

ஆங்கில ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக போர் நடத்திய புரட்சி வீரர் அல்லுரி சீதாராம ராஜு (Alluri Sitarama Raju) பிறந்த தினம் இன்று (ஜூலை 4). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே பண்டுரங்கி கிராமத்தில் (1897) பிறந்தார். மத்திய சிறையில் புகைப்பட ஊழியராகப் பணியாற்றியவர் தந்தை. அவரை சிறு வயதிலேயே இழந்தார். மொகல்லு கிராமத்தில் வளர்ந்தார்.
* கல்வியில் கவனம் செல்லாததால், பட்டப்படிப்பை பாதியில் நிறுத்தினார். 18 வயதில் துறவு மேற்கொண்டு, பல இடங்களுக்கு யாத்திரை சென்றார். இமயமலைக்குச் சென்றபோது, புரட்சி வீரர் பிருத்வி சிங் ஆசாத்தை சந்தித்தார். ஆங்கில அரசுக்கு எதிராக செயல்பட்டுவரும் புரட்சிப் படை பற்றி அவர் மூலமாக அறிந்தார்.
* விடுதலைப் போராட்டத்துக்காக தங்களையே அர்ப்பணித்துக் கொண்ட அவர்களுடன் இவரும் இணைந்தார். பம்பாய், பரோடா, பனாரஸ், ரிஷிகேஷ், பத்ரிநாத், அசாம், வங்காளம், நேபாளம் என பயணம் தொடர்ந்தது. அப்போது குதிரையேற்றம், வில், வாள் பயிற்சி, யோகா, ஜோதிடம், பண்டைய சாஸ்திரங்கள் என பலவற்றையும் கற்றார்.
* ஆங்கில ஆட்சியில் வதைபடும் மக்களின் துயரம் இவரைக் கொந்தளிக்க வைத்தது. அகிம்சை முறையைக் கைவிட்டார். உள்ளூர் அதிகாரிகளுடன் மோத ஆரம்பித்தார். அடர்ந்த காட்டுக்குள் சென்று பழங்குடியினரைச் சந்தித்தார்.
* படிப்பறிவற்ற அந்த ஏழை மக்கள் ஆங்கிலேயரால் வஞ்சிக்கப்பட்டும், சுரண்டப்பட்டும் வந்தனர். கள் இறக்குவது, விறகு வெட்டுவது தடுக்கப்பட்டதால், அதை நம்பி வாழ்ந்த ஏராளமானோர் பட்டினி கிடந்தனர். இதை எதிர்த்து, அந்த பழங்குடி மக்களில் ஒருவராக மறுவடிவம் பெற்றார்.
* பல்வேறு இன மக்களை ஒன்றுதிரட்டி, கொரில்லாப் போர் முறையில் அவர்களுக்குப் பயிற்சி அளித்தார். மக்கள் படையின் உதவியுடன் ஆங்கிலேயருக்கு எதிராக 1922-ல் முதல் தாக்குதல் நடத்தினார்.
* மூன்று காவல் நிலையங்கள் சூறையாடப்பட்டன. அங்கிருந்த ஏராளமான துப்பாக்கிகள், ஆயுதங்களைக் கைப்பற்றினர். இந்த படையை எதிர்கொள்ள முடியாமல் ஆங்கில அரசு தடுமாறியது. இது, ‘ராம்பா கலகம்’ எனப்படுகிறது.
* காவல் துறை மற்றும் ராணுவத்தை ஏவி, ராஜுவைக் கைது செய்ய அரசு உத்தரவிட்டது. அவர்களை எதிர்த்து மீண்டும் தாக்குதல் நடத்தி வெற்றிகண்டது இவரது படை. அதுமுதல், ஆங்கிலேயருக்கும், இவரது படையினருக்கும் அவ்வப்போது சண்டை மூண்டது. அனைத்திலும் இவரது படையே வெற்றிகண்டது. ஏறக்குறைய 2 ஆண்டுகள் ஆங்கில அரசை ஆட்டிப் படைத்தார்.
* பெரும் படையுடன் வந்து ஆங்கிலப் படை தாக்குதல் நடத்தியது. காடு, மலைகளில் ஒளிந்தவாறே கொரில்லாப் போர் முறை மூலம் படைகளை விரட்டி அடித்த இவர், இறுதியில் போலீஸாரிடம் பிடிபட்டார். எந்த சட்ட நடைமுறைகளையும் கடைபிடிக்காமல் ஆங்கில அரசு இவரை 1924-ல் சுட்டுக்கொன்றது. அப்போது இவருக்கு வயது 26.
* இவரது வாழ்க்கை வரலாறு ‘அல்லுரி சீதாராம ராஜு’ என்ற பெயரில் 1983-ல் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது. ஆந்திர மக்களால் இவர் ‘மான்யம் வீருடு’ (மலைவீரர்) என்று போற்றப்படுகிறார். இவரது நினைவாக அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. பல இடங்களில் இவரது உருவச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.