Last Updated : 13 Apr, 2017 11:36 AM

 

Published : 13 Apr 2017 11:36 AM
Last Updated : 13 Apr 2017 11:36 AM

சாமுவேல் பார்க்லே பெக்கெட் 10

அயர்லாந்து இலக்கியவாதி, படைப்பாளி

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற படைப்பாளியும் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான சாமுவேல் பார்க்லே பெக்கெட் (Samuel Barclay Beckett) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* அயர்லாந்து தலைநகர் டப்ளினின் புறநகர்ப் பகுதியில் பிறந்தார் (1906). போர்ட்டரா ராயல் பள்ளியில் பயின்றார். சிறந்த விளையாட்டு வீரர். டப்ளின் பல்கலைக்கழகம் சார்பாக இரண்டு முறை முதல் நிலை கிரிக்கெட் போட்டி அணியில் இடம்பெற்றார்.

* ட்ரினிட்டி கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். 1928-ல் பாரீசில் ரீடராக வேலை கிடைத்ததால், அங்கு சென்றார். அங்கே அயர்லாந்தின் பிரபல எழுத்தாளர் ஜேம்ஸ் ஜாய்ஸைச் சந்தித்து, அவரது எழுத்தாளர் வட்டத்தில் இணைந்தார்.

* 1930-ல் ட்ரினிட்டி கல்லூரியில் பிரெஞ்ச் மொழி விரிவுரையாளராக பணியில் சேர்ந்தார். பின்னர் லண்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். ஜெர்மனியில் இருந்தபோது, அங்கே நாஜிக்கள் யூதர்கள் மேல் அடக்கு முறையைக் கையாள்வதைக் கண்டு வெறுத்தார்.

* இந்தக் காலகட்டங்களில் பணியைத் தேர்ந்தெடுப்பதில் தனக்கு ஏற்பட்ட குழப்பங்கள் குறித்துத் தன் நண்பர்களுக்கு நிறைய கடிதங்கள் எழுதினார். இவை தொகுக்கப்பட்டு 2009-ல் வெளியிடப்பட்டன. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பாரீசில் ஜெர்மன் எதிர்ப்புக் குழுவில் இணைந்து செயல்பட்டார். பிரான்சை ஜெர்மனி கைப்பற்றியதும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்.

* 1945-ல் அயர்லாந்து சென்ற இவர், அயர்லாந்து செஞ்சிலுவை அமைப்பில் இணைந்து சேவையாற்றினார். பின்னர் பாரீஸ் திரும்பினார். 1929-ல் முதன்முதலாக விமர்சனக் கட்டுரைகளை எழுத ஆரம்பித்தார். தொடர்ந்து ‘அசம்ப்ஷன்’ என்ற இவரது முதல் சிறுகதை வெளிவந்தது. 1932-ல் ‘ட்ரீம் ஆஃப் ஃபேர் டு மிடிலிங் வுமன்’ என்ற தனது முதல் நாவலை எழுதினார்.

* அடுத்த ஆண்டு ‘மோர் பிரிக்ஸ் தென் கிக்ஸ்’ என்ற இவரது சிறு கதைத் தொகுப்பு வெளிவந்தது. 1947-ல் இவரது ‘எலுதெர்யா’ என்ற முதல் நாடகம் வெளிவந்தது. ‘என்ட்கேமி’, ‘கிராப்ஸ் லாஸ்ட் டேப்’, ‘ஹாப்பி டேஸ்’ உள்ளிட்ட நாடகங்கள், ‘மர்ஃபி’, ‘மொலோய்’, ‘தி அன்நேமபிள்’, ‘ஹவ் ஈஸ் இட்’ உள்ளிட்ட நாவல்கள், ‘ஈகோ போன்ஸ்’, ‘தி எக்ஸ்பெல்ட்’ உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகள், ‘ரீசன்ட் ஐரீஸ் பொயட்ரி’ உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகள் வரவேற்பைப் பெற்றன.

* ‘வெயிடிங் ஃபார் கோடாட்’ நாடகம் இவரது மாஸ்டர் பீஸாகக் கருதப்படுகிறது. தனது நாடகங்களில் சிலவற்றை இவரே இயக்கினார். வானொலிக்காகவும் கட்டுரைகள், நாடகங்கள், கதைகளை எழுதினார்.

* இலக்கியப் பங்களிப்புகளுக்காக 1969-ல் இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இலக்கியத்துக்கு இவரது மகத்தான பங்களிப்புகளுக்காக ‘எயோஸ்டனா’ என்ற அயர்லாந்து கலைஞர்களுக்கான அமைப்பு இவருக்கு ‘ஸாவோய்’ என்ற உயரிய கவுரவம் அளித்தது.

* இலக்கியத்தின் பல்வேறு களங்களில் முத்திரை பதித்த இவரது பெயர் பிரான்சிலும் அயர்லாந்திலும் பல பொது இடங்களுக்குச் சூட்டப்பட்டன.

* தனது நாட்டின் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தவரும் நாவலாசிரியர், நாடகாசிரியர், நாடக இயக்குநர், விமர்சகர், கவிஞர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டவருமான சாமுவேல் பார்க்லே பெக்கெட் 1989-ம் ஆண்டு 83-வது வயதில் மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x