

எவராவது
வந்து
சூட்டிவிட்டுப் போங்கள்
மகுடத்தை..
என் தலை காலியாய்த்தான்
இருக்கிறது
வெளியேயும் உள்ளேயும்.
எவராவது வந்து
மாலையிட்டுப் போங்கள்
நாறிக்கிடக்கிறது
என் புறமும் அகமும்.
எவராவது
புகழ்ச்சிகளைப்
பிசைந்துவைத்த சொற்களைப்
போட்டுவிட்டுப் போங்கள்
என் பிச்சைப்பாத்திரத்தில்.
சோறில்லை என்றாலும்
பரவாயில்லை.
பேரில்லாமல் எப்படித் திரிவது?
எவராவது வந்து
அப்பாவிகளை
அடையாளங்காட்டுங்கள்.
சவாரி செய்து
நாளாயிற்று எனக்கு.
எவராவது
என்னையும் தலைவனாய்
ஏற்றுக் கொள்ளுங்கள்.
ஒரு
கட்சி... கிட்சி இல்லாமல்
எப்படிக்
காலம் கடத்துவது?
காறித் துப்புகிறீர்களா?
துப்புங்கள்...
துடைத்தபடி உங்களுக்கும்
கும்பிடு போடுகிறேன்.
"மனுசனா நீ?"
என்கிறீர்களா?
கேட்டுக்கொண்டேயிருங்கள்.
மனுசன்னா
மானம்னு ஒன்னு வேணுமே
ஹி… ஹி... ஹி...
என்ன செஞ்சு தொலைக்க?
தலையை அரிக்குதே
மகுடத்துக்கு... மகுடத்துக்கு
மனசு அரிக்குதே
பேருக்கு…பேருக்கு...!