் தக்கவைத்துக் கொண்டிருப்பவர். எஸ்.எல்.நாணு கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இந்நாடகத்தில் வழக்கம்போல் அப்பா - கம் - தாத்தா ரோல் காத்தாடிக்கு. எந்நேரமும் தன் உடம்புப் பற்றியே கவலை இவருக்கு. ‘ஐயோ’ என்று அடிவயிற்றில் இருந்து குரல் எழுப்பி, இல்லாத உபாதையை வெளிப்படுத்தி ஊரைக் கூட்டுவது கலக்கல்ஸ்!

மிடில் கிளாஸ் மாதவனாக, எப்போதும் பணக் கவலையில் இருக்கும் அப்பா எஸ்.எல்.நாணு. இளைய தலைமுறையின் மாறுபட்ட அணுகுமுறையைப் புரிந்து கொள்ள மறுக்கும் பிடிவாதம். கூடவே நெகட்டிவ் மனோபாவம். நாணுவின் நடிப் பில் நாடகத்துக்கு நாடகம் முன்னேற்றம்!

மாடர்ன் யுவதியாக மகள் லாவண்யா வேணுகோபால். புது கார், போன் என்று வாங்கும்போதும், அலுவலகத்தில் வேலை போய்விடும்போதும் இவர் வெளிப்படுத்தும் தன்னம்பிக்கையில் 100% யதார்த்தம். அலுவலக வேலை என்று சொல்லி திருச்சியில் இருந்து சென்னை வந்து டேரா போடும் சித்தப்பா (எஸ்.பி.ஐ.முரளி), உருப்படியாக செய் யும் ஒரே வேலை, லாவண்யாவுக்கு மாப்பிள்ளை பார்த்து வருவது மட்டுமே.

கதைக்குத் தேவையே இல்லாத நளபாகம் நாராயணன் பாத்திரத்தில் வரும் தரின் குரலில் ஒரு டஜன் அண்டாக்கள் ஒரே சமயத்தில் உருளும் சத்தம். அம்மாவாக கீதா நாராயணன், அலுவலக நண்பனாக மகேஷ்வர் போன்ற சிலர் இக்குழுவுக்கு ஆஸ்தான வித்வான்கள்.

தலைமுறை இடைவெளி புது சப்ஜெக்ட் இல்லை எனினும், புதுசு மாதிரி ஒரு தோற்றம் ஏற்படுத்திவிடுகிறார்கள்!

சதுரங்க பார்வை

இந்நாடகத்தை இயக்கியவர் என்.ரத்தினம். புகழின் உச்சியில் கிராண்ட் மாஸ்டர் ரமேஷ் வைத்தியநாதன். யாராலும் தன்னை வீழ்த்த முடியாது என்கிற இறுமாப்பு கொண் டவர். சொந்த கிராமமான நீடாமங்கலத் துக்கு வரும் ரமேஷை, அவரது அண்ண னின் 7 வயது மகன் கார்த்திக், தனக்கும் செஸ் விளையாடத் தெரியும் என்று சொல்லி, ஒரு கேம் விளையாட அழைக்கிறான். விருப்பமில்லாமல் விளையாடும் ரமேஷை கார்த்திக் ஜெயித்துவிட, ரமேஷின் ஈகோ விஸ்வரூபமெடுக்கிறது. ‘நான் என்னிக்கு இவனை ஜெயிக்கிறேனோ, அன்னிக்குத்தான் மனதளவில் நான் சாம்பியன்’ என உருமுகிறார்.

கதை 15 வருடங்கள் கடந்து வந்த பிறகு, 22 வயது கார்த்திக் (விக்னேஷ் ரத்னம்) செஸ் விளையாட்டில் மேலும் முன்னேறி யிருக்கிறார். இருப்பினும் சித்தப்பாவுடனான குடும்பப் பகையை வளர்க்க வேண்டாம் என்பதால், விளையாடுவதைத் தவிர்க்கிறார். இருப்பினும் இவர் படிக்கும் கல்லூரியில் பேராசிரியையின் விருப்பம் எதிர்மாறாக!

சர்க்கரை பாதிப்பால் திடீரென்று மயங்கி விழுந்த கார்த்திக் பார்வை இழக்கிறார். சிறுவயதில் கண்ணைக் கட்டிக்கொண்டு சித்தப்பாவை வீழ்த்திய கார்த்திக், இப் போது மாற்றுத்திறனாளியாக அவரை ஜெயித்துவிடுகிறார். அதுவும் விட்டுக் கொடுத்து. சித்தப்பா மனம் மாறுகிறார். கர்வி யாக இல்லாமல் ஒரு கருவியாக இருந்து கார்த்திக் போன்றவர்களை ஊக்குவிப்பது தான் நிஜமான ஸ்போர்ட்ஸ்மென்ஷிப் என்று லெக்சர் கொடுக்கிறார். தன் கண்களை அவனுக்கு தானமாகக் கொடுப்பதாக வீடியோ பதிவு செய்துவிட்டு அடுத்த விநாடி உயிர்விடுகிறார்.

செஸ் சாம்பியனை மையப்படுத்தி நாடகம் எழுதிய என்.ரத்தினம், கிராண்ட் மாஸ்டர்! ஆனால், எடுத்துக்கொண்ட சப்ஜெக்ட்டில் மெனக்கெடல் கம்மி. ஒவ்வொரு ‘மூவ்’களிலும் சினிமாத்தனம் அதிகம்!

விவாஹமாலை.காம்

இந்த டாட்காமில் பதிவு செய்தால் போதும். மணப்பெண், மணமகன் பற்றிய விவரங்களை ஆராய்ந்து, சிக்கலான பிரச்சினைகளுக்கு புல னாய்வு மூலம் தீர்வுகண்டு, பெற்றோரின் கவலை ரேகைகளை நீக்கிவிடுவார்கள். இதற்காக நிறுவனர் கல்யாணராமனின் தலைமையில் ஒரு அலுவலகமே இயங்குகிறது ஒரு ஜோசியர் உட்பட!

‘எப்படி ஒரு புது ஐடியாவை மேடைக்குக் கொண்டு வந்துட்டோம் பார்த்தீங்களா’ என்பதை புரிய வைக்க, டி.வி நிருபர் பேட்டி எடுக்க வருவதான ஆரம்பக் காட்சியை ரொம்ப நேரத்துக்கு வளர்த்திவிட்டார், முத்துக்குமார். கதை வசன டைரக்டர்கர்த்தா!

பெரியவர் சீனிவாசனின் மகன் கனகரத்தினம் கல்யாணத்துக்கு அலையும் பிரம்மசாரி. அதாவது, ‘இன்றைய சூழலில் திருமணத்துக்குப் பெண்கள் கிடைப்பது எளிதல்ல’ என்பதை சுருக்கமாக சொல்லாமல் இழுத்திருக்கிறார் நாடகாசிரியர்.

இன்னொரு பக்கம், ரவிக்குமார் உமா தம்பதி யின் மகள் அனிதா, ஆணாதிக்கத்தை வெறுக்கும் பெண்ணியவாதி. புரிந்துவிடுகிறது விவாஹ மாலை டாட்காம் இவர்களது பிரச்சினையைத் தீர்த்து வைக்கப்போகிறது என்பது. கிளைக் கதையாக ஜில்லு - கிருஷ் லவ் ஸ்டோரி.

நகைச்சுவை கலந்து பயணிக்கும் கதையில் கனகரத்தினம்-அனிதா புரிந்துணர்வு முடிந்து கல்யாணத்தை நெருங்கும் சமயம், வேறு ஏதோ காரணத்துக்காக கனகரத்தினத்தின் பாத்திரத்தை கிருஷ் களங்கப்படுத்திவிட, நிஜமென்று நம்பிவிடும் அனிதா, ஆகாயத்துக்கும் பூமிக்குமாக குதிக்க… இங்கே சீனிவாசன் -அனிதாவின் மோதல் நாடகத்தின் ஹைலைட். டாட்காமின் புலனாய்வு, பிரச்சினையை சமூகமாகத் தீர்த்து வைக்கிறது.

சீனிவாசனாக அனுபவமிக்க ‘கலா நிலையம்’ சந்துரு. இவரது நடிப்பில் ஒருவகை பூரணம் இருக்கவே செய்கிறது. ரவிக்குமாராக நடிப்பவரும் தனது கேரக்டரை சிறப்பாக வெளிப்படுத்துகிறார். உமாவும் அனிதாவும் வெகு யதார்த்தம்.

ஜெட் வேகத்தில் காட்சிகளை நகர்த்தியிருந்தால் விவாஹமாலை அன்றலர்ந்த மல்லிகையாக மணம் வீசியிருக்கும்.



உறவோடு விளையாடு

‘இந்த ஜென்மத்தில் நாம் செய்யும் புண்ணியங்கள் நம் சந்ததியினரை வந்து சேரும். ஆனால், செய்யும் பாவங்களை நாம்தான் அனுபவிக்க வேண்டும். அதுதான் கர்மா..’ என்று அரிய(!) தத்துவத்தை அறைகூவிவிட்டு முடிகிறது, பூவை மணி எழுதி, ராஜாராம் இயக்கியிருக்கும் இந்த நாடகம்!

நடிப்பாற்றலை மிகுதியாக வெளிப்படுத்தக் கூடிய திறமைமிகு நடிக, நடிகைகள் இருந்துவிட்டால் நாடகம் முக்கால்வாசி சக்சஸ். இந்நாடகத்தில் கண்ணன் (கிரீஷ்), துளசி/ஆண்டாள் (கவுதமி), காயத்ரி (உஷா நந்தினி) ஆகியோர் மூன்று தூண்கள் என்றால், பூவை மணியின் வசனம் நான்காவது பில்லர். ‘கறந்த பாலையும், பொறந்த குழந்தையையும் தவிர, எல்லாத்துலேயும் குறை உண்டு’ மாதிரிக்கு ஒரு சொட்டு. இவரிடம் அங்கங்கே தலைகாட்டும் அடுக்குமொழியில் தடுக்கிவிழ வேண்டியிருக்கிறது.

விளம்பர கம்பெனியின் நிர்வாக இயக்குநர் கண்ணன், பெண்களுக்கு புது செல்போன் கொடுத்து அவர்களை யூஸ் அண் த்ரோவாக பயன்படுத்தும் கெட்டவன். இன்னொரு நிறுவனத்தின் உயர் பதவியில் இருக்கும் காயத்ரி, கண்ணனைக் காதலித்து அவனை நல்லவனாக்குகிறாள்.

வில்லங்கம் ஆரம்பம். தான் அநாதை என்று சொல்லிக்கொள்ளும் கண்ணனுக்கு அம்மாவாக தேடி வரும் துளசி, உண்மையில் கண்ணனின் லீலையில் சிக்கி சின்னாபின்னமான பெண் ஒருத்தியின் அம்மா ஆண்டாள். தொடரும் பழி வாங்கல்கள். காயத்ரி எடுக்கும் ஷாக்கிங் முடிவு... குகபிரசாத்தின் அதிரடி பின்னணி இசை… சுபம்!

கெட்ட ஆட்டம் போடும்போது குரலிலும் உடல்மொழியிலும் அலட்சியத்தையும், நல்லவனாக மாற நினைக்கும் சமயம் இல்லாமையையும் வெளிப்படுத்தி, சிறந்த நடிகராக மேடையை ஆக்கிரமிக்கிறார் கிரீஷ். கவுதமியும், உஷா நந்தினியும் இவருக்கு செம நடிப்பு பக்கவாத்தியங்கள்.



படங்கள்: எல்.சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x