Last Updated : 20 Jan, 2017 10:36 AM

 

Published : 20 Jan 2017 10:36 AM
Last Updated : 20 Jan 2017 10:36 AM

மெட்றாஸ் அந்த மெட்ராஸ் 24: சுத்தத் தங்கம், அந்த மறுபதிப்புகள்!

கடந்த சில மாதங்களில் அதிருஷ்டவசமாகச் சில பரிசுகள் கிடைத்தது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், என் மனைவிக்கோ அதில் சற்றும் ஆர்வம் ஏற்படவில்லை. “என்ன வெறும் புத்தகங்கள்தானே?” என்று அலட்சியமாகச் சொன்னார். “இவற்றால் ஒன்றும் நீங்கள் பணக்காரராகிவிடப் போவதில்லை, அதல்லாமல் இவற்றை வீட்டில் வைக்க எங்கே இடம்?” என்று அடுத்து கேட்டார். கணக்கியல் நிபுணரான அவருக்கு அந்தப் புத்தகங்களின் விலையே சில ஆயிரம் என்றாலும் பெரிய விஷயமில்லைதான். அப்படியே அவ்விரண்டின் விலையும் இத்தனை ஆயிரம் ரூபாய் என்று கூறினால்,

“எந்தப் பதிப்பகத்தார் இப்படி அதிக விலை வைத்து விற்கிறார்கள்?” என்று கேட்பார்.

டெல்லியிலும் மெட்றாஸிலும் உள்ள ஆசிய கல்விச் சேவை (ஏ.இ.எஸ்.) நிறுவனம்தான் இப்படி தெற்காசிய நாடுகளுக்காக நல்ல தரமான புத்தகங்களை சில ஆயிரம் ரூபாய் விலையில் அச்சிட்டு வெளியிடுகிறது. இந்தப் புத்தகத்தின் அருமை தெரிந்து அதை பொக்கிஷமாகக் கருதக்கூடிய பெரும்பாலானவர்களால் அவற்றைத் தங்களுடைய சம்பளப் பணத்தில் வாங்க முடியாது! தரமான தாள், அழகான அச்சு, அற்புதமான பைண்டிங் வேலை, சிவப்பு ரெக்சின் அட்டை மேல் தங்கத்தூள் கலந்த எழுத்துகள் என்று தயாரிக்கப்பட்டுள்ள அந்தப் புத்தகங்களுக்கு அவற்றின் தயாரிப்புக்கும் தரத்துக்கும் ஏற்றவகையில்தான் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதே உண்மை. என்னைப் போன்ற எழுத்தாளர்கள் இதை யாராவது இலவசமாகக் கொடுத்தால்தான் வாங்கி வீட்டு நூலகத்தில் வைத்துப் படிக்க முடியும். கடல் பயணம், உள்நாட்டுப் பயணம், வரலாறு, தொல்லியல், மதம், கலாச்சாரம், சடங்குகள், சமூகங்கள் என்று பலதரப்பட்ட தலைப்புகளை உள்ளடக்கிய கலை – அறிவியல் துறை சார் தகவல்கள் அழகுற தொகுக்கப்பட்டுள்ளன அந்தப் புத்தகங்களில். எப்போதுமே பரிசாகத் தரப்படும் புத்தகங்கள் இரண்டைத் தாண்டாது!

அதிருஷ்டவசமாகக் கிடைத்த அவ்விரு புத்தகங்களும் என் தனிப்பட்ட நூலகத்தின் மதிப்பையே கூட்டிவிட்டன. ‘இலங்கை பற்றிய இருபதாவது நூற்றாண்டு கண்ணோட்டம் – வரலாறு, மக்கள், வணிகம், தொழில்கள், வளங்கள் பற்றி’ என்பது முதல் புத்தகம். ‘உதகமண்டலத்தின் வரலாறு’ என்பது இரண்டாவது புத்தகம்.

சிலோன் பற்றிய புத்தகம் 1907-ல் பிரசுரமானது. ஆர்னால்ட் ரைட் அதன் ஆசிரியர். அப்போதிருந்த சிலோன் (இலங்கை) நாட்டில் வாழ்ந்த பெரிய குடும்பத்தவர்களின் புகைப்படங்கள், தேயிலைத் தோட்டங்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றின் அரிய புகைப்படங்ளும், தகவல்களும் 920 பக்கங்களைக் கொண்ட அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. சுமார் 2,000 புகைப்படங்கள் அதில் அச்சாகியுள்ளன. இந்தப் புத்தகத்தைப் போலவே ‘சதர்ன் இந்தியா’ என்ற பெயரில் இன்னொரு புத்தகமும் பிரசுரிக்கப்பட்டது. சோமர் செட் பிளெய்ன் தயாரித்த அந்தப் புத்தகம் லண்டனில் 1915-ல் பிரசுரிக்கப்பட்டது. ஆசிய கல்விச் சேவை நிறுவனம் இப்புத்தகத்தையும் மறு பிரசுரம் செய்தது.

உதகமண்டலத்தைப் பற்றிய இந்தப் புத்தகம் அளவில் பெரியது. 15 அங்குல நீளம் 11 அங்குல அகலம் உள்ளது. 1908-ல் மெட்றாஸ் அரசு அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இதன் மறுபதிப்பின் தரத்தைப் பார்க்கும்போது, முதல் பதிப்பு எந்தத் தரத்தில் அச்சிடப் பட்டிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்தத் தரத்தில் இப்போது புத்தகம் அச்சிடும் நிறுவனம் எதுவும் மெட்றாசில் இல்லை, அரசு அச்சகம் இதன் அருகிலேயே வர முடியாது. ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்த பிரடெரிக் பிரைஸ் உதகமண்டலத்தைப் பற்றி மிகவும் விரிவாக ரசித்து எழுதியிருக்கிறார். 1842-ல் ஊட்டி கிளப் என்ற சங்கத்தில் யாரெல்லாம் உறுப்பினர்களாக இருந்தனர், 1858-ல் அங்கிருந்த வீடுகளின் எண்ணிக்கை 230 என்பது போன்ற விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

12 வீடுகள் குறிப் பிடத்தக்கவை. அதில் 4 வீடுகள் ஒரு ஜெஹாங்கீருக்குச் சொந்தமானவை. பிரேம்ஜி, எடுல்ஜி, மதன்னா, மூசா சேட் ஆகியோருக்கு தலா 3 வீடுகள் சொந்தம். நஞ்சப்ப ராவ், கோவிந்த ராவ், அபூ சேட், அப்துல் காதர், ராமசாமி, அய்யா முதலி ஆகியோருக்குத் தலா ஒரு வீடு இருந்துள்ளன. இவர்கள் அனைவரும் கடை வைத்திருந்த வியாபாரிகள். புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே அற்புதமான புகைப்படங்கள். இப்போது நம்மை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் சட்டங்களை இயற்றும் பணியை மெக்காலே ஊட்டியில்தான் தங்கியிருந்து இயற்றினார் என்ற தகவலும் இதில் இருக்கிறது.

ஆசிய கல்வியியல் சேவை அமைப்பு 1973 முதல், 835 தலைப்புகளில் புத்தகங்களை வெளியிட்டுள்ளது. மெட்றாஸ் டெர்சினரி வால்யூம், வீலர்ஸ் மெட்றால் இன் ஓல்டன் டைம் போன்றவை அதில் அடக்கம். 1639 முதல் 1748 வரையிலான வரலாற்றை ஜே. டால்பாய் இப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார். ஹென்றி டேவிசன் லவ், வெஸ்டிஜஸ் ஆஃப் ஓல்ட் மெட்றாஸ் என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். அவர் மெட்றாஸ் இன்ஜினீயரிங் ஸ்கூல் முதல்வராக இருந்திருக்கிறார். கிண்டி இன்ஜினீயரிங் கல்லூரியாக பின்னர் அது மாறியது. வீலர் எழுதிய புத்தகத்தில் இருந்து லவ் உத்வேகம் பெற்றார். லவ்வின் புத்தகத்தில் இருந்து உத்வேகம் பெற்று மெட்றாஸ் நகரின் 300-வது ஆண்டில் அதன் வரலாற்றை எழுதியவர் சி.எஸ். சீனிவாசாசாரி. அந்தப் புத்தகத்தை ஆசிய கல்வியியல் சேவை நிறுவனம் மேலும் 100 ஆண்டுக்கால வரலாற்றைச் சேர்த்துப் புதிய புத்தகமாக வெளியிட வேண்டும்.

திராவிட, பல்லவ காலத்தைப் பற்றி சுமார் 12 புத்தகங்களை ஆசிய கல்வியியல் சேவை நிறுவனம் கொண்டுவந்திருக்கிறது. தென்னிந்திய சாதிகளும் – பழங்குடிகளும் என்ற புத்தகத்தையும் யாழ்ப்பாணத்தின் வரலாறு என்ற புத்தகத்தையும் ஆசிய கல்வியியல் சேவை நிறுவனம் கொண்டுவந்தது. தென்னிந்திய சாதிகளும் பழங்குடிகளும் என்ற புத்தகத்தை எட்கர் தர்ஸ்டன் எழுதினார். அது மானுடவியல் ஆய் வாளர்களுக்கு உற்ற நூலாகும்.

யாழ்ப்பாணத்தின் வரலாறு என்ற புத்தகம் எம்.சி. ராசநாயகம் என்பவரால் தமிழில் எழுதப்பட்டது. 1933-ல் அது யாழ்ப்பாணத்தில் மீண்டும் மறுபிரசுரம் செய்யப்பட்டது. 1986-க்குப் பிறகு 2 முறை அது மறு பிரசுரம் கண்டது. ஆசிய கல்வியியல் நிறுவனம் ஆங்கிலத்தைத் தவிர பிற மொழிகளிலும் புத்தகங்களை வெளியிட்டது. அகராதி, இலக்கணம், தொகுப்பு நூல் என்று 400 புத்தகங்களை அது வெளியிட்டுள்ளது. வின்ஸ்லோவின் தமிழ்ப் புத்தகமும் அதில் அடங்கும். ஆப்பிரிக்க மொழிகள், துருக்கி, உருது என்று 51 மொழிகளில் அது புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது. வேறு எந்த நிறுவனத்துக்கும் கிடைக்காத வாய்ப்பாக இந்நிறுவனத்துக்குத்தான் ஏராளமான மறுபிரசுர வாய்ப்புகள் கிடைத்ததற்கான காரணம் சொல்லா மலேயே புரியும்.

- சரித்திரம் பேசும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x